இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மீண்டும் மோசமானது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை – ஆராரோ ஆராரோ – எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் – உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டி, சிறுவனை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.
சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு வழங்கப்பட்டது. கைப்பேசி மற்றம் கெமரா மூலம் சிறுவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த சிறுவனை மீட்கும் நடவடிக்கையானது உலக நாடுகள் முழுவதினதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவனை உயிருடன் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் ரயான் உயிரிழந்து விட்டதாக இரண்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அத்துடன் மொரோக்கோ நாட்டின் மன்னர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு ரயானின் பெற்றோரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ரயானுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.
“இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம்.” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் ஊடகங்களுக்கு தெரிவித்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்இ. மேலும் பேசிய அவர்,
சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம்.
சீனா, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. அதற்கு ஒலிம்பிக் தீபம் ஏந்திச்செல்ல குய் பபோவா என்ற ராணுவ அதிகாரியை தேர்ந்தெடுத்துள்ளது. அவர், கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்திய சீன ராணுவ படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். அதனால் அவரை தேர்வு செய்ததற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 2 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்கோ ருபியோ என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-
பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா அரசியல் ஆக்குவதை நிரூபிக்க மற்றொரு உதாரணம் கிடைத்துள்ளது. இந்திய படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. திட்டமிட்டே ஆத்திரத்தை தூண்டுவதாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஜிம் ரிஸ்ச் என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவரை ஒலிம்பிக் தீபம் ஏந்த சீனா தேர்வு செய்திருப்பது வெட்கக்கேடானது. உய்குர் இனத்தினருக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்து வருகிறது. அவர்களின் விடுதலைக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஆதரவாக அமெரிக்கா செயல்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.
வியாழக்கிழமை, தலைமைப் பணியாளர் டான் ரோசன்ஃபீல்ட் மற்றும் மூத்த சிவில் ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் ஆகியோரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் ஜோன்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த உயர்மட்ட உதவியாளர்களின் இந்த இராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல், ‘சமீபத்திய வாரங்கள் எனது குடும்ப வாழ்க்கையில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.
10ஆம் எண் அலுவலக செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், ‘ரோசன்ஃபீல்ட் தனது இராஜினாமாவை வியாழக்கிழமை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் வரை அவர் தொடர்ந்து பணியில் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முதன்மை தனிப்பட்ட செயலாளரான ரெனால்ட்ஸ், பின்னர் வெளியுறவு அலுவலகத்தில் ஒரு பணியை தொடருவார்.
களுதாவளையிலிருநது பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 27 ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 27
தேசம்: பின்தள மாநாடு பற்றிய உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்ப நீங்கள் அறிக்கை ஒன்று விட்டிருக்கிறீர்கள். அதாவது கட்சியிலிருந்து உமா மகேஸ்வரனை கிட்டத்தட்ட வெளியேற்றி உள்ளீர்கள். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது? உமாமகேஸ்வரன் எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுறார்?
அசோக்: ரியாக்சன் பயங்கரமாக இருந்தது. தெரியும்தானே அறிக்கைகள் எல்லாம் பத்திரிகைகளில் வந்துவிட்டது. முகுந்தனுக்கு பெரிய பிரச்சினையாக போய்விட்டது. மாநாட்டை குழப்புவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அடுத்தது அவருடைய எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் நாங்கள் வெளியேறிவிட்டோம். வெளியேறி மெட்ராஸ் போய்விட்டோம். அங்க எங்களுக்கு பாதுகாப்பு டேவிட் ஐயா ஆட்கள்தான் செய்கிறார்கள்.
தேசம்: பாதுகாப்பு தாறத்துக்கு டேவிட் ஐயாட்ட என்ன இருக்கு…
அசோக்: அதுதான் வாரேன்.
