செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க செயற்கைகோள் 20-ந்தேதி ஏவப்படுகிறது

pak_terror.jpgபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அதிநவீன ராடார் கொண்ட செயற்கைகோள் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வரும் 20-ந்தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இலங்கை இராணுவத்தை குறைகூற பிரித்தானியாவுக்கு அருகதையில்லை: சம்பிக்க ரணவக்க

chambika.jpgஎமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பயணிகளின் பொதிகளை ஒப்படைக்க நடவடிக்கை

green-ocean.jpg
முல்லைத்தீவு,  புதுமாத்தளன் பகுதியிலிருந்து சிகிச்சைக்காக கப்பல் மூலம் புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் விட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் வந்தவர்கள் சிலர் கைவிட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அவசர மேலதிக சிகிச்சைக்காக புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த 6 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை வந்தவர்களில் சிலர் பொதிகளை கைவிட்டு வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவற்றை உரியவர்களிடம் கையளிக்கும் முகமாக இப்பொதிகளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

திருமலையில் விபத்திற்குள்ளாகிய கப்பல் முற்றாக மூழ்கியது.

trnco-sea.jpgதிருமலை கடற்பகுதியில் விபத்திற்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அக்கப்பல் முற்றாக மூழ்கி விட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்

பார்வையற்ற படை வீரர்களுக்காக பேசும் கடிகாரங்கள் அன்பளிப்பு!

laptop_ranavirufoundation.jpgகனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர,  மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை  கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன்னி அகதிகளின் நலன்கருதி குடாநாட்டில் தற்காலிக கொட்டில்கள்

srilanka_idp.jpgகுடா நாட்டுக்கு வரும் வன்னி அகதிகளின் நலன்கருதி கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 600 தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் கிடைப்பது மிகக் கடினமாகவுள்ள போதும் கிடைக்கும் கிடுகுகளைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தென்மராட்சி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னி அகதிகள் தற்காலிக குடிசைகளில் தங்கி தாமே சமைத்து உண்பதற்கு விரும்புவதால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், நலன் நோன்பு நிலையங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு இதுவரை 4,900 அகதிகள் வந்துள்ள போதும் இவர்களுக்கான சகல வசதிகளும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்நலன் நோன்பு நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச தலைவர் இலங்கை விஜயம்

jakob-kellenberger.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.சி.ஆர்.சி. வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ரோஹித பாராட்டுத் தெரிவித்துள்ளார்

புதுமாத்தளனிலிருந்து 536 பேர் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு  அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிபியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு; இருதரப்பு பேச்சு ஆரம்பம்

mahi-libiya.jpgமூன்று நாட்கள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு லிபியாவைச் சென்றடைந்தனர்.

லிபிய ஜனாதிபதி கேர்ணல் கடாபி பிறந்த ஊரில் விசேட அரச தலைவர்கள் வந்திறங்கவென நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘சேர்டி’ விமானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு நேற்று சென்றது. இக்குழுவினரை லிபிய பிரதமர் கலாநிதி அல் படாதி அலி அல் முஹம்மதி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூஸா முஹம்மத் கோஸா ஆகியோர் வரவேற்றனர்.

இச்சமயம் ஜனாதிபதிக்கு விசேட அரச கெளரவம் அளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையுடன் செங் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இலங்கை அரச தலைவர் ஒருவர் லிபியா வுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

அதனால் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட அரச தலைவ ர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் படவிருப்பதுடன், ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்குமிடையிலான இருபக்க பேச்சுவார்த்தை நேற்று மாலை ஆரம்பமானது. இதேநேரம் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு லிபிய பிரதமருடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. லிபிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவுக்கு நேற்றிரவு இராப்போசன விருந்துபசாரமும் வழங்கினார்.

சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்கள் விரைவில் வெளியிடப்படும்

dalas_alahapperuma.jpgபிரபாகரனின் பிறப்புச் சான்றிதழ் மீட்கப்பட்ட அறையில் இருந்து மேலும் பல ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றிடையே தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களும் உள்ளன. இவற்றை தேர்தலின் பின்னர் வெளியிடவுள்ளோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

உணவை ஆயுதமாகப் பயன்படுத்தினால் புலிகளை 4 நாட்களில் அழித்துவிட முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் அரசாங்கம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தாது. பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் காலை உணவாக சாப்பிடும் தோசை கூட நாம் அனுப்பும் கோதுமை மா மூலமே தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் இராணுவம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை பட்டினிபோட்டு கொலை செய்ததுபோல நாமும் செய்தால் புலிகளை 4 நாட்களில் ஒழித்துவிட முடியும். ஆனால் நாம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தமாட்டோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளோம்.

பொதுமக்கள் குறித்து கவனிக்காமல் காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கியது போல நாமும் தாக்கினால் 10 நிமிடத்தில் புலிகளை அழித்து ஒழித்து விடலாம். ஆனால் உலகத்தில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாதவாறு பொதுமக்களுக்கு சேதமேற்படாத வகையில் எமது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வன்னியில் சிக்கியுள்ள 30 முதல் 40 ஆயிரம் வரையான பொதுமக்களை மீட்பதற்கு மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் நடமாடுவதை படையினர் கவனித்து வருகின்றனர். வன்னியில் அண்மையில் மீட்கப்பட்ட பீரங்கி செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது புலனாகியுள்ளது. இது எவ்வாறு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெளிவு.