முச்சக்கர வண்டிகளுக்கென குறைந்த விலையில் அரசினால் வழங்கப்படவுள்ள பெற்றோலுக்கான நிவாரணத்தை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றோல் சகாய விலையை பெற்றுக் கொள்வதாயின் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சமுர்த்தி வங்கியில் தம்மை பதிவு செய்து கொள்வது கட்டாயம். 250,000 முச்சக்கர வண்டிகளுக்கென வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக அரசுக்கு மேற்படி சங்க உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேற்படி தொகையை வடக்கில் யுத்தம் புரிவோரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை மீளப் பெறுவது எனது நோக்கமல்ல. இதனை விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். விரும்பாதோர் படையிணரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கர வண்டிகளை காஸில் இயக்கக் கூடிய விதத்தில் அதனை மாற்றியமைக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவதற்கான மீட்டர்களை தருவிக்கும் போது அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவது சம்பந்தமாக யோசிப்பதாகவும் தெரிவித்தார்.