முன்னாள் போராளிகள் நலன்புரிசங்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கோரிக்கை மகஜருக்கு மக்களிடம் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. அப்போது சர்வ மதத் தலைவர்களும் , சமூக அமைப்புக்களும் மற்றும் பொதுமக்களும் கையொப்பம் இட்டனர். ஆளும் அநுர தலைமையிலான அரசு தன்னுடய தேர்தலில் வாக்குறுதியாக வழங்கிய அ்ரசியல் கைதிகளை விடுதலையை உத்வேகப்படுத்தும்படியாகவே இப்போராட்டம் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான செ. அரவிந்தன் இந்த வருடம் மார்ச் 26 இல் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப்பிரிவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பா.உ சிறிதரனின் தண்ணீர் மோசடி – கடலுக்கு தண்ணீர் போனாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் போக கூடாது.
இதுவரை வெளிவராத உண்மைகள்: பா உ எஸ் சிறிதரனின் தண்ணீர் மோசடியும் வீணடிக்கப்பட்ட திருப்பி அனுப்பப்பட்ட கோடிக்கண நிதியும்!
பா உ எஸ் சிறிதரனின் தண்ணீர் அரசியல் மோசடியால் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல மில்லியன் நீர்வள அபிவிருத்திக்குப் பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்பட்டுவிட்டதாகவும் ஓய்வு பெற்ற பேராசிரியரும் வடக்கின் நீர் முகாமைத்துவத்தை முன்னெடுத்தவருமான கலாநிதி சிவகுமார் சுப்பிரமணியம் தேசம்நெற்றுக்கு இன்று தெரிவித்தார். இலங்கையில் உள்ள அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகவும் உணர்ச்சியூட்டும் ஏமாற்று அரசியலாலும் தமிழீழம் கேட்ட மக்களுக்குச் சேரவேண்டிய அபிவிருத்தி நிதி வீணடிக்கப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்டது என்கிறார் பொறியியல் கலாநிதி எஸ் சிவக்குமார்.
2010இல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பா உ சிறீதரன், இரணைமடு அணைக்கட்டை உயர்த்தி அதன் தண்ணீர் கொள்வனவை அதிகரித்து யாழ் மாவட்டத்துக்கு தண்ணீர் விநியோகம் மேற்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டு, 266 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒதுக்கியது. இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளில் குழாய்கள் பொருத்தப்பட்டு நீர் தாங்கிகளும் கட்டப்பட்டு விட்டது. இந்நிலையில் எல்லாவற்றுக்கும் உடன்பட்ட பா உ சிறிதரன் இறுதிக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்ற பிரச்சினையை முன்வைத்தார்.
கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டது. இந்த மோசடியில் நீர்ப்பாசனத் திணைக்களத்திலிருந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருந்தனர். தங்களுடைய சொந்த நலன்களுக்காக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் தூண்டி விடப்பட்டனர்.
யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொடுத்தால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டே விவசாயிகள் தூண்டிவிடப்பட்டதாக வடக்கின் ஆறுகள் குளங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட நீர்முகாமைத்துவ நிபணர் கலாநிதி எஸ் சிவகுமார் தெரிவித்தார். இரணை மடுக்குளத்தின் தண்ணீரை யாழ்பாணம் கொண்டுவருவதால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்த கலாநிதி எஸ் சிவகுமார், வடக்கில் ஆண்டு தோறும் 200 மில்லியன் கனமீற்றர் அளவு மழைநீர் கடலைச் சென்றடைகின்றது என்றும் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்திலிருந்து 20 மில்லியன் கனமீற்றர் அளவு நீர் ஆண்டுதோறும் கடலுக்குச் செல்வதாகவும் கலாநிதி எஸ் சிவகுமார் தெரிவித்தார். ஆனால் யாழ்ப்பாணத்து நீர்த் தேவைக்கு வெறும் 10 மில்லியன் கனமீற்றர் அளவு நீரே தேவைப்படுவதையும் கலாநிதி சிவகுமார் தெளிவுபடுத்தினார்.
தற்போது யாழில் வீடு வாங்கி நிரந்தரமாக குடும்பத்துடன் வாழும் எஸ் சிறீதரன் தனது வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த தண்ணீர் மோசடியில் ஈடுபடுகின்றார். இது பற்றி பா உ இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியது முற்றிலும் உண்மை என்பதையும் கலாநிதி சிவகுமார் உறுதிப்படுத்தினார்.
விஞ்ஞான அறிவியல் அடிப்படையில் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் கனமீற்றர் நீரைக் கொண்டு செல்வதால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதை அனுபவமிக்க நீர்முகாமைத்துவ நிபுணராக தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் கலாநிதி சிவகுமார் தன்னுடைய நேர்காணலில் தெரிவித்தார்.
