செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மனிக் பாமிற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது; உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலை:ஐசிஆர்சி கவலை

IDP_Camps
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றுக்கு ஐ.சி.ஆர்.சி. உட்பட மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன்கள் தொடர்பாக அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லையென அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்ல அரசாங்கம் தடையேற்படுத்தியிருப்பதால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கான அவசர உதவி விநியோகங்களை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டதாக ஐ.சி.ஆர்.சி. தெரிவித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்வதற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டதையடுத்து உணவு மற்றும் உடைகள் போன்ற அவசர உதவி விநியோகங்களை ஐ.சி.ஆர்.சி. இடைநிறுத்தி விட்டதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சில முகாம்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஐ.நா. சிறுவர் நிதியத்தின் ( யுனிசெப்) நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம். வெனமன் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு மிக அவசியமான உதவிகள் முழுமையாகவும் தடங்கலின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பதாக சிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க; நாம் ( அரசாங்கம்) அப்படியான தடைகள் எதையும் விதிக்கவில்லை. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் உதவிகளை விட மேலதிகமான உதவிகளை வழங்க அவர்களுக்கு அனுமதி இருக்கிறது. அவர்கள் முகாம்களில் உதவிப் பணிகளில் ஈடுபட முடியும்.
இதேநேரம், அவர்களது (ஐ.சி.ஆர்.சி.யினது) பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் முகாம்களுக்குள் செல்வது அங்கிருக்கும் மக்களுக்கு கஷ்டமாக இருப்பதனாலேயே உட்பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு நாம் அறிவுறுத்தியிருக்கிறோம். முகாம்களுக்குள் வாகனங்கள் அதிகம் வருவதால் மக்களே அசௌகரியத்துக்குள்ளாகின்றனர்.

அவசர உதவி விநியோகங்களை நிறுத்துவதென்றால் அவ்வாறான அவசர உதவி விநியோகங்களுக்கு தற்போது பாதுகாப்பு வலயம் ( மோதல் சூன்ய வலயம்) எதுவும் கிடையாது. அரசாங்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கியே வருகிறது என்று பதிலளித்தார்.

தீவிரவாத ஒழிப்புக்கு ஒத்துழைப்பு – வியட்னாமுக்கு ஜனாதிபதி நன்றி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக வியட்னாம் அரசுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் கடந்த சில வருடங்களாக வழங்கிய உதவிகளுக்கும், ஒத்துழைப்புக்கும் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி தமது தனிப்பட்ட நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளாரென்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, வியட்னாம் பிரதமர் குயென் டான் டங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நாட்டில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்வதில் அரசாங்கம் வெற்றி கண்டமை தொடர்பில் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பும் வகையில், அரசாங்கத்தின் மீள்கட்டுமான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்ததில் வழங்கிய தலைமைத்துவத்திற்காக வியட்னாம் பிரதமர் தமது பாராட்டுதல்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரு நாடுகளினதும் நீண்டநாள் நட்புறவு குறித்தும் கருத்துத் தெரிவித்த வியட்னாம் பிரதமர், எதிர்வரும் வருடங்களில் இது மேலும் வலுவடையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை – வியட்னாம் ஆணைக்குழுவை விரைவில் கூட்ட வேண்டுமென்றும் அவர் பிரேரித்துள்ளார். அவரின் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதுடன், காலக்கிரமத்தில் தாம் அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வியட்னாம் வெளிவிவகார அமைச்சருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அறிவுறுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மலையகத்திலும், மலைசார்ந்த பகுதிகளிலும் மண்சரிவு அபாயம்

earth-slip.jpgதென் மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது. பருவ பெயர்ச்சி மழையுடன் சேர்ந்து கடும் காற்றும் வீசக்கூடிய காலநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையமும் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆகவே மலையகத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களிலும் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற மக்கள் அடுத்து வரும் சில தினங்களுக்கு மிகவும் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், வானிலை அவதான நிலையமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார குறிப்பிடுகையில், தற்போது தென்மேல் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அந்தவகையில் ஹட்டன் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் நேற்று திடீரென ஏற்பட்டது.

