செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்னியில் வீசும் கடும் காற்றினால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் கூடாரங்கள் பல சேதம்!

Rehabilitation_Wanniவடக்கில் வன்னிப் பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதால் தரப்பாள் கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீளக்குடியமர்த்தப்பட்டு தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ள மக்களும், இன்னமும் தங்கள் காணிகளில் குடியேற அனுமதியின்றி வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள மக்களும் இக்கடும் காற்றினால் அவல நிலைக்குள்ளாகி வருகின்றனர். பல கூடாரங்கள் காற்றினால் சேதமுற்றுள்ளன. கூரைகளின்றி வெறும் கட்டடங்களுக்கு மேல் தரப்பாள்களை மூடி அதற்குள் குடியிருக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான  வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதால் எதிர்வரும் மழைக்காலத்தில் இம்மக்கள் பல இடர்பாடுகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பது பல தடவைகள் அரச அதிகாரிகளுக்கும், வீடமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எதுவித துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

m.jpgவவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.

திருத்தத்திற்கு ஆதரவாக கம்பளையில் பேரணி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஆதரிக்கும் வகை யில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் நேற்று முற்பகல் கம்பளை நகரில் பேரணி ஒன்று நடை பெற்றது. கம்பளை நகரிலிருந்து நுவ ரெலியா வீதி வழியாக கம்பளை மணிக்கூட்டு கோபுர சந்திவரை இப் பேரணி சென்றது.

இப் பேரணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் காதரும் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமா னோர் பங்கு கொண்டிருந்தனர்.

பொறுப்புடன் முடிவெடுப்போம் – அரியநேத்திரன் எம்.பி

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. தமிழ் மக்கள் நலனில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்சி என்பதால் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கின்றது என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக எதிர்க்கவும் முடியாது. இன்று கூடி முடிவெடுப்போம் என அவர் கூறினார்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

workers.jpgகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள பாடசாலைகள் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியே திறக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான பரீட்சகர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.

வர்த்தக முக்கியஸ்தரின் பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் மகன் தற்கொலை !!!

Kannan_Shanmugakumaranபிரித்தானிய தமிழ் வர்த்தகப் புள்ளியாக அறியப்பட்ட சண் என்ற சண்முககுமாரன் நவரட்ணம் அவர்களின் மகன் யூலை 23 2010ல்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் இறுதியாண்டில் கல்விகற்கும் கண்ணன் சண்முககுமாரனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: சண் குடும்பத்தினர் தம் வியாபார நிறுவனத்திற்கு அருகில் குடியிருந்தனர். லூட்டனில் உள்ள இவர்களின் வீட்டில் தனியாக தங்கியிருந்து மகன் கண்ணன் படித்துக் கொள்வது வழமை. தற்போது சமர் ஹொலிடே என்பதால் அப்போதும் கண்ணன் தனியாக லூட்டனில் தங்கி படித்து வந்தார். சம்பவத்திற்கு முதல்நாள் இரவு யூலை 22 சண் குடும்பத்தினர் கண்ணனை வந்து பார்த்து அவருக்கான உணவுகளை எல்லாம் தயாரித்து உணவருந்தி மகிழ்ந்து இருந்ததாக சண் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

மறுநாள் யூலை 24 அன்று லூட்டனில் உள்ள அவர்களின் வீட்டை நீண்ட காலமாகப் பராமரித்து துப்பரவு செய்யும் வெள்ளைகார வயோதிப மாது வழமைபோல் தனது கடமைகளைச் செய்யச் காலை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கண்ணன் வேட்டியில் சுருக்கிட்டு மாடிப் படிக்கட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டு இருந்தார். அதனைப் பார்த்துப் பயந்துபோன வயோதிப மாது அவசரசேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மருத்துவப் பிரிவினரும் கண்ணனின் உடலை மருத்துவ வண்டியில் எடுத்துச் சென்றனர். பொலிஸார் கண்ணனின் லப்ரொப்பையும் மோபைல் போனையும் தடயப் பொருட்களாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மதியம் ஒரு மனியளவில் ஃபமிலி லெய்சன் ஒபிசர்ஸ் சண் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியான துக்ககராமான செய்தியைத் தெரியப்படுத்தினர். அவர்கள் லூட்டன் வந்த போது கண்ணனின் உடல் ஏற்கனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

தங்கள் மகனின் மிகச் சடுதியான உயிரிழப்பை ஏற்றக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையுடள் குடும்பத்தினர் தவிப்பதை சண்னின் நண்பர் லண்டன் குரலுக்கு விபரித்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான தற்கொலைகள் வழமையாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளதுடன் குடும்பத்தை நிலைகுலையச் செய்கின்றது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமாகின்றது.

