அரசாங்கத்திற்கு எதிராக ஐ. தே. க. சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று (21 ஆம் திகதி) சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணிப் பிரதம கொறடாவும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா இந்த ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலையை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து சபையில் கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இச்சமயமே சபாநாயகர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலை தொடர்பாக (நாளை) இன்று சபையில் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.