எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இன்றும் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

07-sea-eruption.jpgதமிழக கடல் பகுதிகளில் தொடர்ந்து இன்றும் கொந்தளிப்பு நிலவியது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெரும் காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

ராட்சத அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பலத்த சூறைக் காற்றும் வீசியது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த மக்கள் முன்பே வெளியேறி விட்டதால் உயிர் தப்பினர்.கடல் நீர், கடற்கரையிலிருந்து குடியிருப்புகள் உள்ள பகுதி வரை வந்து விட்டது. கடல் நீர் உள்ளே போவதும், சீறிப் பாய்வதுமாக உள்ளது. இன்று காலையும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமைச்சர் போகொல்லாகம நிராகரிப்பு

rohitabogallaagama.jpgஇலங் கையின் வடக்கே மோதல் சூன்யப் பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உறுதியாக நிராகரித்துள்ளார். “மோதல் சூன்யப் பகுதி மீது நாங்கள் ஒரு போதும் பதில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. அதற்குரிய சந்தர்ப்பத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் இல்லை’ என்று லண்டனில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் போகொல்லாகம “த ரைம்ஸ்’ பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்திருக்கின்றார். பொதுமக்கள் மீது நாங்கள் தாக்குதலை மேற்கொள்வற்தகு எம்மை ஆத்திரப்படுத்தும் விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வெளியேறிய போதே புலிகள் அவர்களை சுட்டதாகவும் பொதுமக்களின் மரணங்களுக்கு புலிகளே காரணம் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையால் எந்தவொரு பொதுமகனும் இறக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நா. மதிப்பீடு செய்திருந்த அறிக்கையின் பிரகாரம் ஏப்ரல் இறுதியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன் உட்பட வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இந்தப் புள்ளி விபரம் ஐ.நா. வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து ஐ.நா. வட்டாரங்கள் “த ரைம்ஸ்’க்குக் கூறியிருந்தனர்.

இவை இரண்டையும் அமைச்சர் போகொல்லாகம நிராகரித்திருக்கிறார். புள்ளி விபரங்களை வெளியிட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மன்னிப்புக் கேட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த வாரம் “த ரைம்ஸ்’க்குத் தெரிவிக்கையில்; பொதுமக்களின் இழப்புகள் ஏற்றுக் கொள்ள முடியாதளவிற்கு அதிகமானவையாகவும் இது தொடர்பாக உரிய விசாரணையை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சுதந்திரமாக செல்வதை இலங்கை தடை செய்துள்ளது.

அங்குள்ளோர் விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி சோதனைகள் முடிவடையும் வரைக்கும் அங்கு முழுமையாக மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை கூறியுள்ளது.  இந்தச் சோதனை நடவடிக்கை நீண்டவையாக இருக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். வயது போனவர்கள் கூட உள ரீதியில் புலிகளுடன் இருந்திருக்கக் கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மோதல் சூன்யப் பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. மோதலின் இறுதிக் கட்டத்தின் போது அரசாங்கத்தின் ஷெல் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் இடம் மாற்றப்பட்ட ஆஸ்பத்திரி உட்பட மோதல் சூன்யப்பகுதியில் ஷெல் வீச்சு இடம்பெற்றதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறும் போது அவர்களுடன் வந்த இந்த மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக ஐ.நா. தெரிவித்திருக்கின்றது. இந்த மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பி.பி.சி.க்குக் கூறியுள்ளார்.

விசாரணைகளிலிருந்து என்ன வெளிவரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில சமயங்களில் அரச படைகள் ஷெல் வீச்சு நடத்தியதாகவும் ஆஸ்பத்திரிகளை இலக்கு வைத்ததாகவும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படும் இந்த கருத்தை உள்ளடக்கிய சதியின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்கக் கூடும் என்றும் சமரசிங்க கூறியிருந்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளிப்பாடானது தமிழ்ச் சமூகத்தின் மீது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் உறுதிப்பாடு பற்றி நியாயபூர்வமான அச்சத்தை தோற்றுவிப்பதாக சேர்.ஜோன் ஹோமஸ் கூறியுள்ளார்.

முசலி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம்

07resettle.jpgவடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு அபிவிருத்தி செயலணித் தலைவர் பஸில் ராஜபக்ஷ்வின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு,சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2216 பேர் உள்ளடங்கிய 515 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.இந்நிகழ்விற்கு மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.அதேவேளை அரச திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவில். நீடிக்கும் அட்டகாசம் – இந்தியர் கார் எரிப்பு

sea.jpgஇந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நிற்கவில்லை ஆஸ்திரேலியாவில். மெல்போர்ன் நகரில், இந்திய மாணவரின் கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. 22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார். இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம். காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார். லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம். விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கை விஜயம்

06bankimoon.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம், அபிவிருத்தி,  புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இடம்பெயர்ந்தவர்களின் விவரம் திரட்டும் பணிகள் அடுத்த வாரம் பூர்த்தி

civiling_fleeng3.jpg26 சமூக நலன்புரி மத்திய நிலையங்களில் தங்கியுள்ள  மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தி அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விபரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. பிரிந்து. குடும்ப அங்கத்தவர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதன் 50 வீதப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன

இனப்பகைமைகளை வளர்க்கும் செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள் ஊடகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

he_speech_ranaviru_.jpgஇனங் களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு

meera-jasmine.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட வேண்டும்

பெண்களுக்கான அரசியல் களத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் பெண்களை முன்வருமாறு மகளிர் அபிவிருத்தி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார, சமூக மேம்பாடு என்று பல துறைகளிலும் தமது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டி தமது அரசியல் நிபுணத்துவத்தினூடாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் சேவையை வலுவூட்டுவது அவசியம்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மிக இலகுவாக 59 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். எமது பிரதேசத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட பெண்கள் இத் தேர்தல் களத்தில் பங்குபற்றி எமது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அறிவூட்டல்கள், ஆலோசனைகளை வழங்க மகளிர் அபிவிருத்தி நிலையம் தயாராகவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்ட மீள் குடியேற்றம் – பசில் எம்.பி தலைமையில் 9ஆம் திகதி வைபவம்

basil.jpgவடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டாம் கட்டமாக 561 குடும்ப ங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் மீள்குடியேற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மீள் குடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வார்.

மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டார வெளி, கூலான்குளம், சின்னபுலச்சி பொட் கேணி, அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு பகுதிகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

இப்பகுதியில் கிராமசேவகர் அலுவலகம், பாடசாலைகள், கூட்டுறவு கடைகள், தபாலகம், டிஸ்பென்சரி, கிராமிய ஆஸ்பத்திரி, போக்குவரத்து அனைத்தும் அன்றைய தினமே வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருதமடு பகுதியில் 63 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதியில் 16 குடும்பங்களும், உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே தினத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக இம் மக்கள் தமது சொந்த இடங்களை சென்று பார்வையிட்டு மீளக் குடியேற வசதிகள் உள்ளனவா என்று உறுதி செய்துகொண்டனர்.