முகாமைத்துவ இறுதியாண்டு மாணவனான கண்ணன் ரக்பீ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது உடலை திடகாத்திரமாகவும் பலமாகவும் வைத்திருப்பதில் நாட்டம் உடையவர். அவரைத் தன்னையே அழிக்கும்படி தூண்டிய மனநிலைக்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினராலும் நண்பர்கள் உறவுகளாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

2008ல் அகிலன் கோபாலகிருஸ்ணன் தனது மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தங்கள் மகனின் இழப்புப் போன்று மற்றவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க தொலைபேசி ஆலோசனைச் சேவையை கோபாலகிருஸ்ணன் தம்பதிகள் அகிலன் நினைவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண் குடும்பத்தினர் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உடையவர்கள். நல்லூரில் 10ம் திருவிழாவைச் செய்து வந்த இவர்கள் ஆச்சுவே முருகன் ஆலயத்தில் 10வது திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வந்தனர். கண்ணனும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். இறுதியில் அந்த வேட்டியிலேயே தன்னுயிரையும் முடித்துக் கொண்டார்.

இவருடைய ஓகஸ்ட் 1 2010ல் இறுதிக் கிரியைகள் ஹென்டனில் இடம்பெற்றது.

ஆசிரிய இடமாற்றங்களில் தலையிடுவதை அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்- ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஅரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு ஆசிரிய இடமாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் ஆசிரிய இடமாற்றங்களில் தலையிட்டு எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்திற்கென புதிதாக 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

ஆசிரியர்கள் மதத் தலைவர்களுக்கு அடுத்த படியாக சமூக கெளரவத்தையும் மதிப்பை யும் பெற்றுக்கொள்பவர்கள். அந்த கெளரவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்டு மாணவர்களுக்கு நண்பர்களாக, சகோதரர்களாக சில வேளைகளில் பெற் றோர்களாகவும் அன்பு காட்டி வழி நடத்துவது முக்கியமாகும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தம்மிடம் கற்கும் மாணவர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரிய ஆசிரியைகள் பல்வேறு கட்சிகள், கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். எனினும், பாடசாலையில் அவர்கள் அதனைப் பாராட்டக்கூடாது. சகலரையும் சமமாக வழி நடத்துவதற்கும் சிறந்த நல்லொழுக்க முள்ள பரம்பரையை உருவாக்குவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் சமீப காலமாக ஊவாவிற்கு மட்டும் 5000ற்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது. ஊவா மாகாண பாட சாலைகளைப் பொறுத்தவரையில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் கொழும்பில் 21 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரே கற்பித்தலில் ஈடுபடுகின்றனர்.

இந்த வகையில் இங்கு ஆசிரியர் களுக்கான குறைபாடு இருக்க முடியாது. உள்ள ஆசிரியர்களை முறையாகப் பகிர் ந்துகொண்டால் இன்றுள்ள பிரச்சினை களுக்கும் தீர்வு கிட்டும் என்பது எனது நம்பிக்கை.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 45, 000 ஆசிரியர்களை புதிதாக நியமித்துள்ளது. எனினும், நியமனங்கள் கிடைத்து சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்று விடுகன்றனர். அவர்களுக்கு ஆசிரிய தொழிலின் பெறுமதி தெரிய வில்லை என்றே கருத முடிகிறது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் கவனமெடுக்க வேண்டும். தமது விருப்பு வாக்குகளை இலக்காகக் கொண்டு ஆசிரியர்களுக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தாம தமாவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கல்வித்துறையை மேம்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் பதவியேற்ற காலத்தில் நாட்டில் 05 வீதமானோரே கணனி அறிவைக் கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 45 வீதமாக அதிகரித்துள்ளது என்றார்

நியூசிலாந்தில் விமான விபத்து: இலங்கை விமானி உட்பட 9 பேர் பலி

நியூசிலாந்தில் நேற்று இடம் பெற்ற விமான விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமிந்த நளின் சேனாதீர என்ற விமானி கொல்லப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ‘ஸ்கெடைவிங்’ என்ற நிறுவன மொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாயத்திலேயே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பலியான வர்களில் நால்வர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.