செய்திகள்
செய்திகள்
செய்திகள்
ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட முதலாவது எச்.ஐ.வி/ எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாப்பிரிக்கா ஆய்வூகூடத்தில் ஆட்களுக்கு ஏற்றி பரிசோதிக்கிறது. இந்த மாதத்தில் இந்த பரிசோதனைக்காக 36 தொண்டர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்டன.
தென்னாப்பிரிக்காவில்தான் உலகின் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை வெற்றிபெற்றாலும், இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குவர இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மாவட்டத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களான 28ஆயிரத்து 473குடும்பங்களைச் சேர்ந்த 1லட்சத்து 12ஆயிரத்து 56பேரை மீள் குடியமர்த்துவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தின்பேரில் அடிப்படை வசதிகள் தொடர்பான மதிப்பீடு, சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள், வீதிகள் ஆகியவற்றின் விபரங்கள் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசஅதிபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள கிராம வீதிகளை புனரமைப்பதற்காக 125மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உடனடியாக கிராம வீதிகளை திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லத்தீவு மாவட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஆர்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். பஸ் டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை தமது தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,
வட பகுதி போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் யாழ். பஸ் டிப்போ இன்றும் இரு தினங்களில் முன்மாதிரி டிப்போவாக தரம் உயர்த்தப்படும். அதனை முன்னி;ட்டே 50 பஸ் வண்டிகளும் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் யாழ் – கொழும்பு, யாழ் – கண்டி, யாழ் -புத்தளம், மற்றும் யாழ் – அநுராதபுரம் புதிய பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். மேலும் ஏ 9 வீதியினூடாக இலங்கை போக்குவரத்து சபை பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தேடுதலின்போது 25,000 லீடர் பெற்றோல் மற்றும் 9 பெரல்கள் அடங்கிய இன்ஜின் ஒயில் என்பன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
படையினருக்குக் கிடைத்துவரும் இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவினர் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த எரிபொருட்கள் கடற்புலிகளின் தேவைகளுக்காக ஆனந்தபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் தொடர்ந்து நடைபெறுவதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்
ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அருகில் இருக்கும் காவல்துறை நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில உயர் காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பம் அல்லது லஞ்சம் பெற்றுக் கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள உலகக் குழுவினரைப் பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கோதபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
முதற் தடவையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் சொந்தமாகக் காணிகள் வழங்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்னவின் தோட்டக் கிராம ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகக் காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் தோட்டப் பகுதிகளில் தற்காலிக வசிப்பிடங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் வீதம் காணிகளை வழங்கி அதற்கான நிரந்தர அனுமதிப் பத்திரங்களும்; வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கண்டி மாவட்டத்தில் கம்பளை தேர்தல் தொகுதியில் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் காணிகள் உள்ள பகுதிளுக்கு குடி நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி உட்பட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகை;கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஜயரத்ன தெரிவித்தார்
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கே யாழ்ப்பாணத்தில் சகல அத்தியாவசியப் பொருட்களையும் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தமிழ் மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில், கொழும்பு விலைக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திலும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகின்றது.
யாழ். வர்த்க சமூகத்துடன் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இரு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
கொழும்பிலிருந்து பொருட்களை ஏ 9 வீதியூடாக யாழ். கொண்டுவரும்போது விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என யாழ் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட்டு படைத்தரப்பினருடன் பேசி அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, கொழும்பு மாவட்ட முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆகியேர் உட்பட முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மறைந்த பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன் குழந்தைகள் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாக்ஸனுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்; நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜாக்ஸனின் இரண்டு குழந்தைகளுக்கு தாமே தந்தை என அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக தோல் நோய் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஆர்னால்ட் கெலின் கூறியுள்ளார்.
ஜாக்சனின் மூன்று குழந்தைகளில், மூத்த இரண்டு குழந்தைகளான பிரின்ஸ் மைக்கல் (வயது 12) மற்றும் பாரிஸ் (வயது 11) ஆகியோருக்கு நானே உண்மையான தந்தை. அதனால், அவர்களை என் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமது வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரின்ஸ், பாரிஸ் இருவரும் ஜாக்ஸனின் மனைவியான டெப்பி மூலம் தமக்குப் பிறந்தவர்கள். எனவும் கூறியுள்ளார். அவர்கள், என் குழந்தைகள் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜாக்ஸனின் இரண்டாவது மனைவியான டெப்பி ரோவே, 1996ம் ஆண்டில் டாக்டர் ஆர்னோல்ட் கெலினிடம்; தொழில் புரிந்துள்ளார். அப்போது தான் ஜாக்ஸன் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
40 வருடங்களுக்கு முன்பு அதாவது 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினையும் சுமந்துகொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது.
நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ரோங் பெற்றுக் கொண்டார். இப் பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது. சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று – ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத்திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டம்.
ஜோன் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் வெளிவரத்தான் செய்தன.
அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளித் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் நிறைவேறியது. சந்திரனில், பாதம் பதித்த முதல் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளை தொடர்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39A ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.
சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது, பெருமைக்குரிய தருணம் அது என்றார்
சந்திரனில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அங்கு இருந்தனர். நிலவில் மாதிரி மண்ணை எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது. நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர்.