எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேசிய மீலாத் விழா கலாசார ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி 46 பேர் காயம்.

akkurassa-02.jpgஇன்று மு.ப. 10.40 மணியளவில் மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரி ஒருவருடன் தேசம் நெற் தொடர்பு கொண்ட போது இத்தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தேசம் நெற்க்கு உடனடியாகத் தெரிவித்தார். இத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 14பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

akkurassa-05.jpgஇந்தச் சம்பவத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார். மாத்தறை வைத்திய நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி அமைச்சர் மஹிந்த விஜயசேகர உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அமீர் அலி, மகிந்தயாப்பா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

akkurassa-04.jpgமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய ரீதியில் வைபவமாகக் கொண்டாடுவதுண்டு. இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மீலாதுன் நபி விழா விழாக் கொண்டாடங்கள் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ கொடபிட்டிய எனுமிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

akkurassa-01.jpg அமைச்சர்கள் விழாவில் பங்கு கொள்ள ஊர்வலமாக வருகை தந்திருந்த நேரத்தில் சைக்கிளில் வந்த குண்டுதாரர் ஒருவர் மூலமாக குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஹெக்டர் வீரசிங்க தகவல் தருகையில் கொழும்பிலிருந்து விசேட பயிற்சி பெற்ற டாக்டர்கள் குழுவொன்று மாத்தறை வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புகைப்படங்கள் lankadeepa.lk இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

அகதிகளுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சர் ரிசாட் பதியுதீன் தகவல்

risard.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, வவுனியா மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, வைத்தியம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவனியா மாவட்டத்தில் தற்போது 3 நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தாங்கள் சமைத்து உண்பதற்குரிய வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு கூட்டு சமையல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அரச செயலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும், உள்ளுர் தொண்டு நிறுவனங்களினதும் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

இலங்கை கடற்பரப்புக்குள் அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த கப்பலும் வர முடியாது

rohitha_bogollagama.jpgஇலங்கைக் குச் சொந்தமான கடற்பரப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு யுத்தக் கப்பலோ சரக்குக் கப்பலோ அரசாங்கத்தின் அனுமதியின்றி வரமுடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அமெரிக்க இராஜதந்திரிகளின் உயர் மட்டக் குழுவொன்று வன்னியில் இடம் பெற்றுவரும் மோதல்களில் தமது யுத்தக் கப்பல்களை ஈடுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அமைச்சர் போகொல்லாகம முழுமையாக மறுத்தார்.

வெளிநாட்டு யுத்தக் கப்பல்களோ சரக்குக் கப்பல்களோ எமது கடல் எல்லைக்குள் வரவில்லையெனவும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அமைச்சர் அழுத்தமாக கூறினார். வெளி விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை விடுவி ப்பதற்காகவும் தாம் பல்வேறு நாடுகளு டன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன் உதவிகளையும் நாடியுள் ளோம். தவிர வெளிநாடுகளின் இராணுவ உதவிகள் எமக்கு அவசிப்படாதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

மோதல்களை மேலும் தீவிரமடையச் செய்து புலிப் பயங்கரவாதிகளை ஒரேயடியாக அழித்துவிட முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததற்குக் காரணம் சிவிலியன்களே என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை பாதுகாப்பான முறயில் வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வ துடன் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அத்துலத் கஹன லியனகே கருத்துத் தெரி விக்கையில், இதுவரையில் அரச கட்டு ப்பாட்டு பகுதிக்கு 30 ஆயிரத்து 579 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி. யின் உதவியுடன் இறுதியாக 3 ஆயிரத்து 240 பேர் திருமலை வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 2 ஆயிரத்து 806 பேர் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சகல நவீன மருத்துவ வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களின் மருத்துவ வசதிகளுக்காக வவுனியா, மன்னார் மற்றும் செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை வழங்க இலங்கையிலுள்ள ஐ.நா. அமைப்பு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை நேற்றுக் காலை திருகோ ணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது புலிகள் மேற் கொண்டுள்ள ஆட்டிலறி தாக்குதலை அரசாங்கம் சார்பாக தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம இச் செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார். இம்மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் எ. லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு பாக். சாரதியால் ஏற்பு

cricket_pakisthan.jpg இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் விடுத்த அழைப்பை இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் வாகனச் சாரதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார நேற்று குறித்த வாகனச் சாரதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினார். இதன்போதே நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வாகனச் சாரதியான முஹம்மட் கலீலுக்கான அழைப்பு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தது.

