நிவாரண கிராமங்களிலிருந்த 23,388 பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் மீள் குடியேற்றம். 3000 பேர் இன்றும் யாழ். வருவர் – அரச அதிபர் கணேஷ்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 23 ஆயிரத்து 388 பேர் (23,388) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்தார். 7,414 குடும்பங்களைச் சேர்ந்த 23,388 பேர் நேற்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணம் வர இருக்கிறார்களென்றும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 44,000 பேரை அனுப்புவதாக ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 50 வீதமானவர்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் தினமும் கட்டம் கட்டமாக பஸ்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கமைய இன்றும் 3000 பேர் யாழ். வந்து சேர்வார்களென அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விசேட பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் வரும் இந்த மக்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபா அவர்களது கணக்கில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதைவிடவும் யு. என். எச். சீ. ஆர். வழங்கும் நிவாரணப்பொதிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு சொந்த இடங்களும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்துவரும் மக்களை பொறுப்பேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், அரசாங்க உயர்மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாதோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு வார காலத்தினுள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரச அதிபர் கணேஷ் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *