செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

பார் பேர்மிட் வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் அது நல்லதொரு விடயம், அதை நான் வரவேற்கின்றேன்.

இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் பேர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபாரிசு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்” – என்றார்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். அப்போது பரஸ்பரம் இரு தலைவர்களும் இத்தகைய ஒரு சந்திப்பு இரு நாடுகளிடேயும் இடம்பெற்றது தொடர்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

மோடி செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்தியாவை முதலாவதாக தெரிவு செய்தமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட இலங்கை ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவின் வெளிவிகாரக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தொடர்பாக இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் “இந்தியாவின் பாதுகாப்பிற்கிற்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் இலங்கையின் பிரதேசத்தை ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்ற உறுதிமொழியையும் தனது உரையில் இந்தியாவிற்கு வழங்கினார்.

ஜனாதிபதியின் இக் கூற்றானது இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பில் சீனாவுடனான இலங்கை உறவை மையப்படுத்தி எழுப்பட்டு வந்த ஐயப்பாட்டை துடைத்தெறிவதாகவும் இலங்கை இந்தியாவின் தொப்புள் கொடி உறுவுதான் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையில் செம்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய குடியரசு தலைவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவினாலும் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் காந்தி சமாதிக்கு மலர்வளையம் வைத்து ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனால் காந்தியின் உருவப்படம் பொதித்த நினைவுச் சின்னமும் மற்றும் காந்தியின் புத்தகமும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கும் டெல்லியில் பிரதமர் மோடிக்கும் இடையில் இந்தியப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அப்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர். குறிப்பாக இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான அபிலாசைகளை நிறைவேற்றுதல், எல்லை தாண்டி வட இலங்கையில் அடி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் மற்றும் அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரட்டை வரி விதிப்பை தடுத்தல் மற்றும் அரச அதிகாரிகளின் திறன்மேம்பாடு தொடர்பில் இந்திய- இலங்கை ஆட்சித்தலைவர்கள் முன்பு இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை மாதம் 31 திகதி லைக்காவின் பணியாளர்கள் 316 பேர் வேலையை இழக்க உள்ளனர். பிரித்தானியாவில் பணியாற்றுகின்றவர்களில் 90 சதவீதமானவர்கள் வேலைநீக்கப்பட, 50க்கும் உட்பட்டவர்களே பிரித்தானியாவில் இருந்து பணியாற்ற உள்ளனர். 2022 இல் லைக்கா நிறுவனம் 24 மில்லியன் பவுண்கள் நட்டமடைந்ததாக கணக்கியல் கோவைகள் தெரிவிக்கின்றது. அத்தோடு கடந்த ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் லைக்கா மோபைல் எட்டாயிரம் பவுண்களுக்கு அதிகனான தொகை வரி செலுத்தவேண்டும் என உத்தரவுவிட்டிருந்தது. அத்துடன் லைக்கா மோபைல் நிதிமோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றசம்சாட்டியிருந்தது. மேலும் பிரித்தானிய நீதி மன்றம் லைக்கா மோபைல் நிறுவனம் 51 மில்லியன் பவுண்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் தீர்ப்பளித்து இருந்தது.

லைக்கா சுபாஸ்கரனும் லிப்பரா பாஸ்கரனும் 2000ம் ஆண்டுகளில் தொலைபேசி அட்டை விநியோகத்தில் போட்டாபோட்டியாக வளர்ந்தவர்கள். இவர்களுக்கு கீழ் இயங்கியவர்கள் மற்றவர்களது தொலைபேசி அட்டை விற்பவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவத்தில் லிப்பரா நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கண்டு வசீகரன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அன்று 2008இல் அவர் தேசம்நெற்றை அணுகியதால் இச்செய்தி எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலில் வெளியிடப்பட்டு வசீகரனுக்கு நட்டஈட்டையும் இரு நிறுவனங்களும் வழங்கியது.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவித்த வசீகரன் தற்போது தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாகவும் 2008இல் நடந்த சம்பவங்களை மீளவும் எண்ணிப்பார்த்தார். மேற்படி வன்முறைச் சம்பவம் பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியிலேயே இடம்பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன் தங்கள் வியாபார விளம்பர நிலைகளுக்காக மல்லுக்கட்டிய இரு நிறுவனங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் அமோக வளர்ச்சியை எட்டின. லிப்பரா பாஸ்கரன் மொபைல் வியாபாரத்தை விற்று முற்றிலும் தமிழ் சூழலுக்குள் தனது எஞ்சிய காலத்தை கழிக்க எண்ணியுள்ளார். விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட ஐபிசி ஊடகத்தை பொறுப்பேற்ற பாஸ்கரன் ஒரு முதலமைச்சர் கனவோடு இயங்கி வருகின்றார். இவரது கனவை குலைத்து வரும் எம்ஏ சுமந்திரனை ஐபிசி பாஸ்கரன் முழுபலம் கொண்டு ஓரம்கட்ட முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசத் துரோகியாக்கியதில் பாஸ்கரனின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் ஐபிசி பாஸ்கரன் எதிர்பார்த்தது போல் தமிழரசுக் கட்சியை தன் பண, ஊடக பலத்தைக் கொண்டு தோற்கடிக்க முடியவில்லை. சுமந்திரனையும் கட்சியை விட்டு துரத்த முடியவில்லை. இப்போதும் ஐபிசி பாஸ்கரனின் முதலமைச்சர் கனவுக்கான தடை விலகவில்லை.

மாறாக அல்லிராஜா சுபாஸ்கரன், நேரடியாக அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அரசியலில் தான் ஒரு ‘கிங்மேக்கர்’ ஆக வரவேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. லண்டனில் 24 மில்லியன் பவுண்கள் நட்டக் கணக்கு 2022இல் காட்டப்பட்டாலும் இலங்கைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார். தமிழ் பொது வேட்பாளராக சங்கு அரியநேந்திரன் நிறுத்தப்பட்டு அவரது வெற்றிக்கு நிதி வாரி வழங்கப்பட்டது. மறுபுறம் ஜனாதிபதி ரணிலுடைய தேர்தல் பிரச்சார நிதியையும் அல்லிராஜா சுபாஸ்கரனே வழங்கியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள் முற்றாக மறுக்கின்றனர்.

மேலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தெற்கில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 15 லட்சம் சமபளம் கொடுத்து ஒலிவாங்கியில் போட்டியிட்டவைத்தார். வடக்கில் சங்கு சின்னத்தில் முதலீடு செய்தனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக அது முடிந்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதனைத் தவிர ஏனையவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை இழந்தனர். வி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வியாபராத்தில் சறுக்கினார்களோ அல்லது கணக்குப் புத்தகத்தை சறுக்க வைத்தார்களோ என்பது எல்லாம் ‘லிங்க பூசை’ ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் அரசியலில் சாண் ஏறாமலே முழம் சறுக்கியது. ‘ஒருவன்’ என்று தற்போது ஒரு ஊடகத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் வெக்ரோன் தொலைக்காட்சியை நடத்தியவர்கள் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒருவன் என்ற ஊடகத்தை ஆரம்பித்துள்ளனர். பணம் பலதும் பத்தும் செய்யும் என்பதற்கு லைக்கா சிறந்த உதாரணம்.

லைக்காவுடைய பெரும்பாலான வர்த்தகச் செயற்பாடுகள் தற்போது இந்தியா நோக்கி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் 60 மில்லியன் பவுண்கள் வரி நிலுவை இருக்கின்ற போது எப்படியும் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மீதான செயற்பாடுகள் இறுக்கமடையும். அதனால் செலவுக்குறைப்புக்கான செயற்பாடு என்ற பெயரில் லைக்கா இந்தியாவை நோக்கி நகர்கின்றது. மேலும் லைக்கா நிறுவனம் சினிமாவிலும் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்தியா – தமிழகம் நோக்கி நகர்கிறார்கள்.

