செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சி கிணற்றுக்குள் இருந்து எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சியில் கிணறு ஒன்றிற்குள்ளிருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர் அவரது கிணற்றை துப்பரவு செய்து கொண்டிருந்த போது இரண்டு எறிகணைகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள படையினரிடம் தகவல் தெரிவித்தார் படையினர் அவ்விடத்திற்குச் சென்று மேலும் கிணற்றிலுள்ள சேற்றினை அகழ்ந்த போது 14 வரையிலான எறிகணைகள் அக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.

கடந்த யுத்தத்தின் போது படையினர் அப்பகுதிகளை கைப்பற்ற முன்னேறிய நிலையில் அப்பகுதியிலிருந்த புலிகள் அக்கிணற்றிற்குள் தாங்கள் வைத்திருந்த எறிகணைகளை போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என படையினர் தெரிவித்தனர்.

முகமாலைப் பகுதிகளில் அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தாமதம்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் இன்னமும் மிதிவெடி, கண்ணிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் இப்பகுதிகள் புலிகளின் பகுதிக்கும் படையினர் நிலைகொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக அமைந்திருந்த படியினால் அதிகளவு மிதிவெடிகள் இப்பகதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவரும் நிலையில் பளைக்கு அப்பாலுள்ள இப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது சிரமமானதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அடுத்தமாத நடுப்பகுதியில் இவ்வெடிபொருட்கள் அகற்றப்பட்டு பளையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள் வவுனியாவில் குண்டு வெடிப்பு!

president.jpgஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள்- நேற்றிரவு வவுனியாவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நகரின் மில்வீதியில் நேற்று திங்கள் கிழமை இரவு 9.30 மணியளிவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் சத்தத்துடன் இக்குண்டு வெடித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் வீதியில் நின்ற வாகனம் ஒன்றிலிருந்தே இக்குண்டு வெடித்ததாக குறிப்பிட்டனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘பிராடோ’ரக வாகனம் ஒன்றிற்குள்ளிருந்து இக்குண்டு வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், வாகனத்திற்குள் கைக்குண்டு எறியப்பட்டதால் இது நிகழ்ந்ததெனவும் தனிப்பிட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதென்றும் பலவாறாக இக்குண்டு வெடிப்புச்சம்பவம் குறித்து பேசப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அபிவிருந்தி தொடர்பான கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் நிலையில் எற்கனவே போடப்பட்ட பாதுகாப்பிற்கும் மேலாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. 

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

parliament.jpgஅவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை 99 மேலதிக வாக்குகளால் பாராளுன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை பிரதம் டி.மு.ஜயரட்ன இன்று பாராளுமன்றில் சமர்பித்தார். அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதன் பின்னர் இன்று மாலை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு ஆதரவாக 118 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பெறப்பட்டன.

காத்தான்குடியில் மற்றுமொரு முதலை பிடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியிலிருந்துகொண்டு பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று மதியம் இம்முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொது மக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர்.

இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

October 18 2010

மட்டக்களப்பு வாவியில் முதலைகளால் தொல்லை. 

மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அம்பலாந்துறை வாவியோரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளது.  இதனையடுத்து 12 அடி நீளமான முதலையொன்று மீனவர்களால் வலை போட்டுப் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது  சடலம் மீட்கப்பட்டது. காத்தான்குடி வாவியிலும் முதலைகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொறுப்புள்ள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்தர் லெப்பை மொகமட் பரீட் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு – கைத்தொலைபேசிகள், பற்றரிகள், கஞ்சா சுருட்டுகள் மீட்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விசேட குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலு ள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழு ம்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோத னையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்த ப்பட்ட திடீர் சோதனை நடவடி க்கையின் போது தடுத்து வைக்கப் பட்டிருந்த 464 பெண்கள் சோத னைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனையின் போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையடக்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன் படுத்தப்படும் ஹீட்டர்கள் என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர். மேற்படி பொருட்கள் சிறைச் சாலைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதாந்தம் 10 கோடி ரூபா செலவு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மாதம் தோறும் 10 கோடி ருபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாக இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 மே மாதம் தொடக்கம் இவ்வாறு செலவிடப்பட்டதாகவும்,  முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இச்செலவினம் 6 கோடி 50 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 4500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் மேலும் 1500 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை ‘எயர்ரெல்’ நிறுவனம் வழங்குகிறது.

