வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும முகாம்களுக்கு வெளியாரோ, அமைப்புகளோ பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
20 ஏப்ரல் 2009 இல் 58 ஆவது படையணிப் பிரிவானது மனிதக் கேடயங்களாக அப்பாவிப் பொதுமக்களை பிடித்து வைத்திருந்த புலிப் பயங்கரவாதிகளை அழித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. படையினரின் தீவிரமான முயற்சிகளை யடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இந்தப் பொதுமக்களுக்கு பலவழிகளில் தனிப்பட்ட பலரும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசும் மேலதிகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் திருப்திகரமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆதலால், தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் மெனிக்பாம் கிராமத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொண்டுவரும் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இக்கோரிக்கை விடுக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சிடம் தனிப்பட்டவர்கள் பலரும் அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர். வவுனியா மெனிக்பாம் கிராமத்துக்கு செல்ல அனுமதி கோரியுள்ளனர். ஆனால், வெளியாட்களினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தங்கள் பணியின் முன்னேற்றத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் முகாமில் பணிபுரியும் அதிகாரிகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் எந்தவொரு சூழ்நிலையிலும், மெனிக்பாமுக்கு வெளியாட்கள், அமைப்புகள் பிரவேசிக்க அனுமதி வழங்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான மத்திய ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.