செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரணிலின் உரை ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பு

ranil-2912.jpgபாராளு மன்றத்தில் தான் ஆற்றிய உரை வானொலியில் ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையின் இடைநடுவே பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி. சிங்கள செய்தி சேவையில் ஒலிபரப்பப்பட்ட போது இடையில் பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் தனது உரைக்கு இடைநடுவில் பாராளுமன்றத்திலேயே பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதா அல்லது இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து ஒலிக்கச் செய்யப்பட்டதா என்று அவர் நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

handcuff.jpgபுத்தளம், மாரவில பகுதியிலிருந்து இயந்திரப் படகொன்றில் அவுஸ்திரேலியா நோக்கி திங்கட்கிழமை மாலை புறப்பட்ட 19 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படகோட்டி ஒருவருக்கு பெருந்தொகை பணம் செலுத்திய 19 பேர் கடந்த 15 ஆம் திகதி மாரவில கரையிலிருந்து படகில் புறப்பட்டனர்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக இவர்கள் சென்ற இயந்திர படகு பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் கரைதிரும்பியது. இதையடுத்து இந்தப் 19 பேரும் கட்டுநேரிப் பகுதியில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டனர். மீண்டும் திங்கட்கிழமை மாலை மாரவில கரையிலிருந்து அந்த இயந்திரப் படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். இவர்களது நடமாட்டத்தை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இது பற்றி மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கவே, இவர்கள் புறப்படும் போது அங்கு வந்து 19 பேரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இதில் 15 பேர் தமிழ் இளைஞர்களெனவும் ஐவர் சிங்கள இளைஞர்களெனவும் தெரியவந்தது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதமாற்ற தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சி – கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

மத மாற்றத் தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மத சுதந்திரத்துக்கான கிறிஸ்தவ அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் இச்செயலுக்கு எதிராக மக்கள் சக்தியை அணிதிரட்ட அந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.  இது தொடர்பில் திங்கட்கிழமை கொழும்பு அளுத்மாவத்தையிலுள்ள இயேசு ஜீவிக்கிறார் பணிமனையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டதோடு விஷேட அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மீண்டும் ஒரு முறை மதமாற்ற தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, சில புத்த பிக்குகள் நினைக்கிறார்கள். இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின், சுவிசேஷம் சொல்ல முடியாது, ஆன்மீகக் கூட்டங்களுக்குத் தடை, ஞானஸ்தானம் கொடுக்க முடியாது, வீட்டுக் கூட்டங்கள், வைத்தியசாலை ஜெபங்கள் செய்ய முடியாது, மதப் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற முறைகளை இந்தச் சட்டம் தடுப்பதால், நற்செய்தி அறிவிப்பது அழுத்தத்துக்குள்ளாகி இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உரிமையும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதால் நாம் இதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இலங்கை அரசியல் யாப்பின் 3 ஆம் அத்தியாயம் 10,12 ஆம் ஷரத்துக்களின்படி ஒவ்வொரு மனிதனும் தனது சுய சிந்தனைக்கு சுதந்திரமானவனென்றும், சுய நினைவின்படி முடிவெடுக்கவும் ஒரு மதத்தின் கொள்கையை பின்பற்றவோ அல்லது ஒரு மதத்தை தழுவவும் அல்லது ஒரு நம்பிக்கையை தன் விருப்பப்படி பின்பற்றவும் சுதந்திரமானவன் என்றும் எந்த பிரஜையும் சாதி, சமயம், மொழி, பால், அரசியல் நோக்கம், பிறந்த இடம் இப்படிப்பட்ட நிலைமைகளில் ஒடுக்கப்படலாகாது என்றும் உள்ளது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தனது சுயவிருப்பத்திற்கமைய எந்த சமயத்தையும் தெரிந்தெடுக்கவும் உரிமை உடையவன்.

2003 ஆம் ஆண்டு  இந்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பல எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. மீண்டும் 2004 ஆம் ஆண்டு இச்சட்டமானது ஹெல உறுமயவினால் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பாராளுமன்ற குழப்ப நிலைமைகளால் கைவிடப்பட்டது. மீண்டும் 3 ஆம் முறையாக இச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே இந்த சட்டத்தை இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் உலகம் வாழ் கிறிஸ்தவர்களும் எதிர்க்கின்றனர். கிறிஸ்தவ நாடுகள் மற்ற சமயங்களிலுள்ளவர்களுக்கு இடையூறு விளைவித்து, சமய நம்பிக்கைகளில் தடைகள் ஏற்படுத்துவதில்லை. சகலருக்கும் மத சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்திக் கேட்பது மீண்டுமொருதடவை மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் சகல இனமக்களும் ஒற்றுமையுடன் வாழும் நிலையை உறுதிப்படுத்துமாறும் கேட்கின்றோம்.  தேசிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் செயலாளர் வணபிதா ரொஷான் டி.எஸ்.ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சமீபகாலமாக கிறிஸ்தவ மக்கள் மிகவும் மோசமாக கணிக்கப்பட்டு வருவதாகவும் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தார். ஒரு ஜனநாயக நாட்டில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. அதுவும் சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் ஜனநாயகம் வலுவிழக்கச் செய்யப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் மத மாற்றத் தடை முயற்சிக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு – இருவர் பலி. 11 பேர் காயம்

batti-town.jpgமட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில்  பொலிஸ்  அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும்  பொலிஸ் துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 2  பொலிஸார்  மற்றும் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக  பொலிஸ் , இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகரப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் – சபாநாயகர்

