எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம்: வைகோ

vaiko00001.jpgதேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக பேசிய வைகோ,

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணம் இந்திய அரசு தான். உலகமே போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி வரும் வேளையில், சோனியாவும், மன்மோகன் சிங்கும் மௌனம் காக்கின்றனர். மேலும், முதல்வர் கருணாநிதியோ அண்ணா சமாதியில் படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார்.

அடுத்த மாதம் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது போல் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி மானியம்: ஜெ. உறுதி

j-j-j.jpgஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வழி செய்யப்படும். தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு ரூ. 10 ஆயிரம் கோடி மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மட்டு நகரில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டமை கவலை அளிக்கிறது -மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம்

thinu.jpgமட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் பாடசாலை சென்றிருந்த மாணவியொருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சததையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் 6 வயது மாணவியொருவர் சில வாரங்களுக்கு முன்பு கடத்தப்டட்டு படுகொலை செய்யப்பட சம்பவத்தையும் சுட்டிக் காட்டி சர்வமத சமாதான ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பை தங்கள் வசம் ஒப்படைக்க ஜே.வி.பி. கோரிக்கை

sri-lankan-jvp.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது உறுப்பினர்களையும் முற்றாக அழிக்கும் வரை யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு கூறமுடியாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புலிகளிடமிருந்து அம்மக்களை எமது இராணுவத்தினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களின் தேவைகளை தொடர்ந்து அவர்களால் செய்வது சிரமமென்ற முறையில் அரசாங்கம் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இதில் சிக்கலையும் அது எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் கண்ணுக்கெட்டிய அல்லது தெரிகின்ற பிரச்சினைகளை தேவைகளை நிறைவு செய்தால் போதாது. அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

எனவே, இம்முகாம்களை அவ்வியக்கத்திடம் கையளிக்குமாறு நாம் கேட்கின்றோம். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகின்றது. உண்மையில் புலிகளின் தலைவரையும் அவர்களது உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமே யுத்த வெற்றியை ஈட்ட முடியுமே தவிர நிலப்பரப்பை விடுவிப்பதனால் வெற்றி வந்துவிடாது. இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழியாதுவிட்டால் அவர்கள் கெரில்லா வழிமுறைக்கு சென்றுவிடுவர்.

அரசாங்கம் மக்களுக்கு, சர்வதேச அழுத்தத்துக்கு கட்டுப்பட வில்லையென காட்ட சுவிடன் தூதுவரின் விஜயத்தை தடுத்ததாக காண்பித்தது. சுவிடனிலுள்ள இலங்கை தூதர், அவர் இதற்காக விஸா விண்ணப்பிக்கவில்லையென தெரிவிக்கின்ற அதேநேரத்தில் ஒரே நேரத்தில் பல தூதர்களை கவனிப்பது சிரமம், எனவே, வேறு ஒரு தடவை சந்தர்ப்பமளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை பத்திரிகைகள் தெரிவித்தன. தாம் தேசப்பற்றாளர்களென காட்ட முற்படுகின்றனர்.  யுத்தத்தின் போது கனரக ஆயுதம் பாவிப்பதா இல்லையா என்பதை படை நடவடிக்கையை மேற்கொள்பவரான தளபதியே தீர்மானிப்பார். இந்நிலையில் கனரக ஆயுதம் பாவிக்கப்பட மாட்டாதென அரசு கூறுகின்றது. இவ்வாறு செல்வதற்கு சர்வதேச அழுத்தமே காரணம்.

ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை; ஆனால் பயமாக இருக்கிறது: கமலஹாசன்

kamal-hassan.jpgஉலக நாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது  செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு,  ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார்.

எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு,  ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார்.

மனிதாபிமானம் இல்லாத வெற்றி வெற்றியல்ல

wanni-visit.jpg
“மனிதாபிமானம் இல்லாத வெற்றியானது வெற்றியாக இருக்க முடியாது’ என்று இலங்கைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வருகை தந்து திரும்பி சென்ற பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு இப்போது சர்வதேச நிவாரண உதவி ஏன் அவசரமாக தேவைப்படுகின்றது என்பதை தாங்கள் நேரடியாகப் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இரு அமைச்சர்களும் லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு உடனடியாக தமது விஜயம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதனை அப்பத்திரிகை நேற்று வியாழக்கிழமை பிரசுரித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

லண்டனிலும் பாரிஸிலும் வேறு பல இடங்களிலும் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பாரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இலங்கைத் தீவின் உள்நாட்டு யுத்தம் 28 வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக வடக்கிலுள்ள சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் நீண்ட காலமாக வாதாடி வருகின்றது.

