செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வார்த்தை ஜாலங்களை நம்பி ஏமாற தோட்ட தொழிலாளர் இனியும் தயாரில்லை – பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

vote.jpgமலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெறும் சம்பளத்தைக் குறைத்து அவர்களை ஒரே இடத்தில் முடக்கும் வகையிலான கருத்துக்களை எதிர்க் கட்சியினர் முன்வைப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் விசனம் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பெற்றுத் தருவதாகக் கூறும் தொகையைவிடக் கூடுதலான தொகயைத் தொழிலாளர்கள் தற்போது பெற்றுக் கொண்டிருப்பதை குறைக்கப்பார்க்கிறாரா? தொழிலாளர் பெற்றுக் கொண்டிருக்கும் தொகையிலும் கூடுதலான தொகையை மேலும் பெற்றுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், காங்கிரஸைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கொரு தடவை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடு க்கவும் வழிவகுத்துள்ளதாகவும் குறிப் பிட்டார்.

மலையகத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக 10,125 ரூபாவைப் பெற்றுத் தருவதாக எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். ஆனால், தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், பொன்சேகா பெற்றுத் தருவதாகக் கூறும் தொகையைவிடவும் தற்போது தொழிலாளர்கள் அதிகமாகவே பெற்று வருகிறார்கள்.

தொழிலாளர்கள் ஒரு மாத்தில் 25 நாட்கள் வேலை செய்தாலே, பொன்சேகா கூறும் தொகையைவிடக் கூடுதலான சம்பளம் கிடைக்கின்றது. எனவே வெறும் வார்த்தை ஜாலங்களை நம்புவதற்கு நம் மக்கள் தயாராக இல்லை. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுகிறார்கள் என்றும், அதனைவிடக் கூடுதலான தொகையை எதிர்காலத்தில் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

ஜனவரி 7 இல் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு ஐ.தே.மு., ஜே.வி.பி. இணைந்து தயாரிப்பு

pr-can.jpgஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனமான பொது வேலைத்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்த பொது வேலைத்திட்டமானது ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. இரு கட்சிகளும் இணைத்துத் தயாரிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பி.யோ யார் அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்பட வேண்டுமென்பதில் இரண்டு கட்சிகளும் உறுதிபூண்டிருக்கின்றன.

பொது வேலைத்திட்டத்தில் முக்கியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சந்திரசேகரனின் வெற்றிடத்துக்கு அருள்சாமி?

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் திடீர் மறைவையடுத்து அவருக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் யார் தெரிவு செய்யப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெ. சந்திரசேகரன் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டார்.

அவருக்கு அடுத்ததாக அப்போது ம.ம.மு. உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் அருள்சாமி அதிக விருப்பு வாக்குகள் பெற்றிருந்ததால் இலங்கைத் தேர்தல் சட்டத்தின் கீழ் காலியாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்துக்கு நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார். இது தொடர்பாக அருள்சாமியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டியலில் தனது பெயரே முதலாவதாக உள்ளதாகவும் எனவே தேர்தல் ஆணையாளர் முறைப்படி வர்த்தமானி அறிவித்தல் விடுத்து தன்னை அழைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேசமயம் ம.ம.மு. பொதுச் செயலாளர் விஜயகுமார் இது தொடர்பாக அவசரப்படத் தேவையில்லை என்றும் கட்சியின் செயற்குழு கூடி இது தொடர்பாக முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். அருள்சாமி தற்போது ஜனாதிபதியின் இணைப்பாளராக கடமை யாற்றுவது குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் முன்னணி வட்டாரங்களில் அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றம் தன் ஆயுள் காலத்தை இழக்கவிருப்பதால், அதுவரை அந்த ஆசனத்தை மறைந்த தலைவரை கெளரவிக்கும் வகையில் காலியாகவே விட்டுவிட வேண்டும் என்ற ஒரு அபிப்பிராயம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

கடலில் இளைஞன் அடித்து கொலை விவகாரம்: வெலிக்கடை சிறையில் சந்தேக நபர் மரணம்

கொழும்பு பம்பலப்பிட்டிக் கடலில் இளைஞரொருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் நேற்று மரணமடைந்துள்ளார். நேற்று அதிகாலையில் திடீர் சுகயீனமுற்ற மேற்படி சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையிலேயே மரணமானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம். கருணாரத்ன தெரிவித்தார்.

திமுது சுமிலத் எனும் இந்த சந்தேக நபர் மாரடைப்பினால் மரணமடைந்து ள்ளதாகத் தெரிவித்த அவர், இம் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பிந்திய செய்தி – அமைச்சர் சந்திரசேகரன் காலமானார்.

canthira.jpgமலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பீ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார். கொழும்பில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை காலமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள தேசம் நெட்டுக்குத் தெரிவித்தன.

