செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

தமது வாகனங்கள், உடைமைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று மேலும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கென 16 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

நண்பனை படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு மரணம்!

Ugarajan_Swaminathanதன்னுடைய பிளற்றில் வாழ்ந்த நண்பன் உகாராஜன் சுவாமிநாதனை (34) கோடாலியால் பலமுறை கொத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்டின் சந்திரகாந்தன் (31) மார்ச் 5ல் அவர் சிறை வைக்கப்பட்டு இருந்த அறையில் தூக்கிட்டு மரணித்துள்ளார். ஜனவரி 13ல் உகாராஜன் சுவாமிநாதன் தான் தங்கியிருந்த கரோ ரவுன் சென்ரரில் உள்ள ஆர்எப்சி எக்ஸ்பிரஸ் சிக்கின் கடைக்கு மேலே வைத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இக்கொலை தொடர்பாக 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

ஜஸ்ரின் சந்திரகாந்தன் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஹென்டன் மஜிஸ்ரேற் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். ஏப்ரலில் இவருடைய வழக்கு விசாரணை ஓல்ட் பெய்லிக்கு வர இருந்த நிலையிலேயே அவர் தூக்கிட்டு மரணித்துள்ளார்.

இம்மரணம் சிறையில் நிகழ்ந்தள்ளதால் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எச்எம் பிறிசின் சேர்விஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.

அமெரிக்காவில் மாநில துணை ஆளுநராக தமிழர் நியமனம்?

raja.jpgஅமெரிக் காவில் இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா இந்நியமனத்தை வழங்கவுள்ளார். அமெரிக்காவில் வாழும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கே இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை முதன் முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம் – வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம் – மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் ‘எம். வி. டல்கா’ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முகவர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்தமான மேற்படி ‘எம். வி. டல்கா’ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்

பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென்றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப்பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங்களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையாளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.

யாழ். பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழா – 3972 பேர் பட்டம் பெற்றனர்

5 வருட இடைவெளிக்குப்பின் யாழ். பல்கலைக்கழக 25 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கைலாசபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2005, 2006, 2007 ஆம் வருடங்களில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 3972 பேர் தமக்கான பட்டங்களைப் பெறுகின்றனர்.

இம்முறை பட்டமளிப்பு விழா மூன்று தினங்களில் ஐந்து அமர்வுகளில் நடைபெறும். தினமும் 1324 பட்டதாரிகள் தமது பட்டத்தை ஐந்து அமர்வுகளில் பெறுவர்.

சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது; கிணற்றுநீரை ஆராயும் பணியில் சுகாதார குழு

மட்டக்களப்பு வவுணதீவு இருட்டுச் சோலை மடு விஷ்ணு வித்தியாலயத்தில் 118 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது தொடர்பில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராசா கோதையம்மா (42) என்ற பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமையன்று பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலையின் கிணற்று நீரை அருந்திய மாணவர்கள் திடீர் மயக்கம், வாந்தி, வயிற்று நோவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 118 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவர்களில் 115 மாணவர்கள் குணமடைந்து நேற்றுக் காலை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தொடர்ச்சியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் இப்பாடசாலைக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பாடசாலையின் கிணற்று நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் என்பனவற்றை பரிசோதித்துள்ளனர். இப்பாடசாலையின் கிணற்று நீர் பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரெஞ்சு தூதுவர் யாழ். விஜயம்

இலங்கை யிலுள்ள பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் நேற்று முன்தினம் (25) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார். யாழ். அரச அதிபர் கே. கணேஸை பிரெஞ்சு தூதுவர் யாழ். செயலகத்தில் வைத்து முதலில் சந்தித்து பேசினார். அதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள பிரெஞ்சு நட்புறவு கலாசார கேந்திரத்துக்கு சென்ற அவர் அதன் நடவடிக்கைகளை நேரில் கண்டறிந்தார்.

யாழ். குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்பதைப் பற்றி அரச அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் பிரெஞ்சு தூதுவர் அதிக அக்கறை காட்டியதாக செயலக வட்டாரங்கள் கூறின.

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.  பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.  குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,  “தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.