செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புனர்வாழ்வு பெற்ற 402 பேர் பெற்றோரிடம் நேற்று ஒப்படைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 402 பேர் நேற்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்புப்படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே. டி. தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப் பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.

2011 நவம்பர் 22இல் வரவு-செலவுதிட்டம்

2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது. குழுநிலை விவாதத்திற்கான திகதி குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தவிர நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழிற்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற் திட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

ஜனாதிபதிக்கு நன்றி…- அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgஇலங் கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.  இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை.  உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

Jaffna_Manipallavamவடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்தும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில், பகுதிகளில் இத்தொல்லியல் எச்சங்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான வரலாற்று ஆய்வுக்குழுவினர் நேரடியாக அவ்விடங்களுக்குச் சென்று இவற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

Jaffna_Manipallavamகுறித்த பகுதிகளில் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட குழிகளுக்குள் சென்று அவதானித்த போது, சுன்னாகம், கந்தரோடைப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டதைப் போன்ற மணிவகைகள், கூரை ஓடுகள், முதலான மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ். பல்கலைக்கழக அரும் பொருட்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இது தவிர தமிழ் பிராமி வடிவில் ‘நாகபூமி’ ‘பரராச’ போன்ற சொற்கள் பதிக்கப்பட்ட நாணயங்களும் நாகர்கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பேராசியர் கிருஸ்ணராஜா அப்பகுதிகளில் மணல் அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவோர் இத்தொல்லியல் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்காமல் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்படுமானல் அவற்றை யாழ்.பல்கலைக்கழக வராற்றுத்துறையில் ஒப்படைத்துதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்டமராட்சியில் படையினர் எனக்கூறி ஆயதமுனையில் நகைகள், பணம் கொள்ளை!

கடந்த செவ்வாய்கிழமை தென்மராட்சியில் பட்டப்பகல் வேளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி மட்டுவில் தெற்கில் காலை 9 மணியளவில் வீட்டில் தனித்திருந்த பெண்ணொருவரை ஆயதமுனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள் பல லட்ச ரூபா பெறுமதியான நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் படையினரென்றும் வீட்டை சோதனையிடப் போவதாகவும் கூறி பின், துப்பாக்கியைக் காட்டி அப்பெண்ணை அச்சுறுத்தி இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களாக நடைபெற்று வந்த கொள்ளைச் சம்பவங்கள் சற்று குறைவடைந்துள்ள போதும் அவை முற்றாக கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவிற்கு ‘மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை’ ஜனாதிபதி அங்கீகாரம்.

sf.jpgமுன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கெதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகாவின் வழக்கை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு ஆகக்கூடியது மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக தீhப்பளித்தது. இதனையே ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.சபையின் 65வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று 29ம் திகதி காலை நாடு திரும்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமராட்சிக்கிழக்கில் கடற்றொழில் நேற்று ஆரம்பம்.

வடமராட்சிக் கிழக்கில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பதற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை காலை வடமராட்சிக்கிழக்கின் மாமுனை, செம்பியன்பற்று, உடுத்துறை, வத்திராயன், ஆகிய கடற்பகுதிகளில் சுமார் 200 கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழில்களை ஆரம்பித்தனர்.

கடற்றொழிலாளர்கள் மாமுனையிலிருந்து அழியவளை வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபடலாம என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  நேற்று கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் நிகழ்வை 551வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

வடமாராட்சிக் கிழக்குப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இது வரை 600 கடற்றொழிலாளர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.

முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.