 

புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன !

புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன !

அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (16) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை (17ம் திகதி) சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, ​​நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும்.

எதிர்க்கட்சியினாலும் சபாநாயகரின் பெயர் முன்மொழியப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்த போதிலும், அது நெறிமுறையற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேறு பெயர் பரிந்துரைக்கப்பட்டால், அந்த பெயரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன உண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார். அவரது பதவிக்காலம் 26 ஆண்டுகள் ஆகும், அதில் கடந்த 10 ஆண்டுகள் மருத்துவ நிர்வாகி அல்லது மருத்துவமனை பணிப்பாளர் என்ற அதிகாரப்பூர்வ தலைப்பின் கீழ் செலவிடப்பட்டது.

அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய மீன்பிடி படகுகளினாலும் , தமிழக மீனவர்களின் அத்துமீறிய நுழைவினாலும் இலங்கையின் வடக்கு வாழ் மீனவர்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கடல் பரப்பில் ரோலர் இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் தனித்து மீன்பிடி என்பதற்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்து கொட்டுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் அண்மையில் தேசம் திரை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன் ” வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்தேசியம் பேசும் எந்த தலைமைகளுக்கும் அக்கறை இருந்தது இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமைகளை சந்திக்கும் போது கூட எந்த பயனுமற்ற விடயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் மீனவர் பிரச்சினைக்கு கொடுத்தது இல்லை. இதற்கான காரணம் தமிழ்தேசியம் என்பது இந்தியாவின் நலன்களுக்கானது என்பதே காரணம்”  என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கடல்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர்களுடன் நேரடியான சந்திப்புக்களை நடாத்தியதுடன் இந்தியாவுடான பேச்சு வார்த்தைகளில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் கட்டாய இடத்தை பிடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் “இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார் .

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களிடம் பேசிய அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

 

 

கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.

இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமந்திரன் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை! தனிக்கட்டைகள்: சிறீதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் ஏன் ஊசி அர்சுனாவோடு கூட்டமைக்கக் கூடாது? 

சுமந்திரன் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை! தனிக்கட்டைகள்: சிறீதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் ஏன் ஊசி அர்சுனாவோடு கூட்டமைக்கக் கூடாது?

“தமிழரசு கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டோம் என்பதற்காக வேண்டி அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு மற்றவர்கள் ஒத்து வரவேண்டும் என்பது முறையற்ற செயல்” என எம் ஏ சுமந்திரன் நேற்று வெளியிட்ட கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநான் பதிலளித்துள்ளார். “இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மற்றைய கட்சிகள் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல்” எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரன் தனிக்கட்டைகளான தங்களை: சிறீதரன், கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரை திட்டமிட்டு புதிய அரசியலமைப்புச் செயன்முறையிலிருந்து ஓரம் கட்ட முடிவெடுத்துவிட்டார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இன்று காட்டசாட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தென்னிலங்கையிலே இப்பொழுது இருக்கிற புதிய அரசாங்கமும், ஜனாதிபதியும் ஒரு பலமாக நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என்று இதை பரிசீலிக்கின்ற நிலையை உருவாக்க முடியும்” என்று செல்வம் அடைக்கலநாதன் ஒரு ஆலோசனையும் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் கேட்கின்ற நிலையில் எம் ஏ சுமந்திரன் இருப்பதாகத் தெரியவில்லை. ’தேர்வுச் செவிடனாக’ இதை எதுவுமே கேட்காதவராக எம் ஏ சுமந்திரன் செயல்படுவதும் தெரிகிறது.

இந்த தனிக்கட்டைகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணிக்கும், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி வரைபுக்கும் எம் ஏ சுமந்திரன் ஆப்பு வைத்துவிட்டார் என்பதை நேற்றைய செய்தியில் தேசம்நெற் குறிப்பிட்டிருந்தது தெரிந்ததே.