உங்களின் துணிச்சலான வீரமிக்க செயற்பாட்டுக்கு நாங்கள் தரும் கெளரவம் இது என குறித்த அழைப்பிதழில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களை காப்பாற்ற முடிந்ததையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைவதாக வாகனச் சாரதி, நிறுவன தலைவருடனான தொலைபேசி உரையாடலின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

38 வயதுடைய இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் வாகனச் சாரதியாக சுமார் 22 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு ஆண்கள் ஜவாத் (10), உஸாமா (13), இரண்டு பெண்கள் ஷவியா (7), லியவா (4).

ஏ-9 வீதி ஊடாக 12ம் திகதி யாழ் குடாவுக்கு மீண்டும் உணவுப் பொருட்கள்

lorries.jpgயாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேலும் 45 லொறிகள் நாளை மறுதினம் 12ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நேற்று தெரிவித்தது.

‘ஏ-9’ வீதியூடாக இப்பொருட்கள் கொண்டு செல்லப் படவுள்ளதுடன், மாதாந்தம் 150 லொறிகளில் யாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகள், அங்கிருந்து யாழ் குடா நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை இங்கு ஏற்றிவந்து சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டுக்கு 350 மெற்றிக் தொன் உணவுகளை ஏற்றிக்கொண்டு 35 லொறிகள் நேற்றுக் கொழும்பு வெலிசறை உணவுக் களஞ்சியசாலையிலிருந்து புறப்பட் டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வாராவாரம் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பப்படும். தெற்கில் போன்றே குறைந்த விலையில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட் களைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 115 சிவிலியன்கள் வருகை

navy_rg.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்கு 115 பொது மக்கள் நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே 115 பொதுமக்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 1800 பொது மக்கள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர், கடல் மற்றும் தரை வழிகளைப் பயன்படுத்தி யாழ்., வவுனியா, திருகோணமலையை நோக்கி ஜனவரி முதல் இதுவரை 38, 477 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரிடம் தஞ்சமடைந்த 115 பொதுமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் 2008இல் வீழ்ச்சி; பால்நிலைசார் அமைப்பு தகவல்

thinking.jpgபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக தனமல்வில பிரதேசத்தில் காணப்பட்டதோடு, 2007 இல் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் “மதட்ட தித்த’ செயற்திட்டத்தின் மூலமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை மட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த வன்முறைகள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், பெண்கள் பங்கு கொள்ளும் தேசிய மட்டக் குழுவினால் நடத்தப்பட்ட மிதிப்பீட்டில், பால் நிலைசார் அமைப்புக்கு கடந்த வருடத்தில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீட்டு வன்முறை தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளில், மிக மோசமாக இடம்பெற்ற வெவ்வேறு தரத்திலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2008 டிசம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பால் நிலை சார் அமைப்புக்கு மொத்தமாக 328 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை அடுத்து ஆகக் கூடுதலாக, விவாகரத்து மற்றும் தாபரிப்பு தொடர்பாக 58 முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளன. மேலும் பாலியல் தொந்தரவுக்குள்ளானமை தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, இதே காலப்பகுதியில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலை, மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, தொழில்வாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு தொடர்பாக மேலும் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பாலியல் வல்லுறவு தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மு.கா. தலைவரின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் துணைபோகக் கூடாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard-badi.jpgமுஸ்லிம் சமூகம் தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரானவர்கள். இதன் மூலம் இச்சமூகம் எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷேய்க் பீ. நிஹ்மத்துல்லா தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில்; முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தமது நேர்த்தியான சிந்தனையினாலும், அரசியல் ஞானத்தினாலும் இக்கட்சியின் பலத்தைக் கொண்டு ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் தீர்மானிக்கும் வலிமையைக் கொண்டிருந்தார்.

