செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு இரண்டாம் இடம்.

srilanka0000.jpgசர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின்படி இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக சம புள்ளிகளைப் பெற்று இந்தியாவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த இலங்கை,  நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-0 எனும் விகிதத்தில் வெற்றியீட்டியதன் மூலம் மேலதிகமாக ஒரு புள்ளியைப் பெற்று இரண்டாம் ஸ்தானத்தை அடைந்துள்ளது.
 
ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசையின்படி 122 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா தொடர்ந்தும் முதலாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இலங்கை 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் 119 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளை,  கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னானாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலிய அணி நீண்ட காலத்துக்குப் பின் 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்வியே அவுஸ்திரேலிய அணி பின்வரிசைக்குச் செல்லக் காரணமாகும்.

இலங்கை அணி எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் திறமையாக விளையாடி தொடர் வெற்றிகளை ஈட்டும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

japan-new-pri.jpgஜப்பானின் புதிய பிரதமராக இன்னும் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர்  யுகியோ ஹடோயாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அச்செயதியில் குறிப்படப்பட்டுள்ளதாவது, உங்கள் தலைமையில் ஜப்பானில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர். நீங்கள் அடைந்துள்ள வரலாற்று வெற்றியானது ஜப்பானில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழியமைக்குமென நம்புகிறேன்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையில் பல நூற்றாண்டு கால சரித்திர மற்றும் கலாசாரத் தொடர்புகள் உண்டு. எமது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஜப்பான் வழங்கிய தாராள உதவிகளுக்கான நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என நம்புகிறேன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்டியில்

daladamaligawa.jpgஅடுத்த தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருல) கண்காட்சி மலைநாட்டின் தலைநகரமான கண்டியில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்கானிப்பில்  இந்நக் கண்காட்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சர்வதேச பௌத்த மத்திய நிலையமான பல்லேகெல  என்ற இடத்தில் இடம்பெறும்.
பல்லேகெல மத்திய நிலையம் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டமைந்துள்ளது. கண்னொருவையிலுள்ள புதிய வளஅபிவிருத்தி மத்திய நிலையத்தில் பிரதிநிதி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாப்பிட்டிய தலமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்த இடம் கண்காட்சி நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது. 

இக்கண்காட்சியில் புலிகளை தோற்கடிக்கப்பயண்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களும் பார்வைக்கா  வைக்கப்படவுள்ளன.  தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தேசிய மட்டத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நோர்வேயில் ‘தீராத மயக்கத்திலே’ நூல் வெளியீடு

ஈழத்து கலைத்துறையில் மூன்று தசாப்தங்களாக அறியப்பெற்ற கார்மேகம் நந்தாவின் மெல்லிசைப் பாடல்களின் தொகுதியான தீராத மயக்கத்திலே என்ற நூலின் வெளியீடும் அவரது தேர்ந்த மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பான குறுந்தட்டு வெளியீடும் நோர்வேயில், ஒஸ்லோ நகரில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை செப்டெம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் லண்டனிலிருந்து நூலகவியலாளர் என்.செல்வராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
 
1973இல் இலங்கை வானொலியில் இணைந்த கார்மேகம் நந்தா, 1987இல்  புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். இவர் 1977 முதல் 2008 வரை எழுதிய பாடல்களில் தேர்ந்த 170 பாடல்களை தீராத மயக்கத்திலே என்ற நூல் கொண்டுள்ளது.

இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடை விதிக்கும் விவகாரம்: மனு தாக்கல்

indian-cricket-team.jpgஇலங் கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த மனு, இன்றைய தினம்,   சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழுவினர்,  இது குறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவு செயலர், விளையாட்டு துறை செயலர், கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அபிவிருத்தியின்றி சமாதானம் இல்லை – ஜனாதிபதி

pr-mahi.jpgஅபிவிருத் தியின்றி சமாதானம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகங்களுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திய ஒரு தலைவராக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ ‘போப்ஸ்’; சஞ்சிகைக்கு வழங்கிய விசேட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இப்பேட்டியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

யுத்தம் முடிந்து விட்டது. இனி நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்லும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். நான் முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவேன். நான் மக்களை சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள்,  பரங்கியர் என வேறுபடுத்திப்பார்க்க விரும்பவில்லை. நான் அவர்களை நாட்டை நேசிப்பவர்கள் என்றும் நாட்டை நேசிக்காதவர்கள் என்றுமே வேறுபடுத்திப் பார்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேவையான சந்தர்ப்பங்களில் தான் தமிழிலும் பேசுவதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களது சொந்த மொழியிலேயே பேசுவதன் மூலம் அவர்களோடு மிக நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ போர்க்கால சூழ்நிலையில் கூட நாட்டின் பொருளாதாரம் வருடாந்தம் ஆறு வீத வளர்ச்சியைக் கண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 11 வீதமாக இருந்த பணவீக்கம் 1.1 வீதத்திற்குக் குறைவடைந்துள்ளதாகவும் தலாவீத வருமானம் 1200 டொலர்களில் இருந்து 2000 டொலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணி;ப்புபற்றி குறிப்பிட்ட அவர் நாம் எமக்கேயான இலங்கை மாதிரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதையே நான் விரும்புகின்றேன். உணவில் நாம் தன்னிறைவு அடைய முடியுமாக இருந்தால் கைத்தொழில் துறையில் தானாகவே முன்னேற முடியும். என்றும் குறிப்பிட்டுள்ளார்;.

கடைசிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவப்பட்டபோதுää நாம் ஆபிரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ நடந்தவற்றை பின்பற்றவில்லை. கடந்துபோனவற்றை தோண்டிக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்றே நான் நினைகிறேன். நாம் கடந்துபோனவற்றை மறந்து புதியதோர் வாழ்க்கையை புதிய சிந்தனைகளை ஆரம்பிக்க வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஜனாதிபதிக்கு உதவத் தயார் : இரா.சம்பந்தன்

sampanthan-1111.jpgஇனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாம் ஜனாதிபதிக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  அதற்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் பேர் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் அவர் கோரியுள்ளார்.  இலங்கையின் இனப்பிரச்சினையானது அனைத்து சமூகமும் அமைதியாக வாழும் வகையில் தீர்க்கப்படவேண்டும் என இதன் போது சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

லியாம் பொக்ஸுடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த அவர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதிக்கு உதவுமாறு லியாம் பொக்ஸ் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்தின் சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா அதிருப்தி

tissanayagam333.jpgஊடக வியலாளர் திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஏற்கனவே திஸ்ஸாநாயகத்தின் கைது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்துரைத்திருந்த நிலையிலேயே இந்த புதிய கருத்தை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி கொள்வதாகவும் தொடர்ந்தும் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஊடகவிலாளர் திஸ்ஸாநாயகம் சிறைத் தண்டனைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் அவருடைய உடல் நலன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரொபட் வூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்ட வேளையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திஸ்ஸாநாயகத்தின் கைது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தார்.  தமது பணிகளைச் செய்யும் போது குற்றவாளியாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, திஸ்ஸாநாயகத்தை உதாரணம் காட்டிப் பேசியுமிருந்தார்.

சனல் 4 காணொளி எதிரொலி: இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப தயக்கம்

ExtraJudicialKillingsஇலங் கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகும் காணொளி வெளியானதையடுத்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல தயக்கம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
1983 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதல் அண்மைக்காலம் வரை அடுத்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில், இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர்களில் பலர் இலங்கைக்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கைப் படையினர் தமிழர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சனல் 4  வீடியோ காட்சி வெளியானதையடுத்து, இந்த அகதிகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்கள். தாம் தொடர்ந்தும் தமிழகத்தில் வாழ்வதையே விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அகதி முகாம்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

sri-lanka-tea.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.  இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.

இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.