செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நாட்டை கட்டியெழுப்ப தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் – முன்னாள் எம்.பி. சுஹைர்

suha.jpgநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் அழைப்பை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யான எம். எம். சுஹைர் தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  இது நல்லதொரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடனும், ஆளும் கட்சியுடனும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியம்.

வெகுவிரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவி ருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியே அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக வும் ஸ்திரத்தன்மைக்காகவும், முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து செயற்படுவது அவசியம். முஸ்லிம்கள் எதிர்க்கட்சி சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு பல தேவைகளும், பிரச்சினைகளும் உள்ளன. ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் போதே அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த தேர்தலில் ஸ்ரீல. மு. கா. முஸ்லிம்களை பிழையாக வழி நடாத்தி விட்டது. இனிமேலும் முஸ்லிம்கள் ஸ்ரீல. மு கா.வின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடாது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தேர்தல் முடிவு திருப்தி அளிக்கிறது – ஐ. நா. செயலாளர் நாயகம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் அற்ற நிலையில் நடந்து முடிந்திருப்பது திருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் முடிவுகள் தொடர்பான அக்கறைகள் இருப்பின் அவற்றை சமாதானமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள் அதிகரித்திருந்த தையிட்டு நான் கவலையடைந்தேன். எனினும் தேர்தல் தினத்தன்று ஒரு சில வன்முறை சம்பவங் களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது நிவாரணம் அளிக்கிறது என்று செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் – அமைச்சர் மைத்திரி

pr-con.jpgபாராளு மன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார். மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர். எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார். மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊர்வலம், கூட்டம் ஒரு வாரத்துக்கு தடை; வன்முறைகளை தடுக்க பொலிஸார் உஷார் நிலையில்

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தில் இருந்து ஒருவாரத்துக்கு ஊர்வலங்கள் செல்வது, கூட்டங்கள் நடத்துவது, வரவேற்பு நிகழச்சிகள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைதியான நிலை காணப் படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் தொடர்ந்து அமைதி நிலையை பேண சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரினார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடு க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹெயிட்டியில் உணவுக்காக மக்கள் மோதல்

haitibuidling-pd.jpgமத்திய அமெரிக்காவில் உள்ள ஹெயிட்டி நாட்டில் கடந்த 12ம் திகதி பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரில் பெரும்பாலான வீடுகள், கடைகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றன. அவற்றை பெறுவதில் மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த முடியாததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிப்படையினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவு பற்றி எவ்வித பிரச்சினைகளும் இல்லை.- அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர்

voteசமாதான முறையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது அரசுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப்கிரவ்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் 70வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தமை இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துகின்றது எனவும் இதனையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும் தெரிவித்தார்;.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிலிப்கிரவ்லி மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுசிறு சம்பவங்கள் தவிர பொதுப்படையாக நோக்குமிடத்து இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும்,  நேர்மையாகவும் நடைபெற்றதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதித் தெரிவு குறித்து எவ்வித பிரச்சினைகளும் தமக்குள் எழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கம்பளை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்

கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள தெம்பிலிகல விஹாரைக்கருகில் நேற்று (27) இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்தது.

இச்சம்பவம் நேற்றுக் (27) காலை இடம்பெற்றுள்ளதுடன்,  இதனையடுத்து கம்பளை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இச்சம்பவத்தில் பௌத்த மதகுரு உட்பட இருவர் பலியாகியுள்ளதுடன்,  காயங்களுக்குள்ளான அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,  இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கம்பளை தெம்பிலிகல பகுதியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டதையடுத்து அருகிலுள்ள விஹாரை மீதும் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால் விஹாரைக்கு வெளியே நின்ற தேரரும் மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் பொன்சேகா

pr-can.jpgதனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

“இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.” என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் பொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்.மாவட்ட மக்கள் வாக்களிக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

sampanthar.jpgயாழ். குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது; யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய் காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவங்களினால் சிலர் பாதிக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகின்றது. வாக்காளரிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நியாயமானதும் சுதந்திமானதுமான தேர்தலை தடுக்கும் திட்டமிட்ட நோக்குடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைவரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்க முடியும். யாழ்.தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய அக்கறையுள்ள குழுக்களே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொண்டன என்பது வெளிப்படை. இவை குறித்துத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இவ்வாறான சம்பவங்களால் யாழ்.மாவட்ட தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டால், யாழ் வாக்காளர்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது முறைப்பாடு, வவுனியாவில் உள்ள ஆனந்த குமாரசாமி முகாம் மற்றும் வலயம் 2 முகாம் ஆகியவற்றின் வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்காதது பற்றியதாகும்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முகாம்களுக்கு வெளியே காலை ஏழு மணியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு பஸ்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிற்பதாக வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாம், வலயம் இரண்டு முகாம் ஆகிய வற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் செயலகமும் வவுனியா அரச அதிபரும் உறுதியளித்திருந்தனர். இரண்டு பஸ்கள் மூலம் 140 வாக்காளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். 3000 வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்கான பஸ்கள் நண்பகல் 12 மணி வரை சென்றடையவில்லை. இதனால் காத்து நின்ற வாக்காளர்கள் முகாம்களுக்குத் திரும்பியுள்ளனர். உங்களுடன் வவுனியா அரச அதிபருடன் இவ்விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.வாக்காளர்களை முகாம்களுக்குச் சென்று பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ் பஸ்கள் உரிய நேரத்துக்கு சென்று பெருந்தொகையான வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சரியான நேரத்தில் விடுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாக்காளர்கள் வாக்களிக்க சட்ட பூர்வமான உரித்துடையவர்கள். இவர்கள் இன்று வாக்களிக்க முடியாது போனால் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் முன்பதாக இவ்வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாவது முறைப்பாடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கிரனேற் தாக்குதல் பற்றியதாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த போது இரண்டு கிரனேற்றுக்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் வாக்களிப்பு பாதிக்கப்பட்டது. வாக்களிப்பு தங்களின் வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டவர்களே வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது வெளிப்படை. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே தேவை எனவே இது குறித்து ஒழுங்கான விசாரணை நடத்தி முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று மூன்றாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால பரம்பரைக்கு வளமான எதிர்காலத்தை உரிமையாக்குவேன் – ஜனாதிபதி

mrpr.jpgஇரண் டாவது முறையாகவும் தம் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் பெற்றுத்தந்த இந்த அமோக வெற்றியையிட்டு தமது மகிழ்ச்சியை தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தீவிரவாதத்தை தோற்கடித்தபின் நடைபெறும் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து மக்களும் பயமோ சந்தேகமோ இன்றி இந்த தேர்தலில் பங்கெடுத்துள்ளனர்.

இப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். இந்த நாட்டு மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை உலகத்துக்கே நிரூபித்த வெற்றி. நாட்டை நேசிக்கும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றி. உண்மையான வெற்றி பிறப்பது தோல்வி இல்லாத நிலையிலேயாகும். இந்த வெற்றி நாம் அனைவருக்கும் சொந்தமானது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நீதியின் முன்னே அனைவரும் சமமானவர்கள். நீதியை காப்பவர் நீதியின் பாதுகாப்பை பெறுவார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நீதியை மதிக்கும் நாடு அபிவிருத்தியடைந்த நாடு, நல்லாட்சி நிறைந்த நாடு. இவை அனைத்தும் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தைதான் எதிர்கால பரம்பரைக்கு மற்றும் இந்த நாட்டுக்கு உரிமையாக்கித் தருவேன் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.