தற்போது நுவரெலியா, கேகாலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை – ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது.

இதனால் மலையகத்திலும், மலை சார்ந்த பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களில் வாழும் மக்கள் இந்நாட்களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக 24 மணி நேரங்களுக்கு மேல் தொடராக 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமாயின் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் மிக அதிகம். அதேநேரம் மண்சரிவு ஏற்பட முன்னர் வீட்டுச் சுவர்களிலும் நிலத்திலும் திடீ ரென வெடிப்புகள் ஏற்பட்டு விரிவடையும், சில சமயம் அவற்றின் ஊடாக சேற்று நீர் வெளிப்படும், மரங்கள் சரியும்.

இவ்வாறான முன்னறிகுறிகள் தென்படும் பிரதேசங்களி லிருந்து உடனடியாக வெளியாகி மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ செல்லாது குறுக்காக செல்லுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். இதேவேளை, வானிலை அவதான நிலைய வானிலையாளர் நந்தலால் பீரிஸ் குறிப்பிடுகையில்,

தென்மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் மழை கிடைக்க முடியும். என்றாலும் கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை போன்ற மாவட்டங்களில் அதிக மழையும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறும். இம் மழைவீழ்ச்சியோடு சேர்ந்து திடீர் திடீரென மணித்தியாலத்திற்கு 40, 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்றும் வீச முடியும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரப் பதிவுப்படி கெனியன் நீர்த்தேக்கப் பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் கெனியன் நீர்த்தேக்கப் பகுதியில் 240 மி.மீ., கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் 230 மி.மீ., இரத்தினபுரியில் 116.9 மி.மீ., கண்டியில் 90 மி.மீ. என்ற படி அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆயினும் இப்பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தியின் 18ஆவது நினைவு தினம் : சோனியா மலரஞ்சலி

rajeeve_.pngமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆந் திகதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இன்று அவரது 18ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

டில்லியில் ராஜீவ் சமாதி அமைந்துள்ள ‘வீர்பூமி’யில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதரா, இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி, புதிய எம்.பி.க்கள் ஆகியோரும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ராஜீவ் மறைந்து 18 ஆண்டுகளைக் குறிப்பிடும் வகையில் 18 குழந்தைகள் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தண்டுவம் முதலாளி கடத்தப்பட்டு கொலை

“தண்டுவம் முதலாளி” என்றழைக்கப்படும் பியதாஸ ரத்னாயக்கா இனந்தெரியாத நபர்களினால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி நிறுவன மோசடி காரணமாக தடுத்துவைக்கப் பட்டிருந்த “தண்டுவம் முதலாளி” பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் ஹங்கமயிலிருந்து நண்பர் ஒருவருடன் வந்துகொண்டிருந்தபோது அவிசாவளை பொலிஸ் பிரிவிலுள்ள திவுரும்பிட்டி, மாதொல அருகே வானொன்றில் வந்த ஆயுததாரிகள் தண்டுவம் முதலாளியை கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், நேற்றுக் காலை இவரது சடலம் குருவிட்ட, புஸ்ஸல்ல தோட்டத்தில் கிடப்பதாக தகவல்கள் கிடைத்தன. உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

கொல்லப்பட்ட தண்டுவம் முதலாளியின் உடலில் சூட்டுக் காயங்களோ, வெட்டுக் காயங்களோ இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்ஜித் குணசேக்கர தெரிவித்தார்

படை வீரர்கள் நன்றி பாராட்டும் தேசிய விழா – ஜனாதிபதி தலைமையில் நாளை

SL_Army_in_Final_Phaseபடை வீரரகளுக்கு நன்றி பாராட்டும் தேசிய விழா நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத் திடலில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் 2 மணியளவில் பாராளுமன்றத் திடலையடைவதுடன் இப்பேரணியில் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படை வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாரத்தில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.  இதன்படி இன்று 21 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளிலும் படையினரை வாழ்த்தும் நிகழ்வும் அது தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளன.

