எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடமராட்சிக்கிழக்கில் கடற்றொழில் நேற்று ஆரம்பம்.

வடமராட்சிக் கிழக்கில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பதற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை காலை வடமராட்சிக்கிழக்கின் மாமுனை, செம்பியன்பற்று, உடுத்துறை, வத்திராயன், ஆகிய கடற்பகுதிகளில் சுமார் 200 கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழில்களை ஆரம்பித்தனர்.

கடற்றொழிலாளர்கள் மாமுனையிலிருந்து அழியவளை வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபடலாம என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  நேற்று கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் நிகழ்வை 551வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

வடமாராட்சிக் கிழக்குப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இது வரை 600 கடற்றொழிலாளர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.

முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்து வரும் இரு மாதங்களும் கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

fo.jpgதற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இக்கடும் மழையினால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் வளிமண்டலத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக இடைமழை பெய்யவிருப்பதாகவும், மலையகத்தில் நுவரெலிய, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடைமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பருவமழைக்கு முன்பாக தற்போது பெய்த வரும் மழையினால் வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்டுவரும் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து வரகின்றனர். தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பாதிப்படைந்து வருவதோடு வீடமைப்பிற்கான உதவிகளைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வீடமைக்கும் பணிக்கான பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாலும் இரண்டாம் கட்ட பணம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பரவலான மழை – மலையக பகுதிகளில் மண்சரிவு

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நேற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் ஆகக்கூடிய மழை புத்தளத்தில் 174.5 மி. மீட்டர்கள் அளவில் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இடைப்பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கால நிலை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளம் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகால்தென்ன குறிப்பிடுகையில், நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ராஜாங்கனைப் பிரதேசத்தில் 101.00 மி. மீ. மழை பெய்துள்ளது. அத்தோடு மகா இலுப்பள்ளமவில் 128.00 மி. மீ, அனுராதபுரத்தில் 88.090 மி.மீ என்றபடி மழை பெய்திருக்கின்றது. இதன் விளைவாக இராஜாங்கனைக்குளம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. அதனால் இக்குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று முதல் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறுகையில், இராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதால் எலுவன்குளம் ஊடான மன்னார்- புத்தளம் வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மன்னார்- புத்தளம் வீதியில் எலுவன்குளம் பிரதேசத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கி இருப்பதன் விளைவாகவே இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்த வெள்ள நீர் வடிந்து வருவதாக அம் மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்கள் கூறினர்.

நுவரெலிய – வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா – வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா – வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்களில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப்பாதையில் முன்னெச்சரிக்கையோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டயொன்று குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.

‘M, N’ தொடரிலக்கம். புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம்

pas.jpg‘M, மற்றும் ‘N’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச்சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

96 ஹஜ் முகவர்களுக்கு திணைக்களம் அங்கீகாரம்

hajj.jpgஇம்முறை ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்ல 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் யாத்திரிகர்கள் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், மத கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார். அரசாங்க ஹஜ் குழுவும் ஹஜ் யாத்திரிகர் களின் நலன்கள் தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கியுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை:

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறுவயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அருட்தந்தை S J இம்மானுவேல் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவு! – ‘பாவிகளையும் யேசு மன்னித்து வரவேற்பாராக’: ரி கொன்ஸ்ரன்ரைன்

Emmanuel_S_J_Rev_Frநான் முதலில் தமிழன் – பின்னர்தான் கிறிஸ்தவன்”, “பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்” என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா) பேராசிரியர் டாக்டர். S J இம்மானுவேல் அடிகளார் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவதை தற்போது பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1950 க்களில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ‘இறையியல்’ ஒரு புரட்சிகர வடிவத்தை எடுக்க ஆரம்பித்தது. ‘விடுதலை இறையியல்’ என்ற கருத்தாக்கம் உருவானது. இது காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிய சர்வதேச கருத்தாக்கமானது. ”கிறிஸ்தவ மத நம்பிக்கையை ஏழைகளின் துன்பம், அவர்களின் போராட்டம், நம்பிக்கை, சமூகத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகுவது என்ற அடிப்படையில் ஏழைகளின் கண்களினூடாக கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் பார்ப்பதுவே ‘விடுதலை இறையியல் ‘எனப்படுகின்றது.”

சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு உள்ளுணர்வாக இந்த இறையியல் பலம்பெற்றது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த ‘விடுதலை இறையியல்’ அடிப்படையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருந்த கத்தோலிக்க மத நிறுவனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தது.

