விடு தலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது. செல்வராஜா பத்மநாதனின் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரிபி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;
எந்தவொரு நாடென்றாலும் புலி உறுப்பினர்களை கைதுசெய்திருந்தால் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்ட நாட்டில் அவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு செல்வராஜா பத்மநாதனை கையளித்ததன் மூலம் சர்வதேச சட்டத்தை மலேசியா மீறியுள்ளதாக மனித உரிமை பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்ற சந்தேக நபர் உட்பட எவரையும் திருப்பி அனுப்புவதை சர்வதேச சட்டம் தடுக்கிறது. திருப்பி அனுப்பப்படும் நாட்டில் தவறாக நடத்தப்படுதல் தொடர்பான சாத்தியப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சர்வதேச சட்டம் அதனை தடுக்கிறது என்று ஷரிபி கூறியுள்ளார்.
ஆதலால், கே.பி. எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது தொடர்பான சில உண்மையான கேள்விகள் உள்ளன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கே.பி. மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டாரா இல்லையா என்பது பற்றி அந்த நாடு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
கே.பி. தொடர்பாக உரிய நீதியும், உரிய நடவடிக்கைகளும் இடம்பெறுவதை பார்க்க நாம் விரும்புகிறோம் என்று சாம் ஷரிபி கூறியுள்ளார்.