புத்தளம், மாரவில பகுதியிலிருந்து இயந்திரப் படகொன்றில் அவுஸ்திரேலியா நோக்கி திங்கட்கிழமை மாலை புறப்பட்ட 19 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படகோட்டி ஒருவருக்கு பெருந்தொகை பணம் செலுத்திய 19 பேர் கடந்த 15 ஆம் திகதி மாரவில கரையிலிருந்து படகில் புறப்பட்டனர்.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக இவர்கள் சென்ற இயந்திர படகு பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் கரைதிரும்பியது. இதையடுத்து இந்தப் 19 பேரும் கட்டுநேரிப் பகுதியில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டனர். மீண்டும் திங்கட்கிழமை மாலை மாரவில கரையிலிருந்து அந்த இயந்திரப் படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். இவர்களது நடமாட்டத்தை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இது பற்றி மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கவே, இவர்கள் புறப்படும் போது அங்கு வந்து 19 பேரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இதில் 15 பேர் தமிழ் இளைஞர்களெனவும் ஐவர் சிங்கள இளைஞர்களெனவும் தெரியவந்தது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.