செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களில்

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதையொட்டி மலைய கத்தின் மேற்கு பகுதியில் அடிக்கடி கடும் காற்று வீசும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாக வேண் டிய காலம் சில வாரங்கள் தாமதமடைந்துள்ளன.

இதற்கு வளிமண்டலத்தில் திடீர் திடீரென ஏற்பட்ட மாற்றங்களே காரணம். என்றாலும் இன்றோ, நாளையோ தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகும். இதன் விளைவாக மேல், தென், மத்திய சப்ரவமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை அதிகம் பெய்யும். அத்தோடு வடக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்ய முடியும். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதி கூடிய மழை மாலிபொடவில் 73.5 மி.மீ. பதிவாகியுள்ளது.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரை காணப்படுகின்றது. இது அடிக்கடி 60 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்கின்றன. இதேநேரம் தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மன்னார் குடா, வட கிழக்கு ஆகிய கடற்பரப்புக்களில் அதிக கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது என்றார்.

அவசரகாலச் சட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற் கான பிரேரணை 68 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்க் கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐ. தே. க எம்.பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

கிளிநொச்சியில் இரு பெண்கள்மீது பாலியல் துஸ்பிரயோகம் ஆறு இராணுவத்தினர் கைது!

யூன் 6ல் கிளிநொச்சி ரெட்பானா பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்தே யூன் 7ல் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் யூன் 8ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் யூன் 14ல் அடையாள அணிவகுப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதணைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

தனங்கிளப்பில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்! மூவர் படுகாயம்!

தென்மராட்சி தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் நேற்று (June 7 2010) மாலை 5:15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனங்கிளப்பைச் சேர்ந்தவரும், பண்டத்தரிப்பில் வசித்தவருமான கனகசபை பிரகாஸ் (வயது 29) சாவகச்சேரியில் வசித்தவரும் மந்திகை வைத்தியசாலை ஊழியருமான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது38) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில்  மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதியில் மக்களின் நலன் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று காலை சுண்டிக்களம் பிள்ளையார் கோவிலடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதி மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதன்போது கனகசபை பிரகாஸ் என்பவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைமைகளின் தவறுகளுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை பின் தள்ளிவிட வேண்டாம்! : ஈபிடிபி

Douglas_D_and_Rajaparksa_MJune 7 2010 தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலை 6 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப் படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் உள்ள அரசியல் ஏற்பாட்டை நோக்கி செல்வதன் ஊடாகவே அரசயிலுரிமைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படுவது சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை காலமும்  கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இத்தலைமைகளின் தவறான வழிநடத்தல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை ஒரு போதும் பின் தள்ளிவிட வேண்டாம் எனவும். சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்ட யோசனையையே தாம் முன்வைத்து வருவதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பி உறவுக்கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் இப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பசில் ராஜபக்ஷ ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால சிறிசேன பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை – ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ்

gl.jpgஇலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட கேந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் அமர்வின் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.”கிளர்ச்சி எதிர்ப்பும் ஆட்சியை வலுப்படுத்துவதும்” என்ற கருப்பொருளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய பின்னர் கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டதாக இந்துப் பத்திரிகை குறிப்பிட்டது.

“இந்தக் கட்டத்தில் வெளிமட்ட தலையீட்டுக்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை”  என்று அவர் குறிப்பிட்டார்.”நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது குறைபாடுகள் தேவைகள் ஏற்பட்டால் நிச்சயமாக எமக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்து ஐ.நா. முறைமையிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசாமல் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

நீதியான தீர்வை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்கள மக்களின் மனநிலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிலைமையில் இருப்பதாக மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், 25 வருடங்களில் முதல் தடவையாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான ஆற்றலையும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோதலுக்குப் பின்னரான தற்போதைய கட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு வலுவான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த கால யோசனைகளுக்கு அப்பால் மேலும் விடயங்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மேற்குலகிலும் ஏனைய இடங்களிலுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தியானது அவர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் வட,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் உள்சார் கட்டமைப்பு திட்டங்களில் அவர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் அவர்களுக்கு கூறுகின்றோம்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பாக உள்நாட்டு மட்டத்திலான பொறிமுறையே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிமட்ட அழுத்தமும் இல்லாமல் இது இடம்பெறுகிறது. “அவசரகால ஒழுங்குவிதிகளில் 70 சதவீதமானவற்றை நாம் நீக்கியுள்ளோம்” என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் கொண்டிருந்தது.அவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். 9 ஆயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப்படக்கூடியவர்களாகும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும்.மீதிப் பேரைப் பொறுத்தவரை அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுள்ளோம் என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழகங்களுக்கு ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க தீர்மானம் – அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க

பல்கலைக்கழக தெரிவுக்கான ‘இஸட் ஸ்கோர்’ வெட்டுப் புள்ளிகள் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டன. இதன்படி 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கிலப் பாடநெறியில் சித்திபெறும் மாணவர்களே பாடநெறிகளுக்கு சேர்க்கப்படுவர் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (7) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-யுத்தம் முடிவடைந்துள்ளதால் நாடு பூராவும் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் இம்முறை மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு 6 மாத கால ஆங்கில பயிற்சி வழங்கப்படும். ஆங்கில பரீட்சையில் தோற்று பவர்களே பல்கலைக்கழக பாட நெறிகளுக்கு அனுமதிக்கப்படுவர். பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை முற்றாக ஒழிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி திறை சேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் காணப் படும் பாடநெறிகளையும் மாற்ற உள்ளோம். மாணவர்களின் வருகை கட்டாயம் 80 வீதமாக இருக்க வேண்டும். இது குறித்து கவனம் செலுத்தப்படும். ஒழுங்காக பரீட்சை எழுதாதவர்கள் சித்தியடைய தவறியவர்களாகவே கருதப்படுவர்.

