முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை வீட்டில் , வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
பிரித்தானியாவில் ஜனவரி மாத நடுப்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் பெருந் தொற்றினால், 51ஆயிரத்து 870பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி 55,553பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 53இலட்சத்து 32ஆயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டு இலட்சத்து 18ஆயிரத்து 421பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 85ஆயிரத்து 308பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கிரீஸ் நாட்டு மொத்த மக்கள் தொகையில் இதுவரை 41 சதவிகிதம் பேருக்கு கொரோனா வைரஸ் இரண்டு தவணை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளது.
அதனால் மருத்துவப் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்திக்கொள்வது தனிநபர் விருப்பம் என்றும், மதச் சட்டங்களுக்கு அது எதிரானது என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மருத்துவப் பணியாளர்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் கண்டிப்பாக ஊதியமற்ற விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் முழு படையும் வெளியேறி விடும்.
அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.
இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள 400 மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக அரச தகவல்கள் கூறுகின்றன.
ஆங்காங்கே அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவு வதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.
பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.
தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.
மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.
யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.
சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.
யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ர்களின் அரசியல் தீர்வுக்காக பேசப்பட்டது என எத்தனையோ சந்திப்புக்கள் நடந்தாகிவிட்டது. இன்று வரை அந்த தீர்வு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்புடன் உள்ள தமிழ் அரசியல்தலைவர்கள் இவர்களுடைய விமர்சனங்களுக்கு நடுவிலும் ஏதோ சிலவற்றை தானும் மக்களுக்காக செய்து முடித்துவிட்டனர். ஆனால் இந்த தமிழ்தேசியம் பேசுவோர் மட்டும் இன்னமும் துரோகி பட்டம் சூட்டிக்கொண்டும் – இந்தியாவும் சர்வதேசமும் ஏதாவது செய்யும் என்ற மாயையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் கூறும் சர்வதேச சட்டங்கள் என்ன தீர்வை வழங்கிவிட்டன என்று தான் தெரியவில்லை. அண்மையில் கூட வரிச்சலுகை தரமாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை கடிந்து கொண்டது. ஆனால் இலங்கையின் அரசு அதை சட்டைசெய்ததாகவே தெரியவில்லை.
தமிழர்களுக்கு அரசியல் சார்ந்து ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமாயின் தமிழ்தலைமைகள் பேச வேண்டியது அமெரிக்காவுடனோ – இந்தியாவுடனோ – சர்வதேசத்துடனோ அல்ல. இலங்கையின் அரசாங்கத்திடம் பேச வேண்டும். கடந்த நல்லாட்சி கால அரசில் இவர்களால் ஒரு அரசியல்கைதியையாவது விடுவிக்க முடிந்ததா..? இல்லையே.
வீணாக மக்களை இன்னமும் மகிந்த தரப்பு எதிரிகள் என்ற விம்பத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது இருப்பதே இவர்களுடைய முக்கியமான இலக்கு போல் தோன்றுகிறது. சில வேளை இருக்கக்கூடும். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டால் இவர்கள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் ..? என நாடாளுமன்றில் சுரேன் ராகவன் கேட்டது தான் நினைவிற்கு வருகிறது..!
யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.
மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.
இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.
பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம் இராணுவத்கைத பயன்படுத்தி அடக்கியதுடன் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் கையாண்டு வருகின்றது.
இந்த நிலையில் கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கியூபா குற்றம் சுமத்தியுள்ளது. கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைச் சில நாட்களுக்கு முன்னர் கியூபா அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே கியூபாவில் போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரும் அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
‘ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார்.
இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.
இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.









