செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொன்சேகாவின் மேன்முறையீடு நாளை பரிசீலனைக்கு

sarath-fonseka.jpgஇரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பினை ரத்து செய்யுமாறுக் கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீடு நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரஞ்சித் சில்வா மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று கவனத்தில் கொள்ளப்பட்ட வேளையில் நாளை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையிட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளார். எனினும் அதற்கு அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் மனுதாரர் என்ற வகையில் சரத் பொன்சேகாவை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் குழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

ranjan1.jpgநிதி மோசடியில் ஈடுபட்டார் என குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, 15 ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் எம்.பிக்கள் தூதுக்குழு இலங்கை விஜயம்

பொது நலவாய நாடுகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நேற்று இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப் பகுதியினுள் நாட்டின் முக்கிய பல தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவரெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இத்தூதுக்குழு நாளை (19) செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மில்ரோய் இன்று யாழ் விஜயம்; ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்களுடன் சந்திப்பு

தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியமர்த்தக் கோரி யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியிருக்கும் 100 சிங்கள குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன்று (18) யாழ்ப்பாணம் செல்கிறார்.

யாழ்ப்பாணம் அரச அதிபர் இமெல்டா சுகுமார், வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோருடன் அமைச்சர் மில்ரோய் இம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பாரெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வெலிக்கடைக்குள் பொன்சேகா கைதி; நாங்கள் இலங்கைத் தீவுக்குள் அரசியல் கைதிகள் – ரணில்

ranils.jpgஎவருடைய வேண்டுகோளுமின்றி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கிஸை, ஸ்ரீ ரம்ய விகாரையில் சரத் பொன்சேகாவின் விடுதலையின் நிமித்தம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற மத வழிபாடுகளின் இறுதியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “சரத் பொன்சேகா எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றபோதும் அவர் ஆலோசனைகளை மீறியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆலோசனைகளை மீறுவதென்பது சட்டத்தை மீறுவதாகாது. அது மட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவுக்கும் ஹைகோப் நிறுவனத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லையென நிறுவனங்கள் பதிவாளர் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கிறார்.

சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நிராகரித்து படையினர் அனைவரையும் காப்பாற்ற என்னால் முடிந்திருந்தது என்றால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைப் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படாதது ஏன் என்பது எமது கேள்வியாக இருக்கிறது. சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி நிலை, அவரது ஓய்வூதியம் போன்றவற்றைப் பறித்து, அவரை சிறை வைத்ததன் மூலம் அரசாங்கம் படையினரைக் கணக்கில் எடுக்காமல் மதிக்குகாமலுமே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இராணுவ சட்டத்தின் கீழ் இரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு எனது கையெடுத்திட்டு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதேபோல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்தி கையெழுத்திடும் மக்கள் மனுவுக்கு நான் உட்பட பலரும் கையெழுத்திட்டோம். அப்படி என்றால் சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானவையே. உண்மையில் சரத் பொன்சேகா மட்டுமன்றி இந்த நாட்டின் சகல மக்களுமே அரசியல் கைதிகள் தான். சரத் பொன்சேகா வெலிக்கடையில் அரசியல் கைதியாக இருப்பதுடன், நாம் அனைவரும் இலங்கை எனும் தீவினுள் அரசியல் கைதிகளாக இருக்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

sri.jpgசட்ட விரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு

mahinda.jpgபோதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கள், பிரதேசங்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 425 பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்படி விசேட வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போதே பொலிஸ் மா அதிபர் மேற்படி பணிப்பை விடுத்தார். கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த உயர் மட்ட மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ண, கே. பி. பி. பத்திரண, கொழும்பு பிராந் தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச். எம். டி. ஹேரத் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 35 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது. நாட்டிலுள்ள 39 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் மூலம் 425 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக இந்த விசேட திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. நாட்டில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் வெகு விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினது ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டங்களை தீட்டியுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு விசேட பொலிஸ் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை தரும் லேகியம் போன்ற போதைப் பொருளின் பாவனைகளே இலங்கையில் அதிகம் காணப்படுகின்றன.

போதைப் பொருள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களும் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் முற்றுகையிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை வெற்றியடைய குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளை காண பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.சுமார் ஒருவார காலத்தில் உயர் அதிகாரிகளுடன் இது போன்ற சந்திப்பை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாதாந்தம் இந்த திட்ட நடைமுறை தொடர்பாக மீளாய்வுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜீ.எல். இன்று பிரித்தானியா பயணம்

g-l-peiris.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.லண்டன் நகரில் சர்வதேச மூலோபாய கற்கை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்வில் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வு நாளை 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைப்பின் செயலாளர் வில்லியம் ஹெக்கின் விசேட அழைப்பின் பேரில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்படி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவில் புதிய அரசு ஆட்சியமைத்ததன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

அங்கு தங்கியுள்ள காலங்களில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் உட்பட மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவுடனும் அவர் விசேட கலந்துரை யாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 இடங்களில் இன்று மின்வெட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 18 ஆம் திகதி 42 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்சா சபை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வாழைச்சேனை, கருவாக்கேணி, சுங்காங்கேணி, கிண்ணையடி, கும்புறுமூலை, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்பட்டிச்சேனை, கறடியனாறு, மரப்பாலம், ராஜபுரம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பங் கேணி, ஐயங்கேணி, மிச்நகர், தளவாய், மீராகேணி, சதாம்குசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, களுவண்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, வுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, பிள்ளையாரடி, ஊறணி ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.