அத்துடன் சகல அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.  இது தொடர்பில் சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கும் விசேட சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி படையினருக்கான நன்றி பாராட்டு விழாவும், 23 ஆம் திகதி படையினரின் குடும்பங்களுக்கு உதவும் வேலைத் திட்டமும், 24 ஆம் திகதி சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

பிரபாவின் கைத்துப்பாக்கி, தொலைபேசி, ஆயுதங்கள் படையினரால் மீட்பு

prabhas_weapon.jpg புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து அவரது இடுப்புப்பட்டி, பிரத்தியேக கைத்துப்பாக்கி, செய்மதி செல்லிடத் தொலைபேசி போன்றவற்றை படையினர் கைப்பற்றியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

பிரபாகரன் இறுதியாக சுற்றி வளைக்கப்பட்ட வெள்ள முள்ளி வாய்க்கால் பகுதியிலேயே கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர். பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்துத் தேடுதல்களில் ஈடுபட்ட படையினர், கடற்புலிகளின் தலைவர் சுசை உட்பட ஏழு புலிகள் முக்கியஸ்தர்களின் சடலங்களையும் கைப்பற்றினர். 

நோட்டன் பிரிட்ஜில் மண்சரிவு – 6 பேர் மரணம்

earth-slip.jpgஹட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் நேற்றுக் காலை (20) ஏற்பட்ட மண் சரிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், இரண்டு உறவினர்களுமே இவ்வாறு வீட்டுடன் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுர, கெஹெல் கமுக்கந்த கிராமத்திலுள்ள வீடொன்றே நேற்றுக் காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்டதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் டபிள்யூ. எம். குணவர்தன தெரிவித்தார்.

இறந்தவர்களுள் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் இரு உறவினர்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டு வட்டவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதிக் கிரியைகளை அரச செலவில் நடத்துவதற்குப் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்தார்.

அதே நேரம், மண் சரிவு ஏற்படுமென இனங் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறும் அவர் கேட்டுக் கொண்டு ள்ளார். உடனடியாக வெளியேறி உறவினர் வீடுகளிலேனும் பாடசாலைகளிலேலும் தங்கியிருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மழை தொடர்ந்து நீடித்தால் மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மானிட இனத்தின் மேன்மைக்கும் அபிவிருத்திக்கும் அடிப்படையாக மிளிரும் பண்பாடு: இன்று மே 21 உலக பண்பாட்டுத் தினம் (World Culture Day – May 21) – புன்னியாமீன்

world-culture-day.jpg பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள், மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம் கலைகள் விஞ்ஞானம் கல்வி உற்பத்தி முறைகளும் உறவுகளும் தொழினுட்ப வளர்ச்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாக ஒரு இனத்தின் பண்பாடு இனங்காட்டப்படுகின்றது.

உலக பண்பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் கூடிய அக்கறைகாட்டி வருகின்றது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பர். மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு – கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகளாவிய ரீதியில் உலக பண்பாட்டுத்தினம்  சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் மே 21ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது

யுனெஸ்கோவின் பல்வேறு வகைப்பட்ட கலாசாரம் பற்றிய சர்வதேச பிரகடனம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ள அதேநேரத்தில்,  ஐக்கிய நாடுகள் சபையின் 57/249(3) ம் பிரேரணை இத்தினத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச மட்டத்தில் உணர்த்தியுள்ளது. 2001.09.11ஆம் திகதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்கத்தின் பின்னர் இத்தினத்தின் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டுள்ளது.

ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டுகிற மரபு வழியாலும் அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற உலகாயதப் பொருட்கள் அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு. இன்று அனைத்துலக சமுதாயம் முன்னேற்றம் எனக் கருதுவது பொருளாதாரக் கூறுகள், சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மக்கட் கூட்டத்துக்கும் அவரவர் தம் பண்பாட்டைப் பொறுத்தே சிறப்பு அமைகிறது.

