செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து படகு இயந்திரங்கள ஆயூதங்கள் மீட்பு – இராணுவப் பேச்சாளர் தகவல

udaya_nanayakkara_brigediars.jpgநான்கு படகு இயந்திரங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு,  அம்பகாமம் பிரதேசங்களில் இராணுவத்தின் விஷேட அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே மேற்படி ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் புதுக்குடியிருப்பின் ஐந்து பிரதேசங்களில்; தேடுதல்களை மேற்கொண்ட போது,  ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் 6 பெட்டிகள்,  தேசிய அடையாள அட்டைகள்- 29, ரெலோ அடையாள அட்டை- 01, புலிகளின் அடையாள அட்டை – 02,  பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள்-1.700,  கையடக்க தொலைபேசிகள்- 07,  இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்,  கைக்குண்டுகள்- 04 மற்றும் படகுகளுக்கும் பொருத்தப்படும் வெளிஇணைப்பு இயந்திரங்கள்- 04 என்பவற்றை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை அம்பகாமம் பிரதேசத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள்- 1.042, கைக்குண்டுகள்- 10 மற்றும் பெருந்தொகையான மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

ஐந்து வெவ்வேறு ரக வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த சம்பவம் நேற்று கொஹுவலையில் இடம்பெற்றுள்ளது.

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுனு வீதியில் வைத்தே நேற்று மாலை 5.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்களும் இரண்டு லொறிகளும் வான் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டுள்ளன. இதில் 05 வாகனங்களும் சேதமாகியுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐவரும் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் வைத்தியசாலை – வடக்கின் வசந்தம் திட்டம் மூலம் நடவடிக்கை

north-governor.jpg
யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட கொழும்பிலுள்ள லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு நிகரான சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பது தொடர்பாக வடக்கின் வசந்தம் இடண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரஸ்ரீ தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் வசந்தம் இரண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

80 மில்லியன் ரூபா செலவில் 100 படுக்கை அறைகளுடன் கூடிய இந்த சிறுவர் வைத்தியசாலையை எங்கு அமைக்கலாம் என்பது குறித்தும் ஆளுநர் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திகளுக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்ட ஆளுநர், எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்காக முன் மொழியப்பட்டிருக்கும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி பற்றியும் பேச்சு நடத்தினார்.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ், பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி,  ஆளுநரின் செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் உள்ளிட்ட பல அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தின் சர்ச்சையான விடயங்களை நீக்க உடன்பாடு – பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணக்கம்

அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் உட்பட உத்தேச தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு முன்மொழியப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்குவதற்கு தேர்தல் சட்டதிருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு இணக்கப்பாடு கண்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோது அரசியல் கட்சிகளால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்குவதற்கும் திருத்தச் சட்ட மூலத்தை புதிதாக தயாரித்து முன்வைப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் பலர் இச் சட்ட மூலத்தால் ஏற்படக் கூடிய பாதகங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி திருத்தங்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்காமல் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதானது சம்பிரதாயத்தை மீறி திருத்தங்களை திணிப்பதாகவே காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். இதே அடிப்படையில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரணவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனைக் கருத்திலெடுத்த தெரிவுக்குழு சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்கிவிடுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. அத்துடன், திருத்தங்கள் மீள வரையப்பட்டு புதிய சட்டமூலமாக தயாரித்து தெரிவுக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற யோசனையையும் தெரிவுக்குழு இணக்கம் கண்டுள்ளது.

