செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை – கல்வியமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹ¤சைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

இதன் செயலாளராக கலாநிதி ஹஜர் ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார். 2007ம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை : பேராசிரியர் சிவத்தம்பி

24prof-karthgesu.jpgதமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து,  இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள்,  இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.  ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக் கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முரண்படுகிறார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நன்றி: வீரகேசரி 25.10.2009

நிவாரண கிராமங்களிலிருந்த 23,388 பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் மீள் குடியேற்றம். 3000 பேர் இன்றும் யாழ். வருவர் – அரச அதிபர் கணேஷ்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 23 ஆயிரத்து 388 பேர் (23,388) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்தார். 7,414 குடும்பங்களைச் சேர்ந்த 23,388 பேர் நேற்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணம் வர இருக்கிறார்களென்றும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 44,000 பேரை அனுப்புவதாக ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 50 வீதமானவர்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் தினமும் கட்டம் கட்டமாக பஸ்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கமைய இன்றும் 3000 பேர் யாழ். வந்து சேர்வார்களென அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விசேட பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் வரும் இந்த மக்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபா அவர்களது கணக்கில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதைவிடவும் யு. என். எச். சீ. ஆர். வழங்கும் நிவாரணப்பொதிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு சொந்த இடங்களும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்துவரும் மக்களை பொறுப்பேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், அரசாங்க உயர்மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாதோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு வார காலத்தினுள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரச அதிபர் கணேஷ் தெரிவித்தார்

இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை – பெயரை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அரசியல் நடத்த முனைவோருக்கும் அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவோருக்கும் எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசியலில் ஈடுபடும் நோக்கமுள்ள சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் அடிப்படையற்ற செய்திகளில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க ப்பட்டுள்ளதாக வும், அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் அரசியல் இலாபத்திற்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பெற்றோலிய கூ. தா. ஊழியர் பிரச்சினை: ஜனாதிபதி 26ம் திகதி ஊழியர்களுடன் பேசுவார் – சபையில் பெளஸி தகவல்

0000fawzi_minister.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டுத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவாரென்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவித்த அமைச்சர் பெளஸி, அதுவரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தைக் கைவிடுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி யொன்றுக்கு அமைச்சர் பெளஸி பதில் அளித்தார்.

தற்போது சட்டப்படி வேலை செய்யும் ஊழியர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கியுள்ளதாகக் கூறிய அவர், ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகம் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஆசிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஆசிய ஒன்றியம் ஒன்றின அவசியம் பற்றி ஆசிய தலைவர்கள் மாநாட்டில் இன்று (ஒக்ரோபர் 24ல்) உரையாடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசிய நாடுகள் அண்மைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விரைவில் மீண்டதை சாதகமாகக் கொண்டு கிழக்காசிய ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹற்அயாமா தெரிவித்துள்ளார். இது உலகை வழிநடத்திச் செல்வதற்கான அபிலாசையக் பூரணப்படுத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆசிய ஒன்றியத்தில் தென்கிழக்கு ஆசிய ஆசியான் நாடுகளின் கூட்டும் அவற்றையொட்டிய பிரதேச பங்காளி நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், சவுத்கொரியா நியுசிலாந்து, அவுஸ்ரோலியா ஆகியனவும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிய ஒன்றியத்தில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்ள ஜப்பான் முயற்சிக்கின்றது. அது தொடர்பான விவாதம் தாய்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அரசியல் பொருளாதார வலயத்தை 2015ற்குள் ஆரம்பிப்பது பற்றி இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்காக கப்பலில் வந்த பொருட்கள் அமைச்சர் அமீர் அலியால் பொறுப்பேற்பு

இடம் பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்க கப்பலில் வந்த பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரிசி, மா, நூடில்ஸ், டின் உணவு, டின் மீன், தேயிலை, சீனி, பால் மா, குழந்தை உணவு, பழச்சாறு மற்றும் உலர் உணவுப் பொதிகள் இந்த பொருட்களில் அடங் கியிருக்கின்றன.

இந்த பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப் பப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நூற்றி இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்க செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்ரம ஒப்படைத்தார்.

இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தொண்டர் குழு ஒன்று தயாராக இருப்பதாக திஸ்ஸ அபேவிக்ரம தெரிவித்தார். இந்த பொருட்கள் வவுனியா அரச அதிபரூடாக விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

2010: இடைக்கால கணக்கறிக்கை நவ.3 இல் சமர்ப்பிப்பு; 5இல் வாக்கெடுப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

26parliament.jpg2010ம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் திகதி சமர்ப்பிக்கப்படும் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நவம்பர் மாதம் 5ம் திகதி வரையும் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது நவம்பர் மாதம் 5ம் திகதி பின்னேரம் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களின் கதவுகள் திறக்கப்பட்டால் உதவிகள் தேடிவரும்

வன்னி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதனால் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதில் தயக்கம்காட்டுவதாக ஐ நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதவி வழங்கும் அமைப்புகள் உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆனால் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அவர்களை எரிச்சலடைய வைப்பதாகவும் ஐ நாவில் வதிபவரும் இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவருமான நெயில் புனே தெரிவித்தார்.

ஒக்ரோபர் 9 புள்ளிவிபரங்களின்படி 245 000 பேர் இன்னமும் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு இருந்தது. ஆனால் ஒக்ரோபர் 22ல் 41 000 பேரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் குடியமர்த்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

கடந்த யூலையில் இடம்பெயர்ந்த அகதிகளின் 185 திட்டங்களுக்கு 270 மில்லியன் டொலர்கள் தேவைப்பட்டதாக குறிப்பிடும் நெயில் புனே அரசு 155 மில்லியன் டொலர்களுக்கான வழியை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார். முகாம்கள் திறந்தவிடப்பட்டால் பெருமளவிலான உதவி செய்யும் அமைப்புகள் உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.