எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்கள்; அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

jaffna-000.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல்களை முன்னிட்டு அடையாள அட்டை அற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது.

இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது.

சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு சுகாதார வசதி; 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன

camb000dr.gifவடக்கி லிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில் 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்காக தனித்தனியே மருத்துவர்கள், தாதிமார் அடங்களாக சுகாதார உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

5 சுகாதார வயலங்களிலும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 60 மருத்துவர்கள், 15 பதிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்கள், 57 தாதிமார், 15 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 30 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்து வந்துள்ள 272,000 மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் அளிக்கும் வகையில் 15 ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார அமைச்சு அதில் வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் 3 ஆஸ்பத்திரிகளும் அடங்குவதாக கூறியது.

செட்டிக்குளத்தில் பிரான்ஸ் தற்காலிக ஆஸ்பத்திரியும் வலயம் ஒன்றில் இந்திய ஆஸ்பத்திரியும் மெனிக்பாமில் எம். எஸ். எப். ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. இந்த 15 ஆஸ்பத்திரிகளிலும் சுமார் 6741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக சகல நிவாரணக் கிராமங்களிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு இவற்றுக்கென தினமும் கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்தாளர் குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது. இது தவிர மோதல் காரணமாக காயமடைந்த மக்களுக்கு உதவுவதற்காக பதவிய, மன்னார், வவுனியா, செட்டிக்குளம், கெபதிகொல்லாவ, மதவாச்சி மற்றும் குருணாகல் ஆஸ்பத்திரிகளுக்கு மேலதிகமாக 232 மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரேசில் கடற்படையால் 16 உடல்கள் மீட்பு

airfrancetail.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர்

அகாசி இன்று வருகிறார்

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுவர் ஒருவரை ஜப்பான் இந்த வாரம் இலங்கைக்கு அனுப்புகிறது.  3 நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று திங்கட்கிழமை கொழும்பு வருகிறார். யுத்தத்தால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவே அகாசி வருகை தருவதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை அகாசி சந்திக்கவிருப்பதாக ஜப்பானிய தூதரகம் கூறியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பான முன்னேற்றம், தேசிய நல்லிணக்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து அகாசி கலந்துரையாடவுள்ளதாக தூதரக பேச்சாளர் தெரிவித்தார். 2003 ஜூனில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளுக்கு 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கு அகாசி உதவியிருந்தார். பின்னர் 2008 இல் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவடைந்ததை அடுத்து அந்த நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன.

பிரஞ்ச் ஓபன் டெனிஸ் சம்பியன் பட்டம் முதற்தடவையாக பெடரர் வசம்

images-rojapedaral.jpgபிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கிராண்ட ஸ்லாம் போட்டியான பிரான்ஸ் பகிரங்க டெனிஸ் சம்பியன் போட்டியில் டெனிஸ் உலகில் மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ரொபின் சொடர்லிங்கை நேர்செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை முதற்தடவையாக கைப்பற்றியுள்ளார்.

பெடரர் கைப்பற்றியுள்ள கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 14 ஆக உயர்ந்துள்ளதுடன் இதன் மூலம் இவர் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற வரிசையில் பெடரர் ஆறாவது இடத்தை வகிக்கின்றார். ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 27 வயதுடைய பெடரர் சுவீடனின் சொடர்லிங்கை 6-1   7-6   6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.

கெப்டன் அலி கப்பலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgஇலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்தபோது கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் கப்பல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இக்கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே கைது செய்யப்பட்ட வர்த்தகர் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. இக்கப்பலில் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எனினும் இக்கப்பலுடன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இக்கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

அசோக்க டீ சில்வா 32ஆவது பிரதம நீதியரசராக நியமனம்

asoka-de-silva000jpg.jpgஇலங் கையின் 32ஆவது பிரதம நீதியரசராக அசோக்க டீ சில்வா இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பான வைபவம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

சட்டத்துறையில் 37 வருடகாலம் சேவையாற்றியுள்ள புதிய பிரதம நீதியரசர் இத்துறையில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில்; 1972ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக சேர்ந்துகொண்ட இவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்தார். பின்னர் 1992ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றார். இதனை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் என்ற நியமனமும் இவருக்கு கிடைத்தது. இவர் நீதியரசராகக் கடமையாற்றியபோது யுத்தக் குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்தோரிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை

Wanni_War_Welfare_Campஇடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம் ஒன்றை மேற்கோள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு அலுவலகங்களை திறப்பதற்கு பணியகம் திட்டமிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதலாவது அலுவலகத்தை மட்டக்களப்பில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதன் இரண்டாவது அலுவலகத்தை வன்னிப் பகுதியில் அமைக்க பணியகம் ஆலோசித்து வருகிறது.வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு இதன் மூலம் அதற்கான அறிவாற்றலை பெற்றுக் கொடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு இலங்கை வருமாறு ஜனாதிபதி அழைப்பு: அமைச்சர் தொண்டமான் தெரிவிப்பு

arumugam-thondaman.jpgமுதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொழும்புக்கு வருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக இலங்கை இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த தொண்டைமான் முதலில் கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு, அவர்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பின்னர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தொண்டமான். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

“இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்புக்கு வர வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். அதை உறுதி செய்யவே கருணாநிதியைச் சந்தித்துப் பேசினேன். இது சம்பந்தமாக கருணாநிதிக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும்” என்றார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இலங்கை துணைத் தூதர் அம்சா, அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோரும் இருந்தனர்.