இன, சமய ரீதியிலான பெயர்களைக் கொண்டு புதிதாக கட்சிகளை அமைப்பதற்கே சட்டதிருத்தம் வரையப்பட்டதாகவும் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு பாதகம் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியபோது அதனை கடுமையாக எதிர்த்த ரவூப் ஹக்கீம், டி.யூகுணசேகர, திஸ்ஸ விதாரண போன்றோர் அதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாமென விளக்கியதையடுத்து சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்கிவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, சட்டமா அதிபர் மொஹான் டி.சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ்பிரேமச்சந்திரன், மலையக மக்கள் முன்னணி எம்.பி. பி.இராதாகிருஷ்ணன், அமைச்சர் பி.தயாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமைக்கு முரணாகவும் ஜனநாயக ரீதியான கொள்கை அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதை தடைசெய்யும் முயற்சி இதுவெனவும் இதே அடிப்படையில் பல்வேறு திருத்தங்களில் பல்வேறு பகுதிகளும் காணப்படுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகளின் உள்விவகாரங்களில் அளவுக்கு மீறி தலையிடுவதாக சட்டதிருத்தம் அமைந்துவிடக் கூடாது. அத்துடன் இன,மத, ரீதியான பெயர்களில் உருவாகும் கட்சிகளை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்கள் சார்ந்த விடயமாவதால் அதில் அமைப்புகளோ, தனி நபர்களோ தலையிடக் கூடாது. தொடர்ந்து செயற்படாத கட்சிகள் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகள் எட்டப்படவும் கூடாது. விரிவாக ஆராயப்படுவதோடு அக் கட்சிகளுடன் பேசப்படவும் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம் உதாரணத்துக்கு 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படிப் பார்க்கும்போது முதலில் தடை செய்யப்படவேண்டிய கட்சி சுதந்திரக் கட்சியாகும் எனவும் எடுத்துக் காட்டினார்.

அத்துடன் இதனால் பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகளும் பாதிக்கப்படலாம். கட்சிகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைச்சாத்தியம் குறித்தும் ஆராயப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்தே சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்குவதற்கு தெரிவுக்குழு உடன்பாடு கண்டது.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்போது தெரிவுக்குழு எட்டியுள்ள உடன்பாடுகளை சட்டமா அதிபர் நீதிமன்றில் முன்வைக்க முடியுமென தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய திருத்தச் சட்ட மூல அறிக்கையை அடுத்த தெரிவுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அதனை தெரிவுக்குழு அங்கீகரித்ததன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான சொகுசு பஸ் சேவை

bus_luxury.jpgயாழ்ப் பாணத்தில் இருந்து கொழும்புக்கான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்கு 1950 ரூபா இந்தப் பயணத்திற்கு கட்டணமாக அறவிடப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரும் இந்த சொகுசு பஸ் வண்டிகளில் வவுனியா ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பயணிகளிடம் யாழ்ப்பாணத்திற்கு கட்டணமாக 950 ரூபா அறவிடப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கு கப்பல் அல்லது விமானம் மூலமாக அனுமதி பெற்று பிரயாணம் செய்தவர்களே யாழ் – வவுனியா பஸ் சேவைகளின் மூலம் யாழ்ப்பாணத்திற்குப் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குப் பிரயாணம் செய்ததற்கான கப்பல் அல்லது விமான டிக்கட்டின் போட்டோ பிரதியும் பயணியின் அடையாள அட்டை பிரதியும் இந்தப் பிரயாணத்திற்கு கோரப்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது

கம்பஹா பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்ட எஸ்.பி.லக்ஷ்மன் குரே பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே கம்பஹா பொலிஸ் பிரிவில் கடமைகளை பொறுப்பேற்க முன்னர் யாழ்ப்பாணம் பிரிவு மூன்றின் உத விப் பொலிஸ் அத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ரஞ்சித் அலுவிகார பா.உ.

ranil0111.jpgஎதிர் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் எனவும், அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் குறித்து இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும்  மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார கூறினார்.
 
கலேவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள ஐ.தே.கட்சிக் கிளைகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிலைப்படுத்தி அதில் வெற்றியை எதிர்பார்த்து அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது அரசாங்கத்தின் சுலபமான காரியமாகாது.  ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் தொடர்பாக இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அலுவிகார கூறினார்.

