செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் கூட்டமைப்பின் கருத்திற்கு முரணாக வினோ எம்.பி.

l-yaappa-abayawardana.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து உலகளவில் பிரசாரத்தை முன்னெடுக்கையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான வினோநோகராதலிங்கம் உண்மையை சுதந்திரமாக தெரிவித்ததையிட்டு நன்றி கூறுவதாக ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார்.

இதன்மூலம் நாட்டுக்கும் அரசுக்கும் அபகீர்த்தியையும் அவமரியாதையையும் ஏற்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்து பொதுமக்கள் தங்கியுள்ள, குறிப்பாக கதிர்காமர் கிராமம் உட்பட முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பார்வையிட்டதன் பின்னரே அவர் பாராளுமன்றத்தில் இவ்வாறு தனது சுதந்திரமான கருத்தைத் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசுவதற்குக் காரணம் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுள்ள மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி பராமரிப்பதேயாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு மற்றும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் சென்று அரசுக்கும் இராணுவத்துக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வினோநோகராதலிங்கம் முகாம்களுக்குச் சென்று அரசு மேற்கொள்ளும் நலன்புரி சேவைகள் உட்பட ஏனையவற்றை பரிசீலித்து அரசுக்கு சார்பாக உண்மையை சுதந்திரமாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசாங்கம் செயற்படுவதாக களங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் பொய்ப்பிரசாரத்தை முறியடிப்பதற்கு இவரது கூற்றை உலகுக்கு எம்மால் முன்வைக்க முடியும். இதையிட்டு அவருக்கு நன்றிகள்.

இதேவேளை, இலங்கையிலிருந்து சென்ற சிலர் ஜெனீவாவில் தமிழ் மக்களின் உரிமையை அரசாங்கம் மறுப்பதாக அங்கு மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றி கூறியுள்ளனர். இதையிட்டு கவலையடைகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே உண்மையை உணர்ந்து அரசுக்கு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவர்கள் சென்று ஆர்பாட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

இதனால் நாட்டுக்கு மட்டுமன்றி அரசு மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு இழுக்கையும் அவமரியாதையையும் ஏற்படுத்துமென்பதால் நாம் கவலையடைகின்றோம் என்றார்.

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

navanethem.jpgஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த 17 ஆம் திகதி நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் பிரசண்டா, ஐ.நா. அலுவலர்கள், மனித உரிமைப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நேபாளம் தொடர்பாக தனது பிந்திய அறிக்கையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், “நேபாளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முடியாட்சிக்குப் பதிலாக அங்கு குடியாட்சி மலர்ந்துள்ளது. ஆயினும் சமாதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விடயத்தில் சவால்கள் உள்ளன. மனித உரிமைகள் விவகாரத்தின் தனது ஈடுபாடுகளை அமுல்படுத்துவதற்குரிய வரலாற்று ரீதியான வாய்ப்பு நேபாளத்திற்கு கிட்டியுள்ளது’ என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். 

நாடாளுமன்ற உரை தொடர்பான சர்ச்சைக்கு வினோ மறுப்பு

vinonodaralingam.bmpகடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தினால் ஆற்றப்பட்ட உரைக்குப் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வினோநோகராதலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

vino-lt.jpg

பொலிஸ் பதிவு நேற்று இரத்து இன்று மேற்கொள்ளப்படும்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

ranjeth-gunasekara.jpgமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பொலிஸ் பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டதோடு, இப்பதிவு இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் 21ஆம் திகதி சனிக்கிழமையும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் பேரில் செயற்பட்ட மக்கள் நேற்று தாம் தங்கியிருந்த பகுதிகளுக்கான பொலிஸ் நிலையங்களுக்கு சென்று பதிவுகளை மேற்கொள்ளவிருந்தனர்.

ஆனால் பொலிஸ் நிலையங்களிலோ பதிவுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகரவிடம் கேட்டபோது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டபோதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் இப்பதிவு ரத்துச் செய்யப்பட்டது. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டபடி பதிவுகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஐந்து வருடங்களுக்குள் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண் டும்.

இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், மக்கள் தமது அடையாளயத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை கொண்டுச் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். 

பிரபாகரன்தான் போரை முன்னின்று நடத்துகிறார் – பா.நடேசன்

nadesan.jpgபிரபாகரன் எங்கும் ஓடவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?

நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.

தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.

கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?

நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.

இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?

நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.

இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தீக்குளித்து தற்கொலை

srilanka.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப்பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர் டக்ளசுடன் தொடர்புகொள்ள…

minister.jpgதங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வேளையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் 011 2503467 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் பல்வேறு நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்களைக் கவனிக்கவும் மக்கள் நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவுமென கடந்த ஒரு வாரகாலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தங்கியுள்ள நிலையில் மேற்படி தொலைபேசி ஊடாக நேரடியாக அமைச்சருடனோ அல்லது அவரது உதவியாளருடனோ நேரடியாக தொடர்புகொண்டு தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை எவ்வேளையிலும் பொதுமக்கள் அறியத்தரலாம்.

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றில் காவி உடை அனுமதிக்கப்படும்போது பாடசாலைகளில் பர்தாவுக்கு தடைவிதிப்பது நியாயமா?

sri-lanka-muslim-students.jpgபாராளு மன்றத்தில் காவி உடைக்கு அனுமதி வழங்கப்படும் போது பாடசாலைகளில் பர்தா உடைக்கு தடைவிதிப்பது நியாயமா என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் அம்ஜான் உம்மா பர்தா உடையுடன் வருகிறார். கண்ணியமிக்க தேரர்கள் காவி உடையுடன் வருகின்றார்கள். அறிவாளிகளை உருவாக்கும் பள்ளியில் மட்டும் பர்தா உடைக்கு அனுமதி மறுக்கப்படுவது சரிதானா என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மாணவிகளின் இஸ்லாமியச் சீருடைக்கு மேல்மாகாணத்தில் மட்டுமின்றி திருமலை மாவட்டத்திலும் தடைவிதிப்பு தொடர்கிறது. அன்று பதுளையில் ஆரம்பித்த இந்தத்தடைவிதிப்பு இன்று கொழும்பு திருமலை வரை சென்று விட்டது. அன்று யாரோ, எதற்கோ துகிலுரிந்தார்கள் என்பது வரலாறு. இன்று பள்ளி முதல்வர்களின் பணிப்பில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகள் களையப்படுகின்றன. அன்றும் இன்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்கள மாணவர்கள் தம் வழக்கமான ஆடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்த நிலையில் பாடசாலைவருவதைத் தடுக்கும் அதிபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தந்தாலும், ஆங்காங்கே காணப்படும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும் போதே கல்வி அமைச்சரின் அறிவிப்பு பயனுள்ளதாய் அமையும் என்பது சங்கத்தின் கருத்தாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.தே.க தலைமை பதவியிலிருந்து ரணிலை வெளியேற்றுவது உறுதி? – கட்சி வட்டாரம் தகவல்

ranil-wickramasinghe.jpgஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிச்சயமாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ. தே. க.வின் செயற் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி அதற்குப் பதிலாக கரு ஜயசூரியவை நியமிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இதற்கு செயற்குழுவின் இன்னொரு சாரார் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எஸ். பி. திசாநாய க்க, அல்லது ருக்மன் சேனநாயக்காவை தலைவராக நியமித்து சஜித் பிரேமதாசவை கட்சியின் மிக முக்கியமான பதவிக்கு நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தான் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பதவியில் இருந்து கொண்டு தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு இணங்கியிருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மீளாய்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினரிடமே இந்த முடிவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கட்சியின் யாப்பின் பிரகாரம் செயற்குழு மாதத்தில் ஒருமுறையே கூட வேண்டும். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு செயற்குழுக் கூட்டம் நாளை 23 ஆம் திகதியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிகிறது.