செய்திகள்

செய்திகள்

செய்திகள்

”தமிழ் மக்களின் நலன் கருதி ஏனைய தமிழ் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயார்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

TNAதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த யுத்தம் நடைபெற்ற காலங்களில் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிய போது பல சிக்கல்களுக்கு மத்தியில் 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த இந்த தொண்டர்  அசிரியர்கள் வேறு தொழில்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்க வில்லை எனக்கூறுகின்றனர். ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவித்துள்ள இத்தொண்டர் ஆசிரியர்கள்  தங்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது.

Douglas Devanandaமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல வீதிகள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. சீன நிறுவனமொன்றினால் இவை புனரமைக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு – பு ல்மோட்டை வீதி, அகியனவே இவ்வாறு புனரமைக்கப்படவள்ளன. இதற்கான ஆரம்ப நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் கொத்தலாவல, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, சிறிரங்கா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர் சடலமாக மீட்பு.

யாழ். புலோலி தெற்கில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை புலோலித் தெற்கைச் சேர்ந்த வடிவேல் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று மாலை மந்திகை அம்மன் கோவில் பகுதியிலுள்ளவர்களால் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டள்ளது. இச் சடலம் பின்னர் காணாமல் போன் குறித்த நபரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

சடலத்தை பொலிஸார் மீpட்டெடுத்த மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை சட்ட நடவடிக்கை எதையும் இன்னும் மேற்கொள்ளவில்லை.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமிறி குடியேறியுள்ள விடயம் குறித்து நடவடிக்கை எடுக்குமுகமாக வீடமைப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் றோயல் ஜெயச்சந்திரன் அதன் கொழும்பு தலைமையகத்திற்கு கடிதம் எழுதி இரண்டு வாரங்களாகியும் இதற்கு சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைமை அலவலகத்திலிருந்து தமக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம், வவுனியா, உட்பட வடக்கிலுள்ள அதன் அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள இந்த அலுவலகங்களை எப்போது மூடுவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை எனவும், அரசாங்கத்தோடு கலந்துரையாடி எப்போது மூடுவது என முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார். ஆனால் மன்னாரிலுள்ள அலுவலகம் இம்மாத இறுதியில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வடக்கிலுள்ள அலுவலகங்கள் மூடப்பட்டதும் கொழும்பிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வடக்கின் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான அறிவைப் மக்கள் மத்தியில் பரப்பியதற்காக கலாநிதி மிகுந்தனுக்கு தேசிய விருது.

யாழ்.பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறைத்தலைவராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றும் கலாநிதி மிகுந்தனுக்க இவ்வாண்டிற்கான தேசிய விருது (National Award for Popularization of Science) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான அறிவை மக்கள் மத்தியில் பரப்புவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சும், தேசிய விஞ்ஞான மன்றமும், இணைந்து இவ்வருடத்திற்கான தேசிய வீருதை வழங்கியுள்ளன.

கலாநிதி மிகுந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் பணிப்பாளராகவும், யாழ்.விஞ்ஞான சங்கத்தின் இவ்வருடத்திற்குரிய தலைவராகவும் பணியாற்றி வருகின்றனார். அத்துடன் பத்திரிகை சஞ்சிகைகளில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

வடக்கில் மூன்று வர்த்தக மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடபகுதியில் மூன்று வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார், கிளிநொச்சி, வவனியா ஆகிய இடங்களில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும், நடுத்தரத்தைக் கொண்ட தொழில் நடவடிக்கைகள் இந்த வலயங்களில் செயற்படுவதற்கரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும், இந்த வர்த்தக வலயங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வடமாகாண உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யாழ். இராணுவத் தளபதிக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

Mahinda_Hathurusinghe_Major_Generalயாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சமாதானத்திற்கான விருது பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் பயிற்சிகளைப் பெற்றுத் திரும்பிய பின்னர் வன்னியில் அவர் கடமையாற்றினார். வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி பிலிப்பைனஸில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிற்கு பயணமாகின்றார். விருது பெற்று நாடு திரும்பியதும், எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கொழும்பு மண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வைத்து அவருக்கு பாராட்டு நிகழ்வு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

K Thevathasanதிரு. மனோ கணேசன் எம். பி. மற்றும் திரு. குமரகுருபரன் ஆகியோர் திரு. தேவதாசனின் கோரிக்கையை நீதி அமைச்சர் திரு. அத்தாவுட செனிவிரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்பின் பேரில் நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள் நியூ மகசின் சிறைச்சாலைக்குச் சென்று தேவதாசனைச் சந்தித்தனர். அவரது கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி மொழி அளித்து உண்ணாவிரதத்தைக் கை விடும்படி கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தேவதாசனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து செல்வதைக் கண்ட சக அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தைக் கை விடும்படி அவரை வலிந்து வற்புறுத்தியதை தொடர்ந்து நேற்று 20-11-2010 இலங்கை நேரம் பிற்பகல் 3:00 மணிக்கு தேவதாசன் பழரசம் அருந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் (இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்) வருடக் கணக்காக விசாரணையின்றி தடுத்துவைக்கப் பட்டுள்ள நிலையை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவதும் இக்கொடும் சட்டத்தை இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கி நாட்டின் அனைத்து மக்களும் உண்மையான சுதந்திரத்துடன் வாழ உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை மக்கள் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி தனக்கும் சக அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்க உதவ வேண்டும் என்பதே தனது பணிவான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

Related News:

தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். 

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!