செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எந்தவொரு நாட்டுக்கும் தலைவணங்காத நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maithripalasirisena.jpgஉலகில் வேறு எந்த நாட்டுக்கும் தலைவணங்காத கெளரவமிக்க நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஓரிரு வருடங்களில் இது சாத்தியமாகுமென தெரிவித்த அமைச்சர், புதிய அரசியல் பரிமாணமொன்றைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.பி.யினர் வெற்றியை எதிர்பார்க்க மாட்டார்கள். தாம் வெற்றிபெறப் போவதில்லை என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தென் மாகாண சபையில் போட்டியிடும் அபேட்சகர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை 80 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்வது அம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பொறுப்பாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் பல வரலாற்று வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ள மாவட்டமாகும். இம்மாவட்டம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த யுகமொன்றும் வரலாற்றில் இருந்துள்ளது. சர்வதேச ரீதியிலும் பல நாடுகள் சிதைந்துபோன வரலாறுகள் உள்ளன. இதற்குக் காரணம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே ஆகும்.

பயங்கரவாதத்தினால் எமது நாடு ஒரு துன்ப வரலாற்றை சந்திக்க நேர்ந்தது. அது நாடு துண்டாடப்பட்டதொரு யுகம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அத்தகையதொரு யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பும் முக்கிய காரணமாகும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பு அவசியம்.  இதன் மூலமே சர்வதேச எதிரிகளுக்கும் எம்மால் பதில்கொடுக்க முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்நிகழ்வில் உரையாற்றுகையில், அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்ய முடியாத பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டதால் உலக நாடுகள் அனைத்தும் அவரைப் புகழ்கின்றன.

தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.யினரின் விமர்சனங்கள் வெறும் புஸ்வானமே. அவர்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப் 9 வது ஞாபகார்த்த தினம் இன்று

mhmasraf.jpgமு. கா. வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரபின் 9 வது ஞாபகார்த்த தினம் இன்றாகும்.

இதனையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று புத்தளம் நகர சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

150909puttalam-wab.jpgபுத்தளம் நகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  ஆசிய பவுண்டேசனின் அனுசரணையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி தலைமையில் புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர சபையின் பணிகள் குறித்து மக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.

‘puttalamucp@yahoo.com’ என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு புத்தளம் நகர சபையின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் சாம்பியன் பட்டம்; ஆர்ஜென்டினா வீரர் வசம்

160909.jpgஅமெரிக்க  கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டெனிஸ் சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ கைப்பற்றினார்.
 
நியூயார்க்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். ஃபெடரர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தால் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்திருப்பார்.

இதற்கு முன்னர் யு.எஸ். ஓபனில் தான் பங்கேற்ற 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருந்தார் ஃபெடரர். ஆனால் 41-வது ஆட்டத்தில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மேலும் இதற்கு முன்னர் ஃபெடரர் – டெல் போட்ரோ மோதிய 6 ஆட்டங்களில் ஃபெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

அனுபவமிக்க வீரராக இருந்தும் டெல் போட்ரோவின் அற்புதமான ஆட்டத்தின் முன் ஃபெடரர் தோல்வி கண்டார்.

முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறி வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ.

மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார்

150909navifora.jpgமனிதவு ரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
இதன்போது, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
 
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முனைப்புகள் குறித்து அவர் இதன்போது, நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் நடத்தியது குறித்து அதை தாம் வரவேற்பதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல்

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் 

242 கிலோ வெடிமருந்துகள், 6733 துப்பாக்கிரவைகள் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg242 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 56 கிலோ எடையுள்ள 11 கிளேமோர் குண்டுகள், 6733 பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் தாராவிக்குளம் பிரதேசத்திலிருந்தே இந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிழக்கில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 232 வது படையணியினர் தாராவிக்குளம் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரதேசத்திலிருந்து ஒவ்வொன்றும் 27.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் 04 (இதன் மொத்தத் தொகை 110 கிலோ) ரி-56 ரக ரவைகள் – 2250, வெடிக்கவைக்கும் கருவிகள் – 4000 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் புலிகளால் கைவிடப் பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொ கையான ஆயுதங்களை இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் மீட்டெ டுத்துள்ளனர்.

132 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 10 கிலோ எடை யுள்ள வெடிமருந்து தூள்கள், 16 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 5 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் -07 (இதன் மொத்தத் தொகை 56 கிலோ) வாகனங்களுக்கு பொருத்தக் கூடிய தற்கொலை குண்டுகள் – 19, தற் கொலை அங்கிகள் – 57, 9 மி.மீ. பிஸ்டல் ரவைகள் – 4409, வெடிக்கவைக்கும் கரு விகள் – 1219, 82 மி. மீ. மோட்டர் குண்டு கள் – 132 மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் : பெப்ரல்

தேர்தல்களில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பொது, மாகாணசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கட்சிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,  “உடல் அழகு அல்லது பண செல்வாக்கைக் கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்ட எடுக்கப்படும் முனைப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல.

பொருளாதார ரீதியில் வலுவிழந்த ஒரு வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலைமை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச தகுதி நிர்ணயிக்கப்படும் வரையில் அரசியலில் இந்த ஏற்றத் தாழ்வு தொடரவே செய்யும். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகள் உடல் வசீகரம், பண பலம், பிரபல்யம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றன.

சில நாடுகளில் தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை கூட வரையறுக்கப்பட்டே உள்ளது. பங்களாதேஷில் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்து டாக்காக்களை மட்டுமே செலவிட முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது”

இலங்கை கிரிக்கெட் வீரர் தாக்குதலில் தொடர்பா? பத்மநாதனை விசாரிக்கை பாகிஸ்தான் முடிவு

pathmanathan.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தங்கள் நாட்டு அரசு சந்தேகிப்பதால் செல்வராசா பத்மநாதனை விசாரிக்க பாகிஸ்தான் பொலிஸாரை அனுப்ப பாகிஸ்தான் அரசு தீர்மானித்தள்ளது. அதன் விபரம் வருமாறு:-

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் இருந்து இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் இலானி தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்தே பத்மநாதனிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஆர்வம் காட்டுகிறது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் தனது புலனாய்வுக் குழு ஒன்றை விரைவில் கொழும்புக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதகுரு கொலை – சந்தேக நபர் கைது

_arrested.jpgயக்கல குருவிட்டிய விகாரையில் வைத்து பௌத்த மதகுரு ஒருவர், 2009.03.02 அன்று மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேற்படிக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வண. கமருதே பியசிறி ஆமு என்ற பௌத்த மதகுருவே இவ்வாறு வெட்டி கொலைசெய்யப்பட்டவராவார்.