பலத்த கண்காணிப்புக்குள் விமான நிலையங்கள் – சட்டவிரோத உள்நுழைவுகளைத் தடுக்க அனுர ஆலோசனை
சட்டவிரோத உள்நுழைவுகள் மற்றும் வெளியேறுதல்களைத் தடுக்க இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் விமான நிலையத்தில் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவதற்கு அதிகரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது, விமான நிலைய வளாகத்தில் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது குறித்த விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போதே மூன்று நிறுவனங்களிலும் கூட்டு கமரா அமைப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அறையை நிறுவுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், தற்போதுள்ள ஸ்கேனிங் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்களில் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு நடைமுறையான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் விமான நிலையங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அதிகமாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச சேவைத்துறைக்கு எதிரான சுனாமி உருவாகும் அமைச்சர் லால் காந்த எச்சரிக்கை !
அரச சேவைத்துறைக்கு எதிராக பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர் லால் காந்த, இதனை சேவைத்துறைக்கு எதிரான சுனாமியாக என்னால் மாற்ற முடியும் எனவும் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அநுராவும் சேவைத்துறையில் உள்ளவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், தான் அவர்களின் பக்கம் நிற்பேன் எனவும் அல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சீராக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் அண்மையில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரச அதிகாரிகள் மீதான காட்டத்தை மக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருவதுடன், அவர்களே ஊடகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்து, தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வட மாகாண ஆளுநர் நா வேதநாயகன் வடக்கில் உள்ள சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் உள்ள கஸ்டத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்து முடிந்த இரு மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்திலும் அரச அதிகாரிகளை கேள்விக்கு உட்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டமை எல்லோரும் அறிந்ததே. பொதுமக்கள் பலரும் பா உ அர்சுனாவின் நடவடிக்கைகளை வரவேற்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். பா உ அர்ச்சுனா தனக்கு பல குற்றச்சாட்டுகள் தபாலில் வருவதையும் தனது சமூக வலைப்பதிவில் வெளியிட்டு இருந்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடல்தொழில் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் சில அரச அலுவலர்கள் மக்களை நடாத்தும் விதம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அரச உத்தியோகங்களுக்கு 7 லட்சம் பேரே தேவைப்படும் நிலையில் அது இரட்டிப்பாக 14 லட்சம் இருந்த போதும் மக்கள் சேவைகளைப் பயன்படுத்துவதில் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். பெருமளவில் அலைக்களிக்கப்படுகின்றனர்.
தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !
தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திரத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை ஆசிரயர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இலங்கை பிரித்தானியாவிலிருந்து 1948இல் சுதந்திரம் அடைந்த போதும் இன்றும் காலனித்துவ கல்விமுறையே இலங்கையில் உள்ளது. இலங்கை சுதத்திரம் அடைந்த பின் 1956இல் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்துக்கு முன்னுரிமையற்ற கல்வி முறையால், இலங்கையில் தாய்மொழிகளான சிங்களமும் தமிழும் அபார வளர்ச்சியைக் கண்டன என இலங்கை முன்னாள் ராஜதந்திரி அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம் தெரிவித்தார். தற்போதைய பரீட்சைகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
தென் மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிப்பதற்கு தடைவிதித்து சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தரம் ஒன்பது, ஒன்பதாம் வகுப்புக்கு கீழான மாணவர்களுக்கு தனியார் கல்வியை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
யாழில் மூன்று மாணவர்கள் உள்ள வீட்டில் தனியார் கல்விக்கு 50,000 ரூபாய் செலவிடப்படு வருவதாகவும் இலவசக் கல்வி என்பது பெயரளவில்தான் இருப்பதாகவும் முன்பள்ளிச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் சில குடும்பங்களில் அவர்களுடைய வருமானத்தின் 60 சதவீதம் தனியார் வகுப்புகளுக்குச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.
இதுபற்றி கருத்து வெளியிட்ட வறணி ஆரம்பப் பள்ளி அதிபர் தனியார் கல்வி என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது என்றார்.
விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறுத்தவதாகக் கோரி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்தப் பயங்கரவாத்த தடைச்சட்டம் முன்னாள் போராளிகளாகிய எங்களை விடாது துரத்துகின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களை திருப்பித் திருப்பி விசாரணைக்கு அழைக்கின்றார்கள். என்னை ஒன்பது தரம் அழைத்துவிட்டார்கள். விசாரணை செய்வதை எங்கள் மாவட்டத்திலேயே வைத்துச் செய்யாமல் கொழும்புக்கு அழைக்கின்றனர். நான் கொழும்புக்கு சென்று வருவது என்றால் எனக்கு தங்குமிடம் போக்குவரத்து என 25,000 ரூபாய் தேவைப்படும். எல்லா மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகள் உள்ளது தானே. அங்கே வைத்ததே விசாரக்க முடியும் தானே. ஏன் எங்களை கொழும்புக்கு வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வவுனியா, வட மாகாணத்தில் இல்லையா? எம்பி திலகநாதன் காட்டம்!