எங்களிட்ட பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் நாட்டிலிருந்து போன ஆட்கள் தானே. எங்களிட்ட பாதுகாப்புக்கான எதுவும் இல்லை. டேவிட் ஐயா, சரோஜினி, சண்முகலிங்கம், தங்கராஜா தோழர், ஜூலி, ஆட்களெல்லாம் ராஜனோடு உறவாக இருக்கிறார்கள். ராஜனோடு கதைக்கிறார்கள். இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி. ராஜன் எங்களுக்கான பாதுகாப்பை வழங்க ஒத்துக் கொள்கிறார். அதற்கான முழு முயற்சியும் டேவிட் ஐயா, சண்முகலிங்கம், சரோஜினி ஆட்கள்தான் செய்தவர்கள்.
அப்போ ராஜனோடு கதைக்கிறோம், பின்தள மாநாடு நடத்துவது பற்றி. ராஜன் சொல்கிறார், நீங்கள் பின்தள மாநாடு நடத்துவதற்கான சகல பாதுகாப்பும் செய்து தரப்படும். நீங்கள் மாநாட்டில் சுயமாக முடிவு எடுத்தீர்கள் என்றால், அந்த அந்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், யோசிப்போம் என்று. அப்போ நாங்கள் பின்தள மாநாட்டுக்கான எல்லா வேலைகளையும் செய்கிறோம்.
இது தஞ்சாவூர்ல ஒரு கல்யாண மண்டபத்தில் நான் நினைக்கிறேன் ஓகஸ்ட் கடைசி பகுதியில் மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். அந்த நேரம் கேம்பிலிருந்து நிறைய தோழர்கள் வெளியேறிவிட்டார்கள். எங்களோடும் கொஞ்சத் தோழர்கள் வந்துவிட்டார்கள். அவங்களையும் ஒரு இடத்தில நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அதுக்கும் ராஜன் தான் பாதுகாப்பு தந்தது. அதுக்குப்பிறகு ராஜனோடு நிறைய தோழர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். வெளியேறி வந்த தோழர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டதோழர்களோடு இந்த பின்தள மாநாடு நடக்கிறது.
மூன்று நாட்கள் நடாத்தி உத்தியோகபூர்வமாக நாங்கள் தான் புளொட் என்று டிக்லேர் பண்ணுறோம். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட பின் தளக் கமிட்டி தெரிவு செய்யப்படுகிறது.
முகுந்தனோடு சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுல சில கொலைகள் வெளிப்படையாக கதைக்கப்பட்டது. கேம்பிலிருந்த தோழர்கள் தானே. அப்போ அவங்களுக்கு என்ன என்ன கொலைகள் நடந்தது என்று தெரியும். அந்தக் கொலைகள் தொடர்பாக காக்கா, சந்ததியார் … இது தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்டு முகுந்தன், சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாசன், வாசுதேவா, கண்ணன் இவ்வளவு பேரையும் புளொட்டில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றும், தளக்கமிட்டியும் பின் தளக்கமிட்டியும் புதிய மத்திய குழுவை தெரிவு செய்யும் என்றும், நாங்கள்தான் புளொட் என்று உரிமை கோரி ஒரு அறிக்கை விட்டு, இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில நடத்துறோம்.
இந்த பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்டது தீபநேசன், பிரசாத், கௌரிகாந்தன், ஈஸ்வரன், சண்முகலிங்கம், தங்க ராஜா, ஆதவன், ஜெயபாலன், துரைசிங்கம் , சத்தியன், கவாஸ்கர், எல்லாளன். அந்த பத்திரிகை மாநாட்டு அறிக்கை எல்லா பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது.