Catholic_Fr_Carry_Piraba_Playcardஆனால் பின்னான காலகட்டத்தில் விடுதலை அமைப்புகளே மக்களது துன்பங்களுக்கும் கொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்த போதும் இந்த மத நிறுவனத்தினால் முழுமையாக தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பியும் விரும்பாமலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் கத்தோலிக்க மத நிறுவனம் நெருங்கி நின்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் S J இமானுவல் அடிகளார் அருட்தந்தை கஸ்பார் போன்றவர்கள் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தங்களையும் தாங்கள் சார்ந்த மத நிறுவனத்தையும் தம் சொந்த நலன்சார்ந்து பயன்படுத்திக் கொண்டனர். 

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தமிழர்களின் புலன்பெயர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி லண்டன் பாரிஸ் ஜேர்மன் நகரங்களில் நடுறோட்டில் படுக்கவைத்து ஆட்டம் ஆடி கூத்தாடி தாம் வாழும் தமக்கு தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கே இடைஞ்சலாக இருந்த சம்பவங்களில் S J இம்மானுவேலின் பங்கு முக்கியமானது.
 
கடந்த பல வருடங்களாக ஜேர்மனியில் இருந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்கரத்தைச் சுற்றியவர் S J இம்மானுவேல் அடிகளார். பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எவ்வித அரசியல் அறிவோ சாணக்கியமோ அல்லது மொழித்திறனோ அற்ற புலம்பெயர் புலி வால்களுக்கு உயர் கல்வித் தகைமையும் அதீத பேச்சாற்றலும் பலமொழித் திறமையும் கொண்ட அதிலும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க உயர் குருவானவர் கிடைக்கப்பெற்றது ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. வணபிதா S J இம்மானுவேலின் தகமையுடனும் அனுபவத்துடனும் எந்த புலி பிரமுகரும் ஈடாக இருக்கவில்லை. இதனால் Global Tamil Forum (GTF) (உலக தமிழ் பேரவை) இன் தலைமை S J இம்மானுவேலுக்கு பொன் தகட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

Emannuel_S_J_Group_With_Gordon_BrownGTF பிரித்தானியாவில் இயங்கிவரும் British Tamil Forum,  Tamils For Conservative,  Tamils For Labour போன்ற அமைப்புக்கள் போன்றதொரு விடுதலைப் புலி ஆதரவு அமைப்பே. ஆக மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வணபிதா இம்மானுவேல் புலன்பெயர் தமிழர்களின் தேசியத்தலைவர். இம்மானுவேல் அடிகளார் Global Tamil Forum (GTF) என்ற நெடியவன் குழுவின் தலைவர் என South Asia Intelligence Review இதழில் குறிப்பு உள்ளது.

Nediyavan_Sivaparan_Perinbanayakamதமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவரே நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன். தற்போது இவரும் இவரைச் சார்ந்த குழுவினருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பான்யையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே S J இமானுவலின் பின்னிருந்து உலகத் தமிழர் பேரவையை இயக்குகின்றனர். இவர்கள் இலங்கையில் மீண்டும் குண்டுகளை வெடிக்க வைத்து ‘பனை மரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! தலைவர் வந்துவிட்டார். பராக்! பராக்!!’ என்று பறைசாற்ற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகத் தமிழ் பேரவையின் கீழ் இணைந்துள்ள அமைப்புகள்: Australian Tamil Congress, British Tamils Forum, Canadian Tamil Congress, Danish Federation of Tamil Associations, House of Eelam Tamils, Norwegian Council of Eelam Tamils, New Zealand Tamil Society, Wellington Tamil Society, Swedish Tamil Forum, Malaysia – Tamils Relief Fund, United States Tamil Political Action Council, European Tamil Union, Tamil Cultural Centre.

S J இம்மானுவேல் 18 மே 2009 ற்க்கு பின்னால் உத்தியோகபுர்வ விடுதலைப் புலிகளின் பிரிவு ஒன்றுக்கு தலைவர் என்பது ஆதாரத்தடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. S J இம்மானுவேல் தலைமை தாங்கும் GTF, ‘Protest Sri Lankan Goods’, ‘Protest Sri Lankan Airways’ என்ற மண் கவ்விய பிரச்சாரங்கள் நடாத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

Vanni_Missionஅதுமட்டமல்லாமல் புலம்பெயர் சமூகத்தின் பெரிய மோசடிகளில் ஒன்றான வணங்காமண் செயற்குழுவிற்க்கு பின் பலமாக British Tamil Forum – BTF இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, BTF, GTF என்பன ஒரே அமைப்புகள். மேலும் GTFஇன் தலைவராக நியமிக்கப்பட இருந்த எதிர்வீரசிங்கம் வணங்கா மண் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கா மண் கொள்ளைக்கு பின்னணியில் S J இம்மானுவேல் அடிகளார் இருப்பது நிரூபணம்.

