செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘தெய்வேந்திரமுனை-பருத்தித்துறைவரை இலங்கை இப்போது ஒன்றாகிவிட்டது’- அமைச்சர் மைத்திரிபால

maithiri-pala.jpgகிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களைப் பலி கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோஸரைக் கொண்டு தகர்த்து தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய கமத்தொழிற் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகாரசபை கூட்டத்தின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நுகவெல தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் (ஞாயிறன்று) நடைபெற்ற இக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சரும் நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுபவருமான எதிரிவீரவர்தன (ஐ.ம.சு.மு) தலைமை தாங்கினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது, நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த புலிகளின் பலத்தை பாதுகாப்புப் படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன் மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டுவிட்டது. ஜே. ஆரின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது.

பிரேமதாஸ, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்து வந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்த நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக் கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த பொழுது புதியதோர் நாட்டை உருவாக்கப்போவதாகவே அவர் அப்பொழுது கூறியிருந்தார்.

வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல

kili-04.jpgஎமது பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றியது தமிழ் மக்களுக்கோ சிறுபான்மை இனத்தவர்களுக்கோ எதிரான வெற்றியன்றி அனைத்து மக்களுக்குமான தேசிய வெற்றியாகும். அன்று தெற்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தெற்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல அதுபோல் இன்று வடக்கின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இன்று வடபகுதியில் இடம்பெறுவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் போராட்டமன்றி நாட்டின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், தேசியத்தைக் காப்பாற்றுவதற்கான தேசிய போராட்டமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேல் மாகாண பிரதம செயலாளர் பணிமனையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சியை வெற்றிகொண்ட பாதுகாப்புப் படையிரைப் பாராட்டி ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நாட்டின் சுதந்திரம் ஐக்கியத்தைக் காப்பதற்காக கிராமப் புறங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் புத்திரர்கள் உயிர்த் தியாகம் செய்கின்றனர். பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். எமது படையினரின் வெற்றி அன்று போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து 500 வருட கால ஆக்கிமிப்பிலிருந்து நாடு பெற்ற வெற்றிக்குச் சமனாகும். வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்ட முப்பதாண்டு கால யுத்தத்தைத் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி தேசத்தின் அரச பரம்பரையில் உருவான ஒரு அரசனாவார். தீவிரவாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அடிபணியாத ஜனாதிபதியை நாம் பாராட்டல் வேண்டும்.

நாடொன்றின் அபிவிருத்திக்கு பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரம் போதாது. தேசப்பற்றும் அபிமானமும் அவசியமுமாகும். உலக பொருளாதார நெருக்கடியால் தற்போது உச்ச நிலையிலிருந்த நாடுகள் கூட கீழ் நோக்கி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்முடைய நாடு என்ற சித்தாந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானதாகும். பொருளாதார சிந்தனைகளுடன் தேசாபிமான சிந்தனைகளால் தான் தேசமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். பல உலக நாடுகளும் இவ்வாறு தான் அபிவிருத்தியடைந்துள்ளன என்றார்.

பொருளாதார சீர்குலைவு: சர்வதேச உதவிகளை தடைசெய்ய சில சக்திகள் சதி முயற்சி – பிரதமர்

ratnasri.jpgநாட்டின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் உயர் பதவிகளை வகித்து, வடக்கு – தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழ்ந்த காலமொன்றிருந்தது. இவ்வுறவை சீர் குலைத்த பிரபாகரன் இதற்கான பிரதி பலனை அனுபவிப்பது நியாயமானதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் யுத்தத்தை நிறுத்தவும் அதற்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் சர்வதேச உதவிகளைத் தடைசெய்யவும் சில சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் பிரதமர் தமதுரையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