வடக்கு மாகாண அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தை மட்டுமே மையப்படுத்தி பணியாற்றுகிறார்கள் என்பதை என்.பி.பி பா உ திலகநாதன் மறைமுகமாகச் சாடினார். வவுனியாவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வடக்கு மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற பொருள்பட இடித்துரைத்தார். அத்துடன் எவ்வாறு யாழ் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் எனவும் வவுனியாவில் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் இருக்கிறார்கள் என சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கூறும் போது வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் அதேசமயம் யாழ் மாவட்டத்தில் 87 கணிதபாட ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் கோரமுகத்திலிருந்து சிறிது தப்பிய வவுனியா நிலமையே இப்படியென்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக ஒட்டிசுட்டான் மற்றும் கற்சிலைமடுப் பகுதிகளில் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்களே இல்லை எனலாம். அதேமாதிரி சூடுவெந்தபுலவு பாடசாலையில் தகவல் தொடர்பாடல் கற்பித்த ஆசிரியர் இடம்மாற்றம் பெற்றுச் சென்றுவிட, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் இதுவரை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இலங்கை டிஜிற்ரலைஷேனை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் தகவல் தொடர்பாடல் கற்கை என்பது மிக முக்கியமான பாடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செட்டிக்குளம் மகாவித்தியாலத்தில் இந்து நாகரிக பாடத்திற்கு இரண்டு வருடமாக ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது என்கிறார் எம்பி திலகநாதன். அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்தை சிறப்புப் பாடநெறியாக கற்பிக்கும் தனிப்பீடமும் உள்ளது. வருடந்தோறும் இந்து நாகரீக சிறப்பு பாடநெறிப் பட்டதாரிகளும் வெளிவருகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விரும்புகிறார்கள். அதைவிட இந்து நாகரீகம் போன்ற கலைப்பிரிவுப் பாடங்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் கேள்வியும் இல்லை. எனவே இன்றைய வேலைவாய்ப்பு சந்தை நிலவரத்திற்கமைவான பாடநெறிகளை மாணவர்களுக்கு கற்பிப்பதே சிறப்பாகும்.
மேலும் தனது உரையில் திலகநாதன் குறிப்பிடும் போது, ஆசிரியர்களை இடம் மாற்றும் போது ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்படியாக இடம்மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். எப்படியானாலும் திலகநாதனின் கோபம் நியாமானதே. எடுத்துக்காட்டாக வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கூட கிளிநொச்சியை தாண்டியதாக பெரிதாக தெரியவில்லை. மாகாண பணிப்பாளர்கள் வாரத்தில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கலாம். அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் நான்கு நாட்களை வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கிரமமாக பங்கிடலாம்.
சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !
வடக்கில் இராணுவ நீக்கம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ வீதித் தடைகள் அகற்றப்பட்டு பாதைகள் திறந்துவிடப்பட்டமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்கள், இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இராணுவத் தடைகளை மீள எற்படுத்துமாறு கோருகின்றனர் என வடக்கு ஆளுநர் வேதநாயகன் அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பகுதிகளில் களவுகள், வன்முறைச் சம்பவங்கள், கள்ள மண் ஏற்றுவது, கள்ள மரம் வெட்டுவது போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாலேயே இக்கோரிக்கை வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா
தனிச் சிங்களச் சட்டம் என்பது ஆங்கிலம் மட்டும் தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை என்கிறார் முன்னாள் இலங்கை ராஜதந்திரியும் இலங்கை நிர்வாக சேவைத்துறை பயிற்றுவிப்பாளரும் பத்தி எழுத்தாளருமான அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம். இவர் தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டி, தனிச் சிங்களச்சட்டம் என்பது அப்படியான ஒரு மாயயை தான் எனத் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம், The Official Language Act (No. 33 of 1956), என்பதை ஆங்கில மொழி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெப்பிகாரத்திலேயே, ‘தனிச் சிங்களச் சட்டம்’ என முத்திரை குத்தினார் என்ற அடிப்படையில் தர்மகுலசிங்கம் தன் கருத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் 1956இல் மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டிருக்காவிடில் இன்றுள்ள நிலைக்குத் தமிழ் மொழி வளர்ச்சியடைந்திருக்க மாட்டாது எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நன்மதிப்பிற்குரியவராக இருந்த பேராசிரியரர் நந்தி 1956 ஆம் ஆண்டு மொழிக்கொள்கையால் தமிழ் மொழியடைந்த வளர்ச்சியைப் பெருமிதமாகக் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தரப்படுத்தல் கூட எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மட்டும் இருந்து பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உருவான நிலையை மாற்றி, இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்கின்ற நிலையை ஏற்படுத்தியது இந்தத் தரப்படுத்தல் தான் எனவும் அவர் தெரிவித்தார். அதனால் தான் தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஓரளவுக்காவது ஒரு சில வைத்தியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்பதையும் தர்மகுலசிங்கம் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் தமிழர்களுடைய பிரச்சினையை இந்த அரசாங்கத்துடனேயே பேசித் தீர்ப்பதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம், அதனால் தமிழ் தலைமைகள் விவேகமாகச் செயற்பட்டு ஜனாதிபதி அனுரவின் தலைமையிலான இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சகோதரங்கள். நாங்கள் இந்தியாவிடம் போய் நிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.