இந்தத் தனிக்கட்டைகளின் ஒற்றுமையும் நேர்மையற்றது. தனிக்கட்டைகளானதால் வலிந்து ஒற்றுமைப்பட்டுள்ளனர். உணர்ந்து ஒற்றுமைப்படவில்லை. பொதுக் கட்டமைப்பில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக அரியநேந்திரன் நிறுத்தப்பட்ட போது பொன்னம்பலம் கஜேந்திரன் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோரினார். தாங்களுடைய கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரித்தனர் என ரீல் விட்டார். எஸ் சிறீதரன் அரியநேந்திரனுக்காக கட்சியை விட்டுவிட்டு வரவில்லை. லண்டனுக்கு ஓடிப்போய் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோயிலில் ஒழிந்துகொண்டார். இப்ப வந்து நாங்கள் ஒற்றுமையாய் நிக்கவேணும் என்று ஒற்றைக் காலில் நின்றால், சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் நம்பிடுமோ.

தனிக்கட்டைகளுக்கு இருப்பது ஒரே வழி தான். அது தமிழரசுக் கட்சியோடும் சுமந்திரனோடும் போற பஸ்ஸில ஏற வேண்டியது தான். சர்வதேச விசாரணை, வடக்கு – கிழக்கு இணைப்பம், தையிட்டியில புடுங்குவம் என்றால் இனிவரும் தேர்தல்கள் ரொம்ப கஸ்டமாகத்தான் இருக்கும். இல்லாட்டி ஊசி அர்ச்சுனா தலைமையில ஒரு முன்னணி ஒன்றை அமைச்சால் இன்னும் கொஞ்சத்தூரம் போகலாம். சிங்கம் சோசல்மீடியாவ வைச்சு உங்களை ஒரு லெவலுக்கு கொண்டு வரும்.

போலி பேராசிரியர்கள் கவனம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை!

போலி பேராசிரியர்கள் கவனம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
சிரேஷ்ட பேராசிரியர், பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் பட்டங்களை குறிப்பிட்ட கல்வி நிறுவனம் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் சேவையாற்றும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக பேராசிரியர்கள் ஓய்வு பெற்றபின் அவர்களது பேராசிரியர் பட்டம் செல்லுபடியற்றதாகிவிடும். சில விசேட சந்தர்ப்பங்களில் ஓய்வுபெற்ற பின்னரும் பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்பட்டால் பேராசிரியர் என அழைக்கப்படலாம்.
கோப் குழு பரிந்துரையின்படி ஒகஸ்டில் நடந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதுள்ளது. இத் தீர்மானம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உயர்கல்வி நிறுவனங்கள் சிரேஷ்ட பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகள் வழங்கும் போது அவர்களது பதவி நியமனக் கடிதங்களில் இச்சரத்தை சேர்க்கும் படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக போலிப் பேரசிரியர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சையும் சபாநாயகர் அசோக் ரன்வல்லா பதவியை ராஜினாமாச் செய்ததும் தெரிந்ததே. மேலும் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக கலைப்பீடங்களில் இவ்வாறான போலிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் கோயில் மலரில் கட்டுரை எழுதி பேராசிரியர் ஆனவர் முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன். யாழ் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பைச் சிதைத்து அதனை இறங்குமுகத்தில் கொண்டுவந்து நிறுத்தியவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை.

வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

 

‘உள்நாட்டு இறைவரித் திணக்களத்தின் அறிவுறுத்தல் படி 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரிநிலுவைகள் எதிர்வரும் டிசம்பர் 26 முன்னர் செலுத்தப்பட வேண்டும், செலுத்தப்படாத வரி நிலுவைகள் முன் அறிவுறுத்தலின்றி சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளினூடாக அறவிடப்படும்’ என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘நிலுவையாகவுள்ள சுய மதிப்பீட்டு வரி போன்றன தொடர்பில் உள்நாட்டு இறைவரி கட்டளைச் சட்டத்தின் கள ஆய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களம், ‘வரி நிலுவையின் தொகையை பொறுத்து குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும்’ என அறிவித்துள்ளது.