Jaffna_Hospitalஇன்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கிளையை ஆரம்பிக்கும் ‘எயர்ரெல்’ நிறுவனம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 30 சக்கர கதிரைகளை அனபளிப்பு செய்கிறது.

யாழ். வைத்தியசாலை நிர்வாகம் யாழ். வணிகர் கழகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்தே வணிகர் கழகத்தின் முயற்சியால் இச்சக்கர கதிரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. நிகழ்வில் இதனை ‘எயர்ரெல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாழ். வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நகை வியாபாரியைக் கடத்தி கப்பம் பெற்ற இராணுவ மேஜரும் இருவரும் பிடிபட்டனர்.

கொழும்பில் தமிழ் நகை வியாபாரி ஒருவரைக் கடத்தி 50 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இராணுவ மேஜர் ஒருவரும், அவரது உதவியாளர்கள் இருவருமே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது – இந்த நகை வியாபாரி ஏற்கனவே இதே சந்தேக நபர்களால் கடத்தப்பட்டவர். இவர் 20 மில்லியன் ரூபாவை கப்பமாகச் செலுத்தியே விடுவிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவரது மகனை காரில் பாடசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இதே குழுவினரால் மீண்டும் கடத்தப்பட்டார். அவரது மகனான சிறுவனை விடுவித்த கடத்தல் காரர் நகைக் கடை உரிமையாளரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெருந்தொகைக் கப்பம் கேட்டுள்ளனர்.

அவ்வளவு பெரிய தொகையை செலுத்தவது சாத்தியமில்லை எனவும், கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் அதனைக் கொடுக்க முடியும் எனவும், அடுத்த நாளே பணத்தைக் கொடுக்க முடியும் எனவும் கடத்தப்பட்டவரின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் பொலிஸாருக்குத் தெரிய வந்தால் வர்த்தகர் கொலை செய்யப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், நகை வியாபாரி கொழும்பிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றிலிருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள அங்கு வரும் படி தெரிவித்துள்ளார்.

இதே சமயம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சாதாரண உடையில் அங்கு காத்திருந்துள்ளனர். கடத்தில் குழுவைச் சேர்ந்த இராணுவ மேஜர் மருத்துவமனையின் மேல் மாடியிலிருந்த நகை வியாபாரியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டாh. கீழ் மாடியில் காத்திருந்த அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனா. வெளியில் வாகனம் ஒன்றில் காத்திருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் தப்பியோடிவிட்டனர். அவ்விருவரையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

குக்குலேகம தோட்ட மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ முடியாத அச்சநிலை எற்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.

Sivajilingam M K Presidential Candidateஇரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல குகுலேகம தோட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அத்தோட்டத்திற்குச் சென்றுள்ள போதும், அவர்கள் தொடர்ந்தும் அத்தோட்டத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று வந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அங்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அத்தோட்டத்திலுள்ள மக்களிடம் கலந்துரையாடியதாகவும் அம்மக்கள் அத்தோட்டத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 குடும்பங்கள் மட்டுமே அத்தோட்ட குடியிருப்பிற்குத் திரும்பி உள்ளதாகவும், அவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளதாகவும், அங்குள்ள தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உடமைகளும் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே தம்மை வந்து பார்வையிட்டதாகவும், வேறு எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ தம்மை வந்து பார்க்கவில்லை எனவும் அம்மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News and Articles:

குக்குலெகம தமிழ் குடும்பங்கள் குடியிருப்பிற்குத் திரும்பின. நட்டஈடு பெற்றுக் கொடுக்க வாசுதேவ நடவடிக்கை.

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!