வடக்கில் வன்னிப் பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதால் தரப்பாள் கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீளக்குடியமர்த்தப்பட்டு தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ள மக்களும், இன்னமும் தங்கள் காணிகளில் குடியேற அனுமதியின்றி வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள மக்களும் இக்கடும் காற்றினால் அவல நிலைக்குள்ளாகி வருகின்றனர். பல கூடாரங்கள் காற்றினால் சேதமுற்றுள்ளன. கூரைகளின்றி வெறும் கட்டடங்களுக்கு மேல் தரப்பாள்களை மூடி அதற்குள் குடியிருக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதால் எதிர்வரும் மழைக்காலத்தில் இம்மக்கள் பல இடர்பாடுகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பது பல தடவைகள் அரச அதிகாரிகளுக்கும், வீடமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எதுவித துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.