தேசம்: என்னத்துக்காக வெளியேறுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டு…
அசோக்: ஓம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அந்த சந்திப்பு, அறிக்கை எல்லாம் வருகிறது. வந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் மீதான விசாரணையை ரோவும், கியூ பிரான்ஜூசும் தொடங்கிவிட்டது. கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கிட்டாங்க. ஏன்னென்றால் முகுந்தன் சொல்லிட்டார் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் என்று சொல்லி. வங்கம் தந்த பாடம் நாங்கள்தான் வெளியிட்டோம் என்று சொல்லியும், நாங்கள் மாவோயிஸ்டுகள், சீனச்சார்பானவர்கள் என்று சொல்லியும் புளொட்டை திட்டமிட்டு உடைக்கிறோம் என்று சொல்லியும் இந்த உளவுத்துறைகளுக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போ கியூ பிரான்ஜூசும், ரோவும் எங்களை விசாரித்தது. அவங்க சொன்னவங்க நீங்கள் புளொட் என்று உரிமை கோர இயலாது. புளொட் என்டுறது முகுந்தன் தான். நாங்கள் உரிமை கோர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
தேசம்: உளவுத்துறை வந்து பயப்பிடுத்துவது என்பது…
அசோக்: எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. ஸ்தம்பிதம் அடைந்து விட்டோம் . அதுக்குப் பிறகு தோழர்கள் உளவியல் ரீதியாக நிறைய பலவீனமடையத் தொடங்கி விட்டார்கள். நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்ட நகர்வை எப்படி தொடர்வது என்பது பற்றி நிறைய குழப்பங்கள்.
அடுத்தது ஒரு உறுதியற்ற தன்மை..
தேசம்: எதிர்பாக்கல நீங்கள்…
அசோக்: எதிர்பாக்கல. உறுதியற்ற தன்மை வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியல, ஸ்தம்பிதம் அடைந்திட்டம். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் பேசாம இருக்கிறோம்.
தேசம்: இந்த இடைப்பட்ட காலத்தில் ஜூனில் இருந்து ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ஏதாவது உமாமகேஸ்வரன் தலைமையிலான அணியால் ஏதாவது…
அசோக்: ஓம் நிறைய பயமுறுத்தல்கள். வெளியில போக இயலாது. எனக்கெல்லாம் அனுபவம் இருக்கு. நானும் ஆதவன் தோழரும் வீடு பார்க்க வெளியில போகேக்க மாணிக்கதாசன் குரூப் ஆட்கள் வந்து நீங்கள் இங்கே வீடு பார்க்க இயலாது இது எங்க ஏரியா என்று சொன்னார்கள். எச்சரிக்கை செய்தாங்க. உண்மையில் நாங்க வீடுபார்த்த ஏரியாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லை.
ஒரு தடவை சென்னையில் தியேட்டர் ஒன்றுக்கு நான் போயிட்டு இருக்கும்போது மாணிக்கதாசன் கண்டிட்டார். அது அவங்க ஆபீசுக்கு பக்கத்தில் தான் அந்த தியேட்டர். அப்போ மாணிக்கதாசன் என்னோட பிரச்சினைப்பட்டு கொண்டிருந்த அந்த நேரம் தற்செயலாக அது ஆபிஸ் தெரு என்றதால் யோதிஸ்வரன் கண்ணன் வந்தவர். மாணிக்கதாசன் என்னோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டிட்டார். அதுல அவருக்கும் மாணிக்கதாசனுக்கும் பிரச்சனை. நீ தான் எல்லாத்துக்கும் பிரச்சனை; அவர்கள் வெளியேறினால் வெளியேறிப்போட்டு இருக்காங்க, ஏன் நீ அவங்களோட முரண்படுகிறாய் என்று. அப்படி எல்லாம் பிரச்சினை நடந்திருக்கு.
தேசம்: அந்தக் கட்டத்தில் யோகீஸ்வரன் உமாமகேஸ்வரனோடு தான் இருக்கிறார்?
அசோக்: உமாமகேஸ்வரனோடுயிருக்கிறார். அவர் கொஞ்சம் நியாயம் கொண்டவர். நாங்க வெளியேறிய பின் பல தடவை அவரை சந்தித்து கதைத்திருக்கிறன். இது பற்றி சென்ற உரையாடல்களில் கதைத்திருக்கிறன்.
தேசம்: நீங்கள் பெரும்பாலும் இதில் ஓரளவு முற்போக்கான ஆட்கள் அல்லது அரசியல் மாறுபட்ட சிந்தனை உடைய ஆட்கள் முழுமையாக வெளியேறிட்டீர்கள். அதுக்கு பிறகு புளொட்டில் இருக்கிறதெல்லாம் யார் இருந்தது உமாமகேஸ்வரனோடு?