கிளிநொச்சியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட வெற்றியை அறிவிக்கும் முக்கிமான காலகட்டமொன்றில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலம் நீடிக்கப்படுவதற்கான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது இலேசானதல்ல. கைகூடாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது படையினர் சாதித்துக்காட்டியுள்ளனர். இதற்கான பின்னணியை ஏற்படுத்துவதற்காகவே மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் இறுதிமூச்சு உள்ளவாங்கப்படும் இன்றைய நிலையில் வத்தளையில் பல உயிர்களைக் காவு கொண்ட தாக்குதலை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமமானதாக சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. நாட்டைச் சீர்குலைக்க இச்சக்திகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. நாடு, இனம் என்ற உணர்வில்லாத இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையே இன்று நாட்டு மக்கள் முன்வைக்கின்றனர். பல அரசியல் வாதிகள் இதிலடங்குகின்றனர். இது போன்ற செயற்பாடுகளில் இறுதியில் நியாயமே வெல்லும்.

தேசிய உணர்வுள்ள மக்கள் வாழும் நாடு அதிஷ்டமிக்கது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டின் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையே உள்ளது. புலிகளுக்கும் அல்கைதா இயக்கத்துக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் காபுல் நகரில் இவர்களுக்கிடையிலான ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிய வருகிறது.

கேரளா, தமிழ்நாடு வழியாக நாட்டிற்குள் போதை மருந்துகளைக் கடத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் அவசியம். இதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வேளையில் உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதிகளின் கோட்டைக்குள் நுழையும் படைவீரர்களுக்கு மனதைரியத்தை வளர்க்கும் பொது நடவடிக்கைகளும் அவசியமென பிரதமர் மேலும் தெரிவித்தார். 

காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை

israeli-aircraft.jpg
யுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதலை நிறுத்துதல், சர்வதேச மேற்பார்வையின் கீழ் உடன்படிக்கை செய்யப்படல், மீண்டும் ஹமாஸ் ஆயுதத் தாக்குதலை நடாத்துவதில்லை என உறுதியளித்தல் என்பவையே அவையாகும்.

இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என சூளுரைத்துள்ள ஹமாஸ் தலைமையகம் இஸ்ரேல் முற்றுகைகள் அகற்றப்பட்டு எல்லைகள் திறக்கப்படுவதுடன் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில் யுத்தநிறுத்தம் சாத்தியமென ஹமாஸ் அறிவித்துள்ளது.  காஸாவில் கடந்த இரு வாரங்களாக இடம்பெறும் மோதல்கள் மிகப் பெரிய பிராந்திய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலியாவோரின் தொகை உயர்ந்தவண்ணமுள்ளன. காஸாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேல் இன்னும் தங்கள் இலக்குகளை அடையவில்லை.

ஹமாஸின் ரொக்கட் தளங்களை தகர்ப்பதே நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதாயின் பொதுமக்களை கேடயங்களாகப் பாவிப்பதை ஹமாஸ் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தது.  ஹமாஸின் தலைமையகம் ஸியோனிஸ்டுகளை எதிர்த்து மூர்க்கமாகப் போராடும்படி தனது உறுப்பினர்களைக் கேட்டுள்ளது.  காஸாவில் எமது குழந்தைகளைக் கொலை செய்யும் சியோனிஸ்ட் வெறியர்கள் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய எண்ணியுள்ளதாகவும் ஹமாஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் தடையாக உள்ளதாக ஐ. சி. ஆர். சி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவசர கால சட்டம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

sl-parlimant.jpgஅவசர காலச் சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. நேற்றைய வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ். ரஜாப்தீன் ஆகியோர் மட்டுமே சபையில் இருந்தனர். ஐ. தே. கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. அதேபோன்று ஆளும் தரப்பில் இ. தொ. கா. மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் சபையில் இருக்கவில்லை. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 10 பேர் மட்டுமே பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும்.

