வட மாகாண பொருளாதார அபிவிருத்திக்கு விசேட கடன் திட்டம்!

வடக்கின் பொருளாதாரத் துறைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘வடக்கின் எழுச்சி ’ விசேட கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். வடக்கில் விவசாயம், கால்நடை, கடற்றொழில் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளைக் கட்டியெழுப்ப வசதியாக இப்புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் துரிதமாக மேம்படுத்தவும் இது வழிவகுக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக வங்கிகளின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கித்துறையினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இலங்கை மத்திய வங்கியின்  ‘வடக்கின் எழுச்சி ’ கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். இக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தகுதியெனக் கருதும் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலகு வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கென 3.000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனளிப்பதற்காக அவற்றை மாற்ற வழிவகை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் வருடாந்த நெல் உற்பத்தியில் பத்துவீதம் வடக்கிலிருந்தே கிடைக்கின்றன. வெங்காயம்,  மிளகாய்,  பயறு,  நிலக் கடலை உட்பட பல்வேறு பயிர்ச் செய்கைகளிலும் வட மாகாணம் சிறந்து விளங்குகிறது.

நாட்டில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 வீதமானோர் வடக்கைச் சார்ந்தவர்கள். அங்கு 219 மீனவர் கிராமங்கள் உள்ளதுடன் 1.29.000 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *