செய்திகள்
செய்திகள்
செய்திகள்
இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது- 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.
எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.
எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தினதும், இரண்டாம் வாரத்தினதும் திங்கட் கிழமையும், மூன்றாம், நான்காம் வாரங்களின் சனிக்கிழமையும் இவ்வாறு டெங்கு ஒழிப்பு தேசிய தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்புக்கான பணிகளை தேசிய மட்டத்திலும், மாகாண, உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் பரந்துபட்ட அடிப்படையில் மேற்கொள்ளுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
தென்னாப் பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் முக்கிய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா அணிகள் தோல்வியடைந்து வெளியேறி விட்டன. அரை இறுதிக்கு ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
கேப்டவுனில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் உருகுவே அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.
உருகுவே அணி உலகக்கோப்பையில் 10 முறை பங்கேற்று 1930 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. நெதர்லாந்து அணி 1974 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்துள்ளது.
கானா அணியுடனான காலிறுதிப் போட்டியின் போது உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ், கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் இந்த அரையிறுதிப் போட்டியில் விளையாடமுடியாமல் போனது உருகுவே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. நெதர்லாந்து, உருகுவே என இருஅணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இருப்பதால் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தியா வுக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து சிரமப்பட்டு சென்னை வந்தார். ஆனால் மத்திய அரசு அவரை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பார்வதி அம்மாளின் விருப்பத்தை தெரிந்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கோர்ட் உத்தரவின்பேரில் கொழும்பில் இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் 2 பேர் கொழும்பில் சிகிச்சை பெற்று வரும் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்தனர். அவர் சுயநினைவுடன் பேசக்கூடிய நிலையில் இருந்தார். அப்போது இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு எங்கள் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்ற விருப்பத்தை சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். அவருடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் கவனித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி விட்டனர். மறுநாள் சம்பந்தர் எங்களிடம் பார்வதி அம்மாள் சார்பில் பதில் கொடுத்தார். அதில் இப்போது பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற விரும்பவில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சொல்கிறோம். இதுதான் அவரது விருப்பம் என்று தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்னொரு பதவிக் காலத்தை கொடுக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்புத் திருத்தத்தை அரசு கை விட வேண்டும், 13 ஆவது அரசமைப்புத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னின்று நடத்தினார்.
தேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் புதிய முத்திரைக்கான உருவப்படத்தை வரைந்து முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு ஜனாதிபதி பரிசை வழங்கினார்.
கொழும்பு பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐநா அலுவலர்கள் எவரையும் அலுவலகத்துள் நுழையவோ அன்றி அலுவலகத்திலிருந்து வெளியெறவோ விடாமல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1989ஆம் ஆண்டு தொடக்கம் 14 பேரை கொலை செய்த நபர் ஒருவரை 21 வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையான நபரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய, தங்காலைப் பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்து புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
14வது நபரை கொலை செய்து புதைத்ததன் பின்னர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் தாம் செய்த கொலைகள் குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். காணிப் பிரச்சினை காரணமாக அண்மையில் 22 வயதான ஒருவரைக் கொலை செய்து வாழைத் தோட்டமொன்றில் புதைத்தமை குறித்தும் தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைசியாக கொலையுண்டவருக்கு இறுதியாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை நடத்தியபோதே கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16ஆயிரத்து 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மூன்று கட்டங்களாக, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த யூன் மாதம் 30ஆம் தகதி முடிவடைந்த மூன்றாவது பொதுமன்னிப்பு காலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 62 படையினர் உத்தியோக பூர்வமாக தங்கள் சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