S J இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் கூட்டாகவே  Trasnational Government  அமைக்க, இதன் முதற் கருவின் கதாநாயகன் கேபி. கே பி கைது செய்யப்பட்டதன் பின்னால் S J இம்மானுவேல் உருத்திரகுமார் கூட்டே இன்றய விடுதலைப் புலிகளின் சுழியோடிகள். இன்னொரு வகையில் கூறப்போனால் S J இம்மானுவேல், உருத்திரகுமார், நெடியவன் கைகளிலேயே புலிகளின் பெருவாரியான பணம் தங்கிப்போயுள்ளது.

எனவே இன்றைய யாழ்-மன்னார் கத்தோலிக்க பீடமும் தம்மை S J இம்மானுவேலுடன் இணைத்துக்கொள்வது ஊகிக்கக் கூடியதே.

Emmanuel_S_J_Rev_Frவன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக மறைத்தது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்த முக்கிய நபர்களில் S J இம்மானுவேல் முக்கியமானவர். உலகில் உள்ள சகல அரசசார்பற்ற பெரும் ஸ்தாபனங்களும், முக்கிய நாடுகளும், விடுதலைப் புலிகளை கண்டித்தபோது “மக்களோடு புலிகள், மக்களே புலிகள்” என புலம்பெயர்ந்து நாடகளிலிருந்து உசுப்பேத்திய பல ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதில் S J இம்மானுவேலுக்கு பாரிய பங்கு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில் ராஜபக்ச சகோதரர்கள் கையில் உள்ள இரத்தக்கறையைவிட இவரின் கையில்தான் அதிக இரத்தகறை இருக்கிறது.

போரின் உச்சக் கட்டத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் வவனியா கிளிநொச்சி பகுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த மக்களை நேரடியாக சந்தித்தவுடன், நான் அவர்கள் தப்பி ஓடும்போது (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் பிரதேசத்திற்குள்) புலிகள் செய்த அட்டூழியங்களை நேரடியாக விபரிக்க கேட்டவன். விடுதலைப் புலிகள் தப்பி ஓடும்போது மக்களை நோக்கி சுட்டதையும் அடித்ததையும் வடுக்களுடன் பார்த்த எனக்கு S J இம்மானுவேல் போன்றோர் புலிகளின் வக்கிரத்தை நியாயப்படுத்துவது புலிகளின் பயங்கரவாதத்தைவிட அகோரமானது.

மனிதப் படுகொலைகள் உக்கிரமாக நடந்து கொண்ட கடைசி நாட்களிலாவது பிரகாரனின் விசுவாசிகளாக இருந்த S J இம்மானுவேல் போன்றோர் சற்று நேர்மையான முறையில் பிரச்சினைகளை அணுகி இருக்கலாம்.

Emmanuel_S_J_Rev_Frஅண்மையில் லண்டனில் யாழ்புனித பற்றியரசர் கல்லுரி அதிபருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருந்தோன்பிலும் மற்றும் அண்மையில் காலம் சென்ற மூத்த குருவானவர் வணபிதா மதுரநாயகம் அவர்களின் மறைவை ஒட்டி இடம்பெற்ற இரு வைபவங்களிலும் S J இம்மானுவேல் முக்கிய பிரதிநிதியாக வந்திருந்தார். இவ்வாறான மதச்சடங்குகளில் நான் S J இம்மானுவேலை கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த மண்ணில் காணவில்லை. நான் இவரை கண்டது எல்லாம் அரசியல் கூட்டங்களில் தான்.

“பாவிகளையும் யேசு மன்னித்து இரட்சிப்பார்” என்ற வேதவாக்கை நம்பித்தான் S J இம்மானுவேல் அடிகளார் கத்தோலிக் மதத்துடன் இணைந்து கொண்டால் நல்ல விடயம் தான். அதற்கு மாறாக எஞ்சியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து செல்லத்தான் வந்துள்ளாரோ என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மருதங்கேணி கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழக்கப்படவுள்ளன.

வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த சுமார் ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ருபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளப் பிரதிப் பணிப்பாளர் க.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட செயலணியின் அனுமதி பெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் இணைந்து மீள்குடியேறிய இக்கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இவ்வுதவிகளைப் பெறுவதற்கான பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு விரைவில் இவ்வுதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.