செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

parliament001.jpgகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,  கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு பவள் கவச வாகனங்களில்

parliament002.jpgபாராளு மன்றத்திற்குச் செல்லும் பாதை இன்று பெய்த அடைமழையால் முற்றாக மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் படகில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.  பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் மூன்றடிக்கும் உயரமான நீர் நிரம்பி அப்பிரதேசமெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் கூட தாமதித்தே ஆரம்பமாகியிருந்தன.

பாராளுமன்றத்திற்கு தரை வழியாக செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் இராணுவமும், கடற்படையும் அவர்களுக்கு உதவ முன்வந்தன. அதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படகு மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்றனர். இன்னும் சிலர் இராணுவத்தின் உயரமான பவள் கவச வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.  இவ்வாறாக பல சிரமங்களின் மத்தியில் பாராளுமன்றத்தைச் சென்றடைந்த போது மழை காரணமாக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வர பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வேறு வழியின்றி பாராளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வீடியோ கமெராக்களின் ஒளியில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. எட்டு நிமிடங்களுடன் பாராளுமன்ற அமர்வு முற்றுப் பெற்றது.

parliament000.jpg

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகமார்

Imelda_Sugumar_GA_Jaffna”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்து உள்ளார். சிறுவர், முதயோர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதேசச் செயலாளர் திருமதி தே பாபு தலைமை தாங்கினார்.

Imelda_Sugumar_at_Children_Dayஇதே போன்ற பெண் மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலர் மீதும் சுமத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.  ‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

அரசாங்க அதிபர் ஒரு பெண் என்பதனாலும் தற்போது ஏற்பட்டு வரும் நம்பிக்கை காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே கொண்டு வர முற்பட்டு உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள் வெளிவரலாம் என சமூகவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும். இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தின் 57வது அரசாங்க அதிபர். இவர் உத்தியோகத் தர வரிசையில் இலங்கையில் உள்ள 50 தரமான உத்தியோகஸ்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் சிறுவர்களின் நிலை மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்த அவர் அதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொண்டு நிறுவனங்கள் – உடனடியாகப் பதியுமாறு உத்தரவு

இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

 இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

மாலை 5-6.30 மணிவரையே இனிமேல் யாழ். நூலகத்தைப் பார்வையிட முடியும்

யாழ்ப்பாண பொது நூலகத்தை பார்வையிடச் செல்வோர் இனிமேல் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையிலேயே அங்கு செல்ல அனுமதிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 25 பேரடங்கிய குழுவினருக்கே அனுமதி வழங்கப்படும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தலைமை நூலகர் மற்றும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.வட பகுதிக்கு வெளியே இருந்து நூலகத்துக்கு வருகைதரும் அதிக எண்ணிக்கையானோரால் ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும் பணி தொடரும்

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடெங்கிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் நாட்டில் மீண்டுமொறு தடவை பயங்கரவாதம் தலை தூக்க முடியாத வகையில் சகல பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்று பகல் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் அவசரகாலச் சட்ட பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பில் ஆங்காங்கே நகரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த காவலரண்கள், மூடப்பட்டிருந்த வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான வசதிகளை படிப்படியாக செய்து கொடுக்க தீர்மானித்து இருப்பதுடன் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியும் முல்லைத்தீவு பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. பரந்தன், முல்லைத்தீவு வீதியில் நெற் களஞ்சியத்திலும் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அக்டோபர் 29 ஆம் திகதி வவுனியாவிலும் பீரங்கிக் குண்டுகளும் மீட்கப்பட்டன. அக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மலையகத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும், தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்க வேண்டியுள்ளது.

தொலைபேசிகள், உதிரிப்பாகங்களை கடத்திவர முயன்றவர் கைது

air-port.jpgமூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளையும் அதன் உதிரிப்பாகங்களையும் சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். “தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை சுங்க அதிகாரிகளுக்கு வழங்காது சந்தேக நபர் வெளியேற முயற்சி செய்தபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுங்க அதிகாரிகளுக்கு தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்காது வெளியேறுவதை அவதானித்த சுங்கப் பிரதிப் பணிப்பாளர் லாலித வீரசிங்க குறித்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கையடக்கத் தொலைபேசிகளும், அதன் உதிரிப்பாகங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. டுபாய் நாட்டிலிருந்து வருகை தந்த ‘மிஹின் லங்கா எம் ஜே 402’ என்ற விமானத்தில் பயணம் செய்து இந்நபர் நேற்று காலையில் காட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்நபர் அடிக்கடி டுபாய் நாட்டுக்குச் சென்று வந்துள்ளார் என்று சுங்க அதிகாரிகளின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நபர் எடுத்து வந்த பொருட்களில் 125 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய உதிரிப்பாகங்கள் அடங்களான பல இலத்திரனியல் பொருட்கள் அடங்கியுள்ளன.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை

தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தரக்குறைவான மருந்துகளை ஏற்கனவே இறக்குமதி செய்து விநியோகித்திருந்தவர்க ளிடமிருந்து நஷ்ட ஈடுகளையும் சுகாதார அமைச்சு அறவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜயசேக்கர சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். டெண்டர் மூலம் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முதலில் தரமான மருந்து வகைகளை மாதிரிகளாக காண்பி த்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் போது தரக்குறைவான மருந்து வகைகளை விநியோகித்தும் உள்ளன.

இதனால் இந் நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக நஷ்ட ஈடுகளை அறவிட்டும் உள்ளோம். அத்துடன் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வது இனியும் கண்டுபிடிக்க ப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார்.

அத்துடன் தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் விடயத்தில் டெண்டர் சபையின் அதிகாரிகள் எவரேனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.