1980 களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரமான தமிழ் இராச்சியத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 1986 இல் வடக்கிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டை அந்த அமைப்பு தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. இறைமையுள்ள அர சாங்கம் கொலைகார பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கையென திட்டவட்டமாக அறிவித்து இராணுவ பலத்தை பிரயோகித்தது. அரசாங்கத்தினால் சிறுபான்மையினம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

மீண்டும் மீண்டும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வுகள் ஸ்தம்பிதம் அடைந்தன. போராட்ட இறுதிக் கட்டத்தில் இலங்கை இருப்பதாக அரசாங்கம் இப்போது நம்புகின்றது. அதன் இராணுவ முன்னேற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாததாகும். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் சுருங்கி வரும் நிலப்பரப்பில், அதாவது ஒரு சில சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் அகப்பட்டுள்ளது. அதன் அளவு ஒருபுறம் இருக்க சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் புலிகளிடம் உள்ளனர். ஏனையோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சோதனை நிலையங்கள் மற்றும் முகாம்களுக்குள் அவர்கள் உள்ளனர்.

பொதுமக்களின் துன்பங்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் பின்னடைவைக் கண்டதாகவேயுள்ளது.

இலங்கைக்கு நேற்று நாம் (நேற்று முன்தினம்) மேற்கொண்ட விஜயத்திற்கான காரணம் மிக எளிதானதாகும். மோதலினால் இடம்பெயர்ந்த மற்றும் அங்கு சிக்கியிருக்கும் மக்கள் தொடர்பான காலம் கையை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. நாம் அங்கு சென்ற நோக்கமும் மிகச் சாதாரணமானதாகும். ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஜி8 என்பன அழைப்பு விடுத்த மனிதாபிமான நிவாரணம் தொடர்பாகவே நாம் அங்கு சென்றோம்.

வவுனியாவில் நிலைமையை நாம் நேரில் பார்த்தோம். இடம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்தோம். அத்துடன், பிரான்ஸின் தளவைத்தியசாலையொன்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டதையும் கண்டோம். ஒவ்வொரு தனி மனிதரினதும் துன்பகரமான கதைகளை நாம் கேட்டோம். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பொதுமக்களைச் செல்ல வேண்டாம் என அவர்கள் புலிகளால் வற்புறுத்தப்பட்டிருந்தனர். குண்டுகளாலும் ஆட்லறிகளாலும் அங்கு இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் உள்ளனர். குடும்பங்கள் பிரிந்து விட்டன. தமது அன்புக்குரியவர்கள் குறித்து ஏதாவது செய்திகள் கிடைக்குமா என்று அநேகமானோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலம் தொடர்பான அச்சம், தங்களின் தற்போதைய நிலைமை தொடர்பான பீதி, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

உடனடித் தேவைகள் குறித்து ஐ.நா.வும் ஐரோப்பிய ஒன்றியமும் உரத்தும் தெளிவாகவும் கூறியுள்ளன. முதலாவதாக இரு தரப்பும் மோதல் சூன்ய வலயம் (அது எதிரானதாக உருவாகியுள்ளது) என்று கூறப்படும் பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இலங்கை அரசாங்கத்தை சில காலத்திற்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுத்தோம். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்காகவும் இதற்கான கோரிக்கையை விடுத்தோம். சாத்தியமானளவு விரைவாக மோதல் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வெளியேறுவது தொடர்பாகவே சில காலத்துக்கு யுத்த நிறுத்தத்தை அறிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதென்ற இலங்கை அரசின் அறிவிப்பு பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக வரவேற்கத்தக்க படிமுறை ஒன்றாகும். இத்தகைய அறிவிப்புகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது அமுல்படுத்தப்பட வேண்டியதும் பேணப்பட வேண்டியதும் அவசியமானதாகும். மோதல் பகுதிக்கு மனிதாபிமான குழுவை அனுப்புவது தொடர்பான ஐ.நா. அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியிருந்தது. அந்த உடன்பாடு அமுல்ப்படுத்தப்படவில்லை. அது நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமானதாகும்.