யுத்த வெற்றியைக் கொண்டாடியவாறு நாட்டின் பாரிய பல பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேர்தல்களை நடத்திவரும் ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது ரணவிரு உபஹார என்று இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வைபவங்களை பிரதேச செயலக மட்டங்களில் நடத்தி மக்களின் கவனத்தை அதன்பால் ஈர்க்க முயற்சித்து வருகின்றது.  தொடர்ந்து கிராம சேவகர் பிரிவுகள் தோறும் இத்தகைய இராணுவ வீரர்களைப் பாராட்டும் வைபவங்களை இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு அரசாங்கம் நடத்தும். அதன் பிறகுதான் நாட்டில் விஸ்வரூபமெடுத்து வரும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படப் போகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இத்தகைய விழாக்களைக் கொண்டாடி மக்களது அன்றாடப் பொருளாதார பிரச்சினைகளுட்பட ஏனைய பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனைகளுடனான பாரிய கடன்தொகையை அரசாங்கம் கட்டம் கட்டமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இவற்றை எவ்வாறு எந்தெந்தத்துறைகளில் செலவிட வேண்டும் போன்ற நிபந்தனைகள் பலவும் உள்ளன. இப்பாரிய கடன்தொகையை மீளவும் செலுத்த முடியாத நிலையில் நாட்டில் வரிச்சுமைகள் அதிகரிக்கும். தனியார் மயமாக்கல் அதிகரிக்கும். எனவே, டிசம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

அந்தமான் அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை நகரிலும் இன்று கட்டடங்கள் குலுங்கின. அந்தமான் அருகே கடல் பகுதியில் இன்று பகல் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடையாறு, தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உணர முடிந்தது.

இந்த நிலநடுக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் 8 மாடிக் கட்டடம் குலுங்கியதால் அதிலுள்ள அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். அதே போல தி.நகர், அடையாறு உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சி தான் (aftershock) இன்றைய நிலநடுக்கம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அதிகாரி கோபால் கூறினார்.

கே.பி. கைது சர்வதேச சட்டத்திற்கு முரண் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

pathmanathan.jpgவிடு தலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.  செல்வராஜா பத்மநாதனின் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரிபி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;

எந்தவொரு நாடென்றாலும் புலி உறுப்பினர்களை கைதுசெய்திருந்தால் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்ட நாட்டில் அவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலங்கைக்கு செல்வராஜா பத்மநாதனை கையளித்ததன் மூலம் சர்வதேச சட்டத்தை மலேசியா மீறியுள்ளதாக மனித உரிமை பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்ற சந்தேக நபர் உட்பட எவரையும் திருப்பி அனுப்புவதை சர்வதேச சட்டம் தடுக்கிறது. திருப்பி அனுப்பப்படும் நாட்டில் தவறாக நடத்தப்படுதல் தொடர்பான சாத்தியப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சர்வதேச சட்டம் அதனை தடுக்கிறது என்று ஷரிபி கூறியுள்ளார்.

ஆதலால், கே.பி. எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது தொடர்பான சில உண்மையான கேள்விகள் உள்ளன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கே.பி. மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டாரா இல்லையா என்பது பற்றி அந்த நாடு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

கே.பி. தொடர்பாக உரிய நீதியும், உரிய நடவடிக்கைகளும் இடம்பெறுவதை பார்க்க நாம் விரும்புகிறோம் என்று சாம் ஷரிபி கூறியுள்ளார்.

வவுனியா நகரில் தற்கொலைத் தாக்குதலுக்கான உபகரணங்கள் கண்டுபிடிப்பு

suicide_jacket.jpgவவுனியா நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியது என்று சந்தேகிக்கப்படும் 3 டைமர்களும், 3 ரிமோட் கண்ரோல்களும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இவை கண்டுபிடிக்கப்பட்டு, படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற அங்கியொன்றில் பொருத்தப்பட்ட நிலையில் இந்த டைமர்களும், ரிமோட் கண்ரோலர்களும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் போடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து, இரண்டாம் குறுக்குத் தெருவின் அப்பகுதி போக்குவரத்தைத் தடை செய்தனர்.

குண்டுகளைச் செயலிழக்கும் படையினர் வந்து இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதன் பின்னர் இந்த வீதியின் ஊடான போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.