படை வீரரகளுக்கு நன்றி பாராட்டும் தேசிய விழா நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத் திடலில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் 2 மணியளவில் பாராளுமன்றத் திடலையடைவதுடன் இப்பேரணியில் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படை வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாரத்தில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி இன்று 21 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளிலும் படையினரை வாழ்த்தும் நிகழ்வும் அது தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளன.
அத்துடன் சகல அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கும் விசேட சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
22 ஆம் திகதி படையினருக்கான நன்றி பாராட்டு விழாவும், 23 ஆம் திகதி படையினரின் குடும்பங்களுக்கு உதவும் வேலைத் திட்டமும், 24 ஆம் திகதி சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்