speaker.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐ. தே. க. சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று (21 ஆம் திகதி) சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணிப் பிரதம கொறடாவும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா இந்த ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலையை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சபையில் கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இச்சமயமே சபாநாயகர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலை தொடர்பாக (நாளை) இன்று சபையில் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை – அமெரிக்க பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகளால் அண்டை நாடுகளுக்கு பாதிப்பில்லை

sl-parlimant.jpgஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகள், அண்டைய நாடுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதென்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைப்பதற்கு இடமளிக்கப் படமாட்டாதென்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர், அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கில் பாடசாலைகளைப் புனரமைக்கவும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இலங்கை வந்ததாகக் கூறினார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பு, சேவை பரிமாற்றம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கு மிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இது குறித்த கலந்துரையாடல்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நோக்கில்தான் மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வந்தார்கள். ஜே. வி. பி.யினர் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அவர்கள் இலங்கை வரவில்லை இவ்வாறு 89 நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

கிழக்கில் சமூக, பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பாதுகாப்புத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார எழுப்பிய கேள்விகளுக்குத் தனித்தனியாகவும் பதில் அளித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதியொருவர் என்ன நோக்கத்திற்காக இலங்கை வந்தார். எப்போது வந்தார், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஆற்றும் பணிகள் யாவை, எப்போது திருப்பிச் செல்வார்? என்றெல்லாம் அனுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேலும் பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தார்கள். 14 ஆம் திகதி மாலைதீவு சென்று மீண்டும் வந்தார்கள். 18 ஆம் திகதி நாடு திரும்பிவிட்டார்கள். வேறு எந்த இராணுவ செயற்பாடுகளுக்கும் அவர்கள் இலங்கைக்கு வரவில்லை. அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு சர்வதேச நாட்டுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

திருமலையில் ஏவுகணை பொருத்த அமெரிக்கக் குழு கவனம் செலுத்துகிறதா? -அநுர திஸாநாயக்க

parliment_inside.jpg திருகோணமலைக்கு அண்மையிலுள்ள தீவுகளில் ஏவுகணைகளைப் பொருத்துவது குறித்து அமெரிக்க இராணுவக்குழு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவ்வறிக்கை வருமாறு:-

அமெரிக்க இராணுவத்தினர் பசுபிக் பிராந்தியத்துக்கான கட்டளை குழுவொன்று தற்போது இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல். கொனன்ட்டின் தலைமையில் வந்திருக்கும் இந்த குழுவில் தெற்காசிய நாடுகள் தொடர்பான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பெட்ரிகோ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் திருகோணமலையை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது வருகையின் நோக்கம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த கிழக்குமாகாண மக்களின் மீள்குடியேற்றல் மற்றும் புனரமைத்தல் தொடர்பான விடயங்கள் எனக்கூறப்படுகிறது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை புனரமைப்பதற்காக இராணுவ அதிகாரிகளை இங்கு அனுப்புவதன் நோக்கம் என்ன வென்று புரியவில்லை.

இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பயன்படுத்தும் திட்டம் இருந்தது. இலங்கையில் அமெரிக்க ஏவுகணைகளை திருகோணமலையில் பொருத்தும் முயற்சியொன்று 1978ல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அது வெற்றியளிக்கவில்லை. 1985ல் மீண்டும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சித்தது. மக்கள் எதிர்த்தமையால் அது கைவிடப்பட்டது.

அதே போன்று, தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக “பிரம்ம புத்திர திட்டம்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.” வி. யி. தி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்க இராணுவத்தை நிலை நிறுத்தக் கூடிய பூமியாக குறிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அமெரிக்காவின் யுத்த திட்டங்களில் திருகோணமலை முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்கா வுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஒப்பமிட்டனர்.

அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் செய்து கொண்ட இதேபோன்ற ஒப்பந்தங்களில் பொதுவான அடையாளமொன்றிருந்தது. அதாவது அமெரிக்காவின் யுத்த தேவைகளுக்காக அந்த நாடுகளின் பூமியைப் பயன்படுத்த இடமளித்தல். எனவேதான், அமெரிக்காவின் இராணுவக் குழுவொன்று திருகோண மலைக்கு வந்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. அந்நிய நாடுகளின் யுத்த தேவைகளுக்காக எமது மண்ணை பயன்படுத்த இடமளிப்பதனால் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதேபோன்று எமது மண்ணையும், வளங்களையும் அந்நிய இராணுவமொன்றுக்கு பயன்படுத்த இடமளிப்பது, எமது நாட்டின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.

எமது நட்பு நாடுகளின் மீது யுத்தரீதியான தாக்குதல் நடத்த எமது மண்ணில் இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. சமீபத்தில் திருகோணமலைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவக் குழு, திருகோணமலைக்கு அண்மித்த தீவுகளில் ஏவுகணை பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து இந்த உயர் சபைக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, இது குறித்த அனைத்து தகவல்களையும் இந்தச் சபையில் முன்வைக்குமாறு கேட்கின்றேன்.

பராக் ஒபாமாவுக்கு சபையில் பாராட்டு

parliment_inside.jpgஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற பராக் ஒபாமாவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசாங்கத்தின் சார்பிலும், எம்.பிக்கள் சார்பிலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

அதேநேரம் இந்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அளித்த ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுர திசாநாயக்க நேற்று சபையில் எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விகளுக்கு சபாநாயகரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பதிலளித்தார். இச்சமயமே வெளிவிவகார அமைச்சர் மேற்படி நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.