பதவியே வாழ்க்கையென எண்ணி மமதையுடன் வாழும் மனிதர்களின் வரலாறுகளைக் காண சமூகம் அங்கீகரித்ததில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகத்தினை படுகுழியில் தள்ளிவிடும் துயர்மிகு செயற்பாட்டை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடமுள்ளது.

எனது அரசியல் பிரவேசமானது பாதிக்கப்பட்டு நலிவுற்று காணப்படும் மக்களின் ஈடேற்றமும் விமோசனத்திற்காகவுமே ஆகும். இக்குறுகிய காலத்துக்குள் எனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி முடியுமான பணிகளை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். எம். அபூபக்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மோசமான இடிமின்னல் அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

climate.jpgநாட்டில் கடுமையான வரட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ள இதே வேளை இடி, மின்னல் அபாயம் மிக மோசமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாது காப்புபெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரட்சியின் பின்னர் நாடெங்கிலும் மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரியான சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இதே நேரம் தென் கிழக்கு கடலில் உருவான தாழமுக்கம் இன்று வட கிழக்கு கடல் பரப்பின் ஊடாக இந்நாட்டின் கடற்பரப்பை விட்டு தூரமாகிச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தாழ முக்கம் காரணமாகவே யாழ்ப்பாணம், திருமலை, மட்டக்களப்பு உட்பட நாடெங்கிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாழமுக்க நிலை இன்று இந்நாட்டை விட்டு அகன்று விடும் என்றாலும் மாலை வேளையிலும், இரவிலும் அடுத்து சில தினங்களுக்கு இடி மின்னலுடன் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்த நாட்களில் இடி, மின்னல் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவென மக்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது மிக அவசியம்.

இதேநேரம் இந்நாட்டின் கடற்பரப்பிலும் இடியுடன் கூடிய மழை அடிக்கடி பெய்ய முடியும். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் வடகிழக்காகவும், ஏனைய கடற்பரப்பில் வட மேற்காகவும் காற்று வீசும், இப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்கும். ஆனால் வட பகுதி கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும். கடலில் சாதாரண கொந்தளிப்பு நிலை காணப்படும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர த்தில் திருமலையில் 65.5 மி.மீ. மட்டக்களப்பில் 42.7 மி.மீ, மிஹிந்தலையில் 63.5 மி.மீ, களுத்துறையில் 58.5 மி.மீ, நீரேந்து பிரதேசங்களான போவத்தனவில்35.3 மி.மீ, லக்ஷபானவில் 13.8 மி.மீ, சமனலவெவவில் 12.6 ம.மி.மீ. உட் பட நாடு பூராவும் மழை பெய்துள்ளது என்றார்.

கப்பம், ஆட்கடத்தல், மிரட்டல் தொடர்பாக பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

sri-lanka-police.jpgவவுனி யாவில் மீண்டும் ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், மிரட்டல் தொடர்பான சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதால் அவை தொடர்பான புகார்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை அறிவித்தனர். வவுனியா பகுதி எங்கும் பொலிஸார் வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியில் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் வங்கி அதிகாரியும் ஊழியரும் கடத்தப்பட்டு கப்பம் கேட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால், வங்கிகளின் வேலைகளும் தடைப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

வவுனியாவில் சட்டம், ஒழுங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். யாருக்கும் கப்பம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கப்பம் தருமாறு எவரும் மிரட்டினால் அது குறித்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. வவுனியாவில் மக்கள் பாதுகாப்புக் குழுக்களை நியமிக்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வவுனியாவில் கப்பம் கடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.