பொலிவுட் சினிமாவின் விமரிசையானதும் பாரியதுமான விருது வழங்கல் விழா என கருதப்படும் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கல் விழா இலங்கையில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது.
இலங்கையில் இந்த விழா சிறப்பாக நடப்பதை தடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து பிரபல சினிமா நட்சத்திரங்கள் இங்கு வருவதை தடுப்பதற்கு முயற்சித்த பயங்கர வாத நிகழ்வாக இருந்து வந்த பிரிவினை வாத சக்திகளுக்கு இது மோசமான தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விழா தொடர்பாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூறிய மோசமான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் வன்மையாக நிராகரிக்கிறது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையொன்று கூறுகிறது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது,
ஐஃபா விருது வழங்கும் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கடந்த மார்ச் 23ஆம் திகதியே தீர்மானித்தனர். அச்சமயம் இவ் விழாவை தமது நாட்டில் நடத்துமாறு தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் விண்ணப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
விழாவை நடத்த மிகவும் சிறந்த நாடு இலங்கை என விழா ஏற்பாட்டுக் குழு தீர்மானித்ததும் 2 மாத கால குறுகிய காலத்தில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்து முடித்தது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார, சுற்றுலா, வர்த்தக துறைகளுடன் உள்ளூர் சினிமாத் துறையும் பல நன்மைகளை பெற முடிந்தது. ஐஃபா விழா போன்ற சர்வதேச மட்ட விழாவை நடத்துவதற்காக சுகததாச உள்ளக விளையாட்டரங்கு நவீனமயப்படுத்தப்பட்டது.
இந்த விழா நடைபெற்றபோது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு முறை இலங்கையைப் பற்றிய செய்தியொன்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த செய்தியினால் இலங்கையின் அபிமானமும் தற்போதைய சமாதான சூழலையும் அடங்கிய விழாவின் முழுமையான ஒளிப்பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் பேர் உட்பட. உலகளாவிய ரீதியில் 130 நாடுகளில் உள்ள மக்கள் இந்த ஒளிபரப்பினை பார்த்து ரசிப்பார்கள்.
மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் சமாதான சூழலில் இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள உகந்த இடம் என்பதை முன்னணி நாடுகள் பல கூறிவந்துள்ளன. இந்நிலையில் இலங்கை தொடர்பான இந்த செய்தி 120 நாடுகளில் இலவசமாக பிரசாரம் செய்ய முடிந்தமை இலங்கைக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.
சுற்றுலா செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையினால் இவ்வாறான பிரசாரம் ஒன்றை மேற்கொள்வதானால் குறைந்த பட்சம் 4500 கோடி ரூபாவை விட அதிகமாக செலவிட வேண்டியிருந்திருக்கும்.
அத்துடன் ஐஃபா விழா நடைபெற்ற அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் கொழும்பில் இடம் பெற்ற வர்த்தக சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளதுடன் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
உலகில் இன்று பல நாடுகள் சர்வதேச விளையாட்டு மற்றும் விழா நிகழ்வுகளை அல்லது மாநாடுகளை தமது நாடுகளில் நடத்துவதற்கு முன்வருவது அதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கத்தினாலாகும். குறிப்பாக சொல்வதானால் 1976ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்தியதால்தான் சர்வதேச மாநாட்டு மண்டபம் எமக்கு கிடைத்தது.
அதேபோன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டை 2013 இல் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவேயாகும். 11ஆவது ஐஃபா விருது வழங்கும் விழா இலங்கையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து அடுத்த விழாவை கனடாவில் நடத்த ஏற்பாட்டாளர்கள் இப்போதே தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.