அசோக்: புளொட்டில் இருந்த தோழர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. பயத்தில்தான் இருந்தவர்கள் அவர்கள். வெளியேற முடியாது. அடுத்தது பல்வேறு நெருக்கடி, தோழர்கள் பாவங்கள்.
தேசம்: நான் குறிப்பாக கேட்பது முக்கியமான ஆட்கள்.
அசோக்: முக்கியமான ஆட்கள் அந்த ஐந்து பேரும் தான். முகுந்தன், சங்கிலி, மாணிக்கதாசன், வாசுதேவா அடுத்தது படைத்துறைச் செயலாளர் கண்ணன். வாசுதேவாவும் கண்ணன் மாதிரி அதிருப்தியோடுதான் இருந்தவர்.
தேசம்: அப்போ அதுக்குள்ளே இருந்த குறிப்பாக முகுந்தன்…
அசோக்: சங்கிலி கந்தசாமி, முகுந்தன், மாணிக்கதாசன் 3 பேரும்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள்.
தேசம்: சரியான துரதிருஷ்டம் என்னவென்றால் இவ்வளவு பேர் எதிர்த்தும் அதை செய்ய முடியாமல் போனது. அது உண்மையிலேயே முற்போக்குப் பாத்திரம் வகித்தவர்களுடைய ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.
அசோக்: நான் புளொட் தோழர்களே எல்லாம் காணும்போது யோசிப்பேன். நாங்க எல்லாம் நிறைய ஃபைட் பண்ணி இருக்கலாம். புளொட்டின் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்களை குற்றஞ்சாட்டி போட்டு போக இயலாது. நாங்கள் ஒவ்வொரு ஆளும் பொறுப்பு கூறவேண்டிய அவசியம் இருக்கு. அதனால்தான் நான் இதைப்பற்றி கதைக்காமல் இருந்தேன். என் தொடர்பாக எனக்கே விமர்சனங்கள் இருந்தன.
தேசம்: முன்னணி தோழர்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரம் எடுக்க வேண்டிய தேவை இருக்குதானே. அவர்கள்தானே தலைமையை கொடுத்திருக்க வேண்டும்.
அசோக்: கட்டாயம்.
தேசம்: அப்போ நீங்கள் உமாமகேஸ்வரன் தலைமையிலான அந்த ஐந்து பேரையும் வெளியேற்றிய பிறகு நீங்கள் தான் புளொட் என்று அறிவித்த பிறகு உளவுத்துறை பயமுறுத்தலை விட்டவுடன் எல்லாம் ஈடாடிப்போச்சு.
அசோக்: அந்த நேரத்தில் மௌன நிலை தான், பேசாம இருந்த காலகட்டம். பிறகு தோழர் டக்லஸ் ஆட்கள் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இலிருந்து உடைந்து அவங்க தனியாக போய் இருக்கிறார்கள். அவங்களோடு பல்வேறு முற்போக்கான சக்திகள் எல்லாரும் இருக்கிறார்கள். ஈரோஸ் இருந்து பிரிந்த சில தோழர்களும் இருக்கிறார்கள். பார்த்திபன் இதயச்சந்திரன் இருக்கிறார். என் எல் எப் ரீயில் இருந்து பிரிந்த தோழர் ஒருவரும் அவங்களோடு இருந்தாங்க.
தேசம்: இதயச்சந்திரன் லண்டனில் இருக்கிறார்…
அசோக்: ஓம். அப்போ நாங்கள் யோசித்தோம் என்ன என்று கேட்டால் எல்லா சக்திகளும் ஒரு ஜனநாயக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி ஒதுங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் இணைத்து நாங்கள் ஏன் ஜனநாயக பூர்வமான ஒரு அமைப்பை உருவாக்க முடியாது என்று. முதன்முதல் டக்லஸ் தோழருடன் போய்க் கதைக்கிறோம். அப்படி எல்லாருடனும் நாங்க கதைக்கிறோம். எல்லாரும் அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
தேசம்: ரோ உங்களுக்கு ஒரு மிரட்டல் விடுத்த பிறகுதான் நீங்கள் இப்படியொரு முடிவுக்கு வாரீர்கள்.
அசோக்: ஓம். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாறம். ராஜனோடையும் கதைக்கிறம். ராஜனும் சம்மதிக்கிறார். அப்ப நாங்கள் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கமிட்டியை போஃம் பண்ணி நாங்களும், தோழர் டக்ளஸின் பக்கத்தில் குறிப்பாக அற்புதன், அசோக் சந்திரகுமார், பிரேமானந்தா, இப்ராகிம் என்று சொல்லி பத்து பதினைந்து தோழர்கள் ஒரு கமிட்டி போஃம் பண்ணி ஒரு புதிய அமைப்புக்கான யாப்பை உருவாக்குவதற்கு கூடிக் கதைக்கிறோம். அந்தக் கமிட்டியில் ராஜனோ, டக்ளஸோ இல்லை. நாங்கள் கதைத்ததன் பிற்பாடு அவங்களோடயும் கதைக்கிறம் இதுதான் முடிவு. இதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்களா என்று. ராஜனும், டக்ளஸும் ஓகே பண்ணுறாங்க.
அதற்குப் பிறகு மிலிட்டரிகொமிசார், பொலிட்டிக்கல் கொமிசார் என்று ஒரு இடதுசாரி மக்கள் அமைப்புக்கான… இவ்வளவு கால எங்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளல் என்ற படிப்பினையில் 7-8 நாள் இருந்து யாப்பு மற்றும் அமைப்பு வடிவத்தை உருவாக்கின்றோம். அமைப்பு வடிவத்திற்கு பெயர் ஒன்றை வைக்க விரும்புகின்றோம். அதுல டக்ளஸ் தோழர் ஆட்கள் சொல்லிட்டாங்க நாங்க தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. அப்போ நாங்கள் சொன்னம் நீங்களே ஒரு பெயரை தேர்வு செய்யிங்கள் என்று.
தேசம்: டக்ளஸ் தோழர் அப்பவே அதை சொல்லிட்டார்.
அசோக்: ஈழம் என்று சொல்லித்தான் வரவேண்டும் தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம். அற்புதன் ஈஎன்டிஎல்எப் ENDLF என்ற பெயரை உருவாக்குறார். அப்போ ஈழ தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் நாங்கள் ஒன்றாக இணைவது என்று முடிவெடுத்து வேலை செய்கிறோம்.
தேசம்: அற்புதன் தான் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக அதுல ஒரு தொடரையும் எழுதினார். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க இராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நேற்றிரவு எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களையும், நமது கூட்டாளிகளையும் பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்க்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் விமான தாக்குதல் நடத்தப்பட்டபோது, குரேஷி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்துபோனதாகவும், இதில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் போலீசார் அண்மையில் விசாரணையை தொடங்கினர். அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.
அதில் ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜோன்சான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்திய 20 வருடங்களுக்கு மேலான போரை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.கடந்த ஆக்ஸ்ட் மாதம் அந்நாட்டு படைகள் முழுமையாக அங்கிருந்து வெளியேறின. இதை அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்ஸ் கடத்தப்பட்டதன் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது சகோதரி ககோரா மார்க்கை மீட்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் மார்க்கை வீட்டிற்கு அழைத்து வராதது அவர் ஆபத்தில் இருப்பதை உணர்த்துவதாக ககோரா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தலிபான்கள் மார்க்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கர்கள் உள்பட எந்தவொரு அப்பாவி குடிமகனின் பாதுகாப்பையும் அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது, பணயக்கைதிகளாக பிடித்திருப்பது கோழைத்தனமான செயலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.
இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.
கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.
20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.
தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.
உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.
ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.
ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.
இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.
இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும் நிலைமையில் இருக்கின்றனர். ஆப்கானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர். எனவே சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர்.
தாலிபான்களுடன் நடைபெற்ற சண்டையினால் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மிகவும் வறுமையான நாடாகத்தான் இருக்கிறது. ஆப்கான் மக்கள் குழந்தைகளை விற்க முன்வருகின்றனர்.
தங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி வழங்குவதை விரைவுப்படுத்த வேண்டும். ” இவ்வாறு டேவிட் பீஸ்லி தெரிவித்தார்.