எனவே, மனிதனின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் பண்பாடு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புகள் மட்டுமன்றி அறிவுத்திறன். உண்ணும் உணவு,  உடை, உறையுள்,  குடும்ப உறவுகள், சமுதாய உறவு போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புகள்,  நம்பிக்கைகள்,  புதியவர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பண்பாடு வெளிப்படுகின்றது. ஓர் இனத்தின் உயர்வு அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கியுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகள் பேண இடமளிக்கப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்பாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகின்றது. அதாவது புதிய உலக தொடர்புகள், தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி, செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பாடுகளை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிந்தனை, கருத்துக்கள், வாழ்க்கை முறை, போக்கு,  உடை,  உணவு,  இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின – பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பண்பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன. பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடுகளின் தனித்துவத்தைச் சிதைப்பாகக் குறை கூறப்பட்டினும் உண்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரணமாக விளங்குகின்றது. அதேபோல சீனாவில் அண்மைக்கால துரித வளர்ச்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இனவொதுக்கல் கொள்கைகளை மேற்கு நாட்டவர் ஆதரிக்கின்றனர்;. தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி ‘இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பண்பாடுகள் அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற்றைப் பேண அம்மக்களுக்கு உரிமை உண்டு’ என்றும் ஆதரித்துள்ளார்கள்.

ஆனால், மரபு பிறழாமல் அம்மக்களுடைய பண்பாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. பட்டினி வறுமைக் கோடு பிணி எழுத்தறிவின்மை சிசு மரணம் மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் அரசியல் அறிவின்மை பொருளாதார சமச்சீர் இன்மை போன்றவற்றை அகற்றி மேன்மையை உருவாக்க நவீனத்துவம் கைக்கொள்ளப்படவேண்டும் எனக் கருதப்படுகிறது.

மொழியானது சகல இனங்களினதும் பண்பாட்டுக் காவியாகும். மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய் மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப்பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி,  பண்பாட்டை வளர்க்கக்கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது. தாய்மொழியானது ஒரு இனத்தின் பண்பாட்டில் முக்கியம் பெறுகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும். நம்பிக்கைகள் சிந்தனைகள் உணர்வுகள் மரபுகள் போன்றன இனங்களின் தாய்மொழியிலேயே சங்கமிக்கின்றன. பண்பாட்டை வளர்க்கக் கூடியதாகவும் தேசிய பண்பாட்டின் ஊற்று மூலமாகவும் மொழி அமைகின்றது.  சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டின் பண்பாட்டுப் பெருமை மேலோங்கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியை பலவந்தமாக திணிக்கக்கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண்டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஸ்ய மக்கள் ரஸ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஸ்ய மொழியின் பண்பாட்டம்சங்கள் மக்களை தாமாகவே ஈர்த்துக் கொண்டது.

பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பில் சிறுபான்மை, இனங்கள், மொழிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இனங்களின் தனித்துவப் பண்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி செய்திப் பரிமாற்றங்களின் துரிதம் என்பன தாக்கமடையச் செய்துள்ளன எனச் சிலர் கூறினாலும் உலகத்தினை ஒரு கிராமமாக்கி சர்வதேச ரீதியிலான பண்பாட்டுக்கோலங்கள் சகலரும் அறிந்தொழுக இவை பூரணமாக உதவி வருகின்றன என்பதை மறுதலிப்போர் இல்லை எனலாம். உலகப் பண்பாடுகளுடன் உலக மக்கள் ஒன்றித்திளைத்திட தகவல் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் சமயக் குழுக்கள், இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள் என்பன பரஸ்பர உறவைப் பேணுவதோடு பற்கூட்டு அம்சங்களான கலை இலக்கியம் பண்பாடு மொழி போன்றவற்றில் ஒரு தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பும் பொதுப்பண்பாடும் மலர வித்திடலாம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0521-world-culture-day.html

ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி

kanagaratnam.jpgயுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார்.

இவரை விடுவிப்பது குறித்து தான் வன்னி இராணுவ தளபதியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.  இதற்கிடையில், புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை பொறுப்பாளர். கொள்கை முன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளர் பொருளாதார துறை பொறுப்பாளர் முன்னாள் சர்வதேச பேச்சாளர் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுதந்திர பறவைகள் அமைப்பினைச் சேர்ந்த பெண் புலி உறுப்பினர்கள் பலரும் படைத்தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவித்தனர்.நேற்று புதன்கிழமை வவுனியாவில் 90 சதவீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கிடந்தன.