தமிழக கடல் பகுதிகளில் தொடர்ந்து இன்றும் கொந்தளிப்பு நிலவியது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெரும் காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
ராட்சத அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பலத்த சூறைக் காற்றும் வீசியது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த மக்கள் முன்பே வெளியேறி விட்டதால் உயிர் தப்பினர்.கடல் நீர், கடற்கரையிலிருந்து குடியிருப்புகள் உள்ள பகுதி வரை வந்து விட்டது. கடல் நீர் உள்ளே போவதும், சீறிப் பாய்வதுமாக உள்ளது. இன்று காலையும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.