புலிகள் அமைப்பை தடைசெய்வது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் -அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது தொடர்பான முடிவு இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட விருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடைசெய்ய வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது. ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இப்போது புலிகளை தடைசெய்தேயாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விடுதலைப்புலிகளை தடைசெய்வது அவசரகால விதிகளின் கீழா அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலா என்பது குறித்து அரசாங்கம் சட்டஆலோசனைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது. இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகையை புலிகள் தாக்கியபோது அந்த இயக்கத்தை அரசு தடைசெய்திருந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தடைநீக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத பயங்கரவாத இயக்கமாகவே புலிகள் இயக்கம் தொடர்ந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களின் பாஷையிலேயே பதிலளிக்கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

முகமாலை, கிளாலி முன்னரங்கு நிலைகள் படையினரின் கட்டுப்பாட்டில்

_army.jpgமுகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலு ள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதியை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 53 வது மற்றும் 58 வது படைப்பிரிவினர் இந்தப் பகுதியிலுள்ள முன்னரங்கு நிலைகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள படையினர் இங்கிருந்து தென்பகுதியிலுள்ள பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார, கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் உதய நாணயக்கார இங்கு மேலும் தகவல் தருகையில்:- யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 500 தொடக்கம் 600 மீற்றர் வரையான முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை படையினர் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது முன்னெடுக்கும் படை நடவடிக்கையின் போது படையினரை இலக்கு வைத்த புலிகளின் பதில் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், புலிகள் பின்வாங்கிச் செல்லும் நிலைகள் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஆணையிறவுக்கு தெற்கு மற்றும் அதன் கரையோரப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தட்டுவான் கட்டு மற்றும் தமிழ்மடப் பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு தெற்கை கைப்பற்றியதை அடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முல்லைத்தீவு பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை பிரதேசமும் அதனை அண்மித்த பகுதிகளும் மாத்திரமே புலிகளின் விநியோக பாதையாக உள்ளது. ஒலுமடுவுக்கு கிழக்கேயும், ஒட்டுசுட்டானுக்கு மேற்கேயும் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தின் நான்காவது மற்றும் மூன்றாவது செயலணியினர் ஏ- 32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் மற்றும் ஒலுமடு வரையான பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினர் ஒட்டு சுட்டானிலிருந்து முள்ளியவளை வரையான வீதியை நோக்கி தற்பொழுது முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை புலிகள் நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினரிடம் இழந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். முகமாலையிலிருந்து தெற்காகவுள்ள ஆணையிறவுக்கு 19 கிலோ மீற்றரும், அங்கிருந்து கிளிநொச்சிக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமும் உள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மீட்பு வெற்றி ஐ.தே.கட்சிகே சொந்தமானது – எஸ்.பி. திஸாநாயக்க

sbdisanayakka.jpg“தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசேயாகும்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியமையால்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது. அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசு இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் – என்றார் அவர்.

ஆட்டோ: பெற்றோல் நிவாரணம்: சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

presidentmahinda.jpgமுச்சக்கர வண்டிகளுக்கென குறைந்த விலையில் அரசினால் வழங்கப்படவுள்ள பெற்றோலுக்கான நிவாரணத்தை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றோல் சகாய விலையை பெற்றுக் கொள்வதாயின் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சமுர்த்தி வங்கியில் தம்மை பதிவு செய்து கொள்வது கட்டாயம். 250,000 முச்சக்கர வண்டிகளுக்கென வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக அரசுக்கு மேற்படி சங்க உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேற்படி தொகையை வடக்கில் யுத்தம் புரிவோரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை மீளப் பெறுவது எனது நோக்கமல்ல. இதனை விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். விரும்பாதோர் படையிணரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கர வண்டிகளை காஸில் இயக்கக் கூடிய விதத்தில் அதனை மாற்றியமைக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவதற்கான மீட்டர்களை தருவிக்கும் போது அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவது சம்பந்தமாக யோசிப்பதாகவும் தெரிவித்தார்.

வன்னிப் பாடசாலைகளில் அகதிகள்; மாணவர்களின் கல்வி பாதிப்பு

school-2.jpgவன்னியில் இந்த வருடத்திற்கான பாடசாலைத் தவணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாடசாலைகளில் தங்கியுள்ளனர். 200 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள பாடசாலைகளும் ஏனைய பாடசாலைகளிலேயே இயங்குகின்றன. அவற்றில் மக்களும் தங்கியுள்ளனர். அதனால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.