கனிமொழியைச் சந்தித்தது ஏன்?

முன்னதாக கனிமொழி வீட்டில், செய்தியாளர்களிடம் பேசிய தொண்டமானிடம், கனிமொழியை சந்தித்தன் நோக்கம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

“போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு 20 லட்சம் மலையக தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிப் பேசவே வந்தோம்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க, 13 (1)-ஆவது அரசியல் திருத்த சட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாக அதிபர் ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி, தமிழக முதல்-அமைச்சருக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

இலங்கையில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில், அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அழைத்து மறுவாழ்வு அளித்த பிறகுதான் தேர்தல் நடத்த வேண்டும். அரசியல் சட்ட திருத்தத்தை உடனே நிறைவேற்ற, இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் கோர வந்தோம்” என்றார்.

“ஜனாதிபதி ராஜபக்ஷ சொன்னபடி செய்வாரா?” என்று கேட்டதற்கு, “நம்பிக்கைதான் எல்லாமே” என்று பதிலளித்தார் தொண்டமான்.

“இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா எந்த மாதிரியான உதவியை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது?” என்ற கேள்விக்கு,

“இந்தியா தான் அனைத்து உதவிகளையும் செய்து பாதுகாக்க வேண்டும்” என்றார் தொண்டமான்.

“தமிழகத்தில் வாழும் அகதிகள் இலங்கை திரும்ப, இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டீர்களா…?” என்ற கேள்விக்கு,

“இதுகுறித்து இலங்கை அரசும், இந்திய அரசும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர் கனிமொழியிடம்,

“இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்ய உள்ளது?” என்று கேட்டபோது,

“இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஏற்கனவே இந்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து முழு ஈடுபாட்டுடன் அறிந்து, அதையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது” என்றார்.

மேலும், இலங்கையின் உண்மை நிலையைக் கண்டறிய தமிழக அரசியல் தலைவர்கள் அடங்கிய குழு அங்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : கருணாநிதியுடன் சிதம்பரம் ஆலோசனை

08chidambaram.jpgஇலங் கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து சென்னையில் முதல்வர் கருணாநிதியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை ப.சிதம்பரம் சந்தித்துக் கலந்துரையாடிய போது இருவரும் இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

“மத்திய அமைச்சரவை அமைந்த பிறகு, உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பின் இப்போது தான் முதன் முதலாக முதலமைச்சரைச் சந்திக்கிறேன். நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அங்கு இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவிகளை செய்வது, எந்த வகையில் மறுவாழ்வு அளிப்பது, அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றியெல்லாம் முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன்.

அமைச்சரவை கூட்டத்திலும், குழுக் கூட்டத்திலும் இவ்விடயங்கள் விவாதத்திற்கு வரும்போது தெரிவிப்பேன். இலங்கைத் தமிழர்களை உடனடியாக பத்திரமான இடங்களிலே குடியமர்த்த வேண்டும். அவரவர்களுடைய இடங்களுக்கு அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். வீடிழந்த மக்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இலங்கை அரசு அதற்கான பணிகளிலே உடனடியாக ஈடுபட வேண்டும்.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் அதிக அளவுக்கு நிதிஉதவி வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. அந்தத் தொகை முறையாக செலவழிக்கப்பட வேண்டும். மேலும் இலங்கை அரசு தமிழர்களுக்குத் தரவேண்டிய அதிகாரப் பங்கீடுகள் குறித்தும் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

இந்தியாவுக்குப் போக வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ப.சிதம்பரம்,  “அமெரிக்கா, இந்தியா செல்லும் தனது நாட்டு சுற்றுலா பயணிகளை எச்சரித்ததாக முதலில் நினைத்தோம். நேற்று அவர்கள் அதை விளக்கியிருக்கிறார்கள். எச்சரிக்கை அல்ல, ஆலோசனை என்று சொல்லியிருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. உலகில் பல நாடுகளை விட இந்தியா பத்திரமான நாடு.

உளவுத்துறை மூலமாக தீவிரவாதிகள் பற்றி தகவல்கள் வருகின்றன. தீவிரவாதி மதனி பற்றி தகவல் வந்து டெல்லி பொலிஸார் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். தீவிரவாதிகள் பற்றி வருகின்ற தகவல்களை அந்தந்த மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். அப்படி பகிர்ந்து கொள்ளும்போது அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். அது அவர்களுடைய கடமை. அதிலே நாம் தலையிடக் கூடாது” என அமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளிடம் தெரிவித்தார்.