கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களைப் பலி கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோஸரைக் கொண்டு தகர்த்து தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய கமத்தொழிற் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகாரசபை கூட்டத்தின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நுகவெல தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் (ஞாயிறன்று) நடைபெற்ற இக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சரும் நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுபவருமான எதிரிவீரவர்தன (ஐ.ம.சு.மு) தலைமை தாங்கினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது, நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த புலிகளின் பலத்தை பாதுகாப்புப் படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன் மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டுவிட்டது. ஜே. ஆரின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது.
பிரேமதாஸ, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்து வந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்த நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக் கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த பொழுது புதியதோர் நாட்டை உருவாக்கப்போவதாகவே அவர் அப்பொழுது கூறியிருந்தார்.