இம்முறை மருத்துவ பீடத்துக்கு 1147 பேரும் பொறியியல் பீடத்துக்கு 1223 பேரும் முகாமைத்துவ பீடத்துக்கு 3270 பேரும் கலைப் பிரிவுக்கு 3802 பேரும் தெரிவு செய்யப்படுவர். யாழ் பல்கலைக்கழகத்துக்கு 100 மருத்துவ மாணவர்கள் தெற்கிலிருந்து அனுப் பப்படுவர் என்றார்.

IIFA சர்வதேச இந்திய திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

iifa-awards-logo.jpgபொலிவுட் சினிமாவின் விமரிசையானதும் பாரியதுமான விருது வழங்கல் விழா என கருதப்படும் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கல் விழா இலங்கையில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கையில் இந்த விழா சிறப்பாக நடப்பதை தடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து பிரபல சினிமா நட்சத்திரங்கள் இங்கு வருவதை தடுப்பதற்கு முயற்சித்த பயங்கர வாத நிகழ்வாக இருந்து வந்த பிரிவினை வாத சக்திகளுக்கு இது மோசமான தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விழா தொடர்பாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூறிய மோசமான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் வன்மையாக நிராகரிக்கிறது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையொன்று கூறுகிறது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கடந்த மார்ச் 23ஆம் திகதியே தீர்மானித்தனர். அச்சமயம் இவ் விழாவை தமது நாட்டில் நடத்துமாறு தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் விண்ணப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவை நடத்த மிகவும் சிறந்த நாடு இலங்கை என விழா ஏற்பாட்டுக் குழு தீர்மானித்ததும் 2 மாத கால குறுகிய காலத்தில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்து முடித்தது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார, சுற்றுலா, வர்த்தக துறைகளுடன் உள்ளூர் சினிமாத் துறையும் பல நன்மைகளை பெற முடிந்தது. ஐஃபா விழா போன்ற சர்வதேச மட்ட விழாவை நடத்துவதற்காக சுகததாச உள்ளக விளையாட்டரங்கு நவீனமயப்படுத்தப்பட்டது.

இந்த விழா நடைபெற்றபோது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு முறை இலங்கையைப் பற்றிய செய்தியொன்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த செய்தியினால் இலங்கையின் அபிமானமும் தற்போதைய சமாதான சூழலையும் அடங்கிய விழாவின் முழுமையான ஒளிப்பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் பேர் உட்பட. உலகளாவிய ரீதியில் 130 நாடுகளில் உள்ள மக்கள் இந்த ஒளிபரப்பினை பார்த்து ரசிப்பார்கள்.

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் சமாதான சூழலில் இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள உகந்த இடம் என்பதை முன்னணி நாடுகள் பல கூறிவந்துள்ளன. இந்நிலையில் இலங்கை தொடர்பான இந்த செய்தி 120 நாடுகளில் இலவசமாக பிரசாரம் செய்ய முடிந்தமை இலங்கைக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.

சுற்றுலா செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையினால் இவ்வாறான பிரசாரம் ஒன்றை மேற்கொள்வதானால் குறைந்த பட்சம் 4500 கோடி ரூபாவை விட அதிகமாக செலவிட வேண்டியிருந்திருக்கும்.

அத்துடன் ஐஃபா விழா நடைபெற்ற அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் கொழும்பில் இடம் பெற்ற வர்த்தக சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளதுடன் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

உலகில் இன்று பல நாடுகள் சர்வதேச விளையாட்டு மற்றும் விழா நிகழ்வுகளை அல்லது மாநாடுகளை தமது நாடுகளில் நடத்துவதற்கு முன்வருவது அதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கத்தினாலாகும். குறிப்பாக சொல்வதானால் 1976ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்தியதால்தான் சர்வதேச மாநாட்டு மண்டபம் எமக்கு கிடைத்தது.

அதேபோன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டை 2013 இல் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவேயாகும். 11ஆவது ஐஃபா விருது வழங்கும் விழா இலங்கையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து அடுத்த விழாவை கனடாவில் நடத்த ஏற்பாட்டாளர்கள் இப்போதே தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி

2009ம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம், 20ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இப்போட்டிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் போட்டியாளர்களுக்கும் குறித்த பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகளுக்கு ஜப்பான் புலமைப் பரிசில்

இலங்கை அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த 60 இளம் அதிகாரிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் ஐந்து ஆண்டு புலமைப்பரிசில் திட்டமொன்றை அமுல் செய்யவுள்ளது.  இதற்காக இரண்டாயிரத்து 290 இலட்சம் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக ஜப்பான் ஒதக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு அமைச்சுக்களில் இருந்து முதல் தொகுதியாக 15 இளம் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஜப்பானில் முதுமாணிப் பட்டப்படிப்பினை ஜப்பான் சர்வதேச பல்கலைக்கழகம், கிறிஸ்ரியன் பல்கலைக்கழகம், ஹிரோசிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்வர். பொதுக்கொள்கை, பொது நிதி, பொது நிர்வாகம், பிராந்திய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த முதுமாணிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.