இரண்டாவதாகவுள்ள கவலையானது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பானதும் அவற்றின் நிலைபற்றியதானதாகும். ஐ.நா. நிவாரண நிறுவனங்கள், ஊடகங்கள் என்பன இங்கு செல்வதற்கு முழுமையான அனுமதி வழங்க மறுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் தவறான நடவடிக்கையாகும். தப்பி வரும் பொதுமக்களை சோதனையிட அரசு விரும்புகின்றது மக்களுடன் விடுதலைப் புலிப் போராளிகள் நுழைந்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கம் இதனை செய்ய விரும்புகின்றது. அவ்வாறு வரும் புலிப் போராளிகள் தொடர்ந்தும் பயங்கரவாதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு கருதுகின்றது. ஆனால், இந்த நடவடிக்கையில் வெளிப்ப?டத்தன்மை பேணப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஐ.நா. மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களை சோதனை நடவடிக்கைகளின் சகல கட்டங்களிலும் அரசாங்கம் அனுமதிப்பது அவசியமாகும்.

மோதல் பகுதியிலிருந்து வெளிவரும் பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பாக அக்கறை செலுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 2 இலட்சம் இடம்பெயர்ந்தவர்களுடன் நாடு திண்டாடுகின்றது. இவர்களில் பலர் காயமடைந்தவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் முதியவர்களாகவும் குழந்தைகளாகவும் காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகள் நேரடியாக பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், ஒழுங்கான முறையில் நிர்ணயிக்கப்படாமலும் போதிய வளங்கள் இல்லாமையும் மனிதாபிமான உதவியை வழங்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பில்லாமல் இருப்பதானது அந்த மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும்.

ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே நாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டோம். இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் முகாம்களுக்குள் சிறந்த மருத்துவ சேவைகள் இருப்பது அவசியம். உணவு, தங்கும் இடம் என்பன சிறப்பான முறையில் அமைய வேண்டும். பணம், மருந்து, தங்கும் இடம் போன்ற வசதிகளுக்காக பிரிட்டனும் பிரான்ஸும் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவை ஒழுங்கான முறையில் சென்றடைவதற்கான தேவைகள் உள்ளது.

இறுதியாக இங்கு நாம் குறுகிய கால நடவடிக்கைகளிலேயே எமது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். ஆனால், நீண்ட கால தேவைகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது. இலங்கை அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாகும். ஆதலால், ஐ.நா. உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் உயர்மட்ட தரத்தை அது கொண்டுள்ளது. அதேசமயம், அதன் கடப்பாடுகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக அமைய வேண்டும். அதேவேளை, வன்முறையானது தமிழ் மக்களுக்கு பயனளிக்கப் போவதில்லை என்றும் வன்முறைகளைக் கைவிடுவதே முன்னேற்றத்திற்குக் கொண்டுவரும் என்பதும் நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியும் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும் என்பதை புலிகளுக்குத் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம்.

எதிர்காலத்தில் ஒன்றாக வாழ்வதற்குரிய வழி முறைகளை இலங்கைச் சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும். அதனை தனியாக இராணுவ வெற்றியினால் மட்டும் வென்றெடுக்க முடியாது. தமிழர்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றியதாக காணப்படுவது அரசியல் ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாக காணப்படுவதும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் உணர்வாகும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் தொடர்பாக இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்ணியமான முறையிலும் தார்மிகக் கொள்கை அடிப்படையிலுமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டும்.

இரு தரப்பு தொடர்பாகவும் நாம் எந்தவிதமான வேறுபட்ட உணர்வுகளையும் கொண்டிருக்கவில்லை. 3 தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது வெற்றிகள் கிடைத்திருப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது. ஆனால், அதிக எண்ணிக்கையான பொதுமக்களின் உயிர்களுக்கு விலை செலுத்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகும். அது தற்போது அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றது. இந்த நிலைவரத்தின் பாரதூரத் தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் துன்பத்தை நிறுத்துவதற்கான கடமை சர்வதேச சமூகத்திற்குள்ளது.

எங்களுக்கு இது என்ன தொடர்பு என்று மக்கள் எங்களைக் கேட்கலாம். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகிய நாம் இறைமையுள்ள அரசாங்கங்களும் சர்வதேச சமூகமும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் விலகிச் செல்ல முடியாது. இலங்கையின் பொதுமக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் தோல்வி கண்டிருப்பதையிட்டு எங்களுடன் இணைந்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கத்திடம் எமது வேண்டுகோளை நேரடியாக விடுத்தோம். இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்ட தருணத்திலுள்ளது. இந்தத் தருணத்தில் அது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவது அவசியம். அத்துடன், சமாதானத்தை வென்றெடுக்கும் வழிமுறைகளை வழியைக் கண்டறிய சுய ஆர்வம் காட்டுவதும் அவசியமானதாகும்.

இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சர்வதேசம் தலையிட்டே ஆகவேண்டும்! ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு இது.

unp.jpgஇலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிட்டே ஆகவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசால் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவி கேட்க முடியுமென்றால் ஏன் அந்நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ முடியாது என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஒருசில நாள்களாக சர்வதேசத்தின் மீது இலங்கை அரசு கடுமையாகப் பாய்ந்துகொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கெதிராக கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. தேசியப் பிரச்சினை சர்வதேச மயமாகிவிட்டது
அரசின் அனுசரணையுடன்தான் இது செயற்படுகின்றது. இது அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் ஒன்றாக இருக்கலாம். இலங்கை விடயம் தொடர்பாக எந்த நாடும் கருத்துத் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவித்தால் அந்நாடு துரோகி நாடாகிவிடுகிறது.

எமது தேசியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியதால்தான் சர்வதேச நாடுகள் இதில் தலையிடுகின்றன. இப்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷதான். எமது பிரச்சினையை எமது நாட்டு மக்களான தமிழ் மக்களுடன் பேசித் தீர்ப்போம் என்று எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதை மஹிந்த ராஜபக்ஷ கேட்காது அதை சர்வதேசத்திற்குக் கொண்டுசென்றார்.

வெளிநாடுகளிடம் நிதி உதவி கேட்க முடியுமென்றால் அவர்களது கருத்தை ஏன் செவிமடுக்க முடியாது? 

இப்போது சர்வதேச நாடுகள் எமது பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்தால் அந்நாடுகள் மீது இலங்கை அரசு பாய்கிறது. அந்நாடுகளிடம் இலங்கை அரசால் நிதியுதவி கேட்க முடியும் என்றால் ஏன் அந்நாடுகள் தெரிவிக்கும் கருத்துகளை இலங்கை அரசால் செவிமடுக்கமுடியாது?

சர்வதேச நாடுகளின் கருத்துகளுக்கு இராஜதந்திர அணுகுமுறைகள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும். வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி அந்நாடுகளை விமர்சிப்பது சரியில்லை. யுத்தம் தொடங்கப்பட்டது முதல் இப்போதுவரை இலங்கையில் ஜனநாயகம் அழிந்துகொண்டு வருகிறது. இப்போது யுத்தம் முடிவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் இங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் உதவவேண்டும். அதற்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம்  என்றார்.

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு வெளியார் செல்ல அனுமதி இல்லை – தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்

menikfarm.gifவவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும முகாம்களுக்கு வெளியாரோ, அமைப்புகளோ பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

20 ஏப்ரல் 2009 இல் 58 ஆவது படையணிப் பிரிவானது மனிதக் கேடயங்களாக அப்பாவிப் பொதுமக்களை பிடித்து வைத்திருந்த புலிப் பயங்கரவாதிகளை அழித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. படையினரின் தீவிரமான முயற்சிகளை யடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இந்தப் பொதுமக்களுக்கு பலவழிகளில் தனிப்பட்ட பலரும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசும் மேலதிகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் திருப்திகரமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆதலால், தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் மெனிக்பாம் கிராமத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொண்டுவரும் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இக்கோரிக்கை விடுக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சிடம் தனிப்பட்டவர்கள் பலரும் அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர். வவுனியா மெனிக்பாம் கிராமத்துக்கு செல்ல அனுமதி கோரியுள்ளனர். ஆனால், வெளியாட்களினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தங்கள் பணியின் முன்னேற்றத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் முகாமில் பணிபுரியும் அதிகாரிகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் எந்தவொரு சூழ்நிலையிலும், மெனிக்பாமுக்கு வெளியாட்கள், அமைப்புகள் பிரவேசிக்க அனுமதி வழங்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான மத்திய ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட மாணவியை விடுவிக்குமாறு கி.மா.ச. உறுப்பினர் வேண்டுகோள்

 thinu.jpgகடத்தப்பட்டதாகக் கூறப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிகாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்மாணவி கடத்தப்பட்டுள்ள சம்பவத்தை தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவ இணயத்தளம் தற்காலிக துண்டிப்பு : பிரிகேடியர் உதய நாணயக்கார

army-crest.jpgஇராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk வலையமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முரண்பாட்டாளர்களால் துண்டிக்கப்பட்ட இந்த இணையத்தளம் விரைவில் மீள்பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இது விடுதலைப்புலிகளின் நாசகார செயல்களின் ஒன்றென அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.