இவர் 1952 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்தவர். 1994 ஆம் ஆண்டு முதல் நுவரெலியப் பாரளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். மேலதிக தகவல்கள் பின்பு வெளியிடப்படும். 

இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர். அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் BBC தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்திருந்தார். காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

சினவட்ராவை ஆலோசகராக நியமிக்கும் செய்தி உண்மையல்ல – வெளி விவகார அமைச்சு அறிக்கை

thaksin.jpgதாய் லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவட்ரா இலங்கையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்தி எந்த அடிப்படையும் இல்லாத வெறும் ஊகம் என்று வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியை முற்றாக மறுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இருந்து வரும் சிறப்பான இரு தரப்பு உறவுகளை இது போன்ற ஊகங்கள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு உறுதியாக கூறுகிறது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் கசிப் பிரோம்யாவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன் தினம் தொலைபேசியில் பேசினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிவரும் அரச ஊழியருக்கு இலவச பஸ் சேவை

buss.jpgயாழ்ப்பா ணத்திலிருந்து வன்னியில் கடமையாற்ற வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இலவச பஸ் போக்குவரத்துச் சேவை இம்மாதம் முதல் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர்களின் நலன்கருதி இந்த இலவச பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்தின் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

வன்னியில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள், யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கும் இணைக்கப்பட்டிருந்த னர். இவர்களின் இணைப்பு ஜனவரியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவர்கள் அனைவரையும் தாம் முன்பு கடமையாற்றிய வன்னிப் பாடசாலைகளுக்குக் கடமைக்குத் திரும்ப வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்திலிரு ந்து வன்னிக்கு வருவதற்காக இலவச பஸ் சேவை நடாத்தப்படுகின்றது. திங் கட்கிழமை யாழில் இருந்து வருவதற்கும், வெள்ளிக்கிழமை திரும்பிச் செல்வதற்கும் அரச ஊழியர்கள் இந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்த முடியும்.

அரச பணியாளர்கள் வெள்ளிக்கிழமை வரை வன்னிப் பகுதிகளில் தங்கி யிருப்பதற்கான வசதிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக இளங்கோவன் கூறினார். வன்னிப் பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டிய சுமார் 650 ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி?

thaksin.jpgதாய்லாந் தின்  முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின்  சினவத்ர தாய்லாந்திலிருந்து வெளியேறி வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு முன்னாள் பிரதமரும் சினவத்ரவின் உறவினருமான சோம்சல் வோங்சவட் இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாக பாங்காக் போஸ்ட் என்கிற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து சினவத்ரவை ராணுவம் நீக்கியது. இதன் பிறகு அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஊழல்களில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. சிறைத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தாய்லாந்திலிருந்து வெளியேறிய காலத்தில், இலங்கைக்கு சினவத்ர பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  கம்போடியா மற்றும் இலங்கை அரசுகளின் பொருளாதார ஆலோசகராக சினவத்ர நியமிக்கப்படலாம் எனவும், இது எந்த வகையிலும் தாய்லாந்துக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் வோங்சவட் தெரிவித்திருப்பதாக பாங்காங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடியுமானால் நிரூபியுங்கள்; ஒரு வாரகால அவகாசம் – எதிர்க்கட்சிகளுக்கு லக்ஷ்மன் யாப்பா சவால்

ma-ya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தி வரும் ஊழல், மோசடிகள் தொடர்பாக முடியுமாயின் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க முன்வருமாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எதிர் கட்சிகளுக்கு பகிரங்க சவால் விடுத்தார். தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமானால் அதற்கு ஒருவார கால அவகாசத்தை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறு நிரூபிக்க முன்வருபவர்கள் விரும்பும் ஊடகத்தில் விவாத்துக்கு நேரத்தை ஒதுக்கித் தர தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் உரை யாற்றுகையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இல்லாத ஒன்றை உருவாக்கி மக்களின் மனனத மாற்ற முயல்கின்றன. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போதில்லை.

அப்பலோ வைத்தியசாலை, அவுஸ்திரேலிய தூதரக காணி, சுவர்ணவாஹினி போன்ற பல நிறுவனங்களையும் இடங்களையும் இவர்கள் வாங்கியுள்ளதாக பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றன. இவற்றில் உண்மை இல்லை. சுவர்ணவாஹினி பணிப்பாளர் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார். அதே போன்று அவுஸ்திரேலிய தூதரகம் அமையப் பெற்ற காணி உரிமையாளர் தம்மிக பெரேரா அது தனது சொந்த காணி என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்.