மனிதத்துவத்தின் அதி உன்னத நிறுவனமான ஐ.நா.வின் போக்கு ஆழ்ந்த கவலையையும் புதிரையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அப்பாவித் தமிழ் மக்களின் நலன்களையும் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்ளவில்லையெனவும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். என்ன நடக்கின்றது என்று நேரில் வந்து பார்க்காமல் தவறான பக்கத்தை குற்றம் சாட்டும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நடேசன் கூறியுள்ளதாக “தமிழ் நெற்’ இணையத்தளம் தெரிவித்தது.
யுத்தத்தை நிறுத்துவதே இந்த நேரத்தில் தேவைப்படுவதாகும். அதற்கு இடமளித்துக் கொண்டு பொதுமக்கள் துன்பங்களுக்காக கவலை தெரிவிப்பது தவறான கொள்கையாகும் என்றும் நடேசன் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் மற்றும் யுனிசெப் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக தமிழ் நெற்றுக்கு நடேசன் தெரிவித்திருப்பதாவது;
இடம்பெறும் யுத்தம் பொதுமக்களுக்கு சகல விதமான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கப்பட வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக உள்ளார்கள். ஆதலால் பொதுமக்களின் துன்பம் தொடர்பாக கரிசனையுடைய உலக அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோர வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக யுத்தத்துக்கு இடமளிக்கும் கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால், முழுமையாக தமிழருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது உண்மையாகும்.
கொழும்பின் யுத்தத்தை நியாயப்படுத்துவதும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலைப்படுவதுமான இரட்டைத் தனமான கொள்கை அடிப்படையில் தவறானதாகும். இந்தத் தவறான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஐ.நா. கடுமையாக உழைக்க வேண்டும். மனித உயிர் , கௌரவம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பவற்றை மோதல் வலயத்தில் மட்டுமல்லாது முழுத்தீவிலும் உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்.
வன்னியிலுள்ள பொதுமக்களின் உடனடிக்கவலைகள், தாக்குதல் பயத்திலிருந்தும் விடுபடுவதும் மருந்து , உணவு, நீர் மற்றும் தமது கிராமங்கள் வீடுகளுக்கு அச்சமின்றி திரும்பிச் செல்வதுமாகும். இந்தக் கவலைகளுக்கு எதிராக புலிகள் செயற்படவில்லை. தற்காலிக மோதல் நிறுத்தக் கோரிக்கையைக் கூட கொழும்பு செவிமடுக்கவில்லை என்பதை ஐ.நா. நன்கறியும். உணவு, மருந்து விநியோகத்திற்கும் அனுமதியில்லை. ஆதலால் பொதுமக்களின் கவலைகளுக்கு பரிகாரம் காணும் விடயத்தில் ஐ.நா. தவறான விதத்தில் குற்றம் சாட்டுகிறது.
அத்துடன் 18 வயதுக்கு குறைந்த எவரையும் அமைப்பில் புலிகள் இணைத்துக்கொள்ளவில்லை. பொதுமக்கள் தமது சொந்த விருப்பத்திலேயே எமது பகுதிக்குள் இருக்கின்றனர்