முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொழும்புக்கு வருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக இலங்கை இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த தொண்டைமான் முதலில் கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு, அவர்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தொண்டமான். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
“இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்புக்கு வர வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். அதை உறுதி செய்யவே கருணாநிதியைச் சந்தித்துப் பேசினேன். இது சம்பந்தமாக கருணாநிதிக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும்” என்றார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இலங்கை துணைத் தூதர் அம்சா, அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோரும் இருந்தனர்.
கனிமொழியைச் சந்தித்தது ஏன்?
முன்னதாக கனிமொழி வீட்டில், செய்தியாளர்களிடம் பேசிய தொண்டமானிடம், கனிமொழியை சந்தித்தன் நோக்கம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
“போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு 20 லட்சம் மலையக தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிப் பேசவே வந்தோம்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க, 13 (1)-ஆவது அரசியல் திருத்த சட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாக அதிபர் ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி, தமிழக முதல்-அமைச்சருக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
இலங்கையில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில், அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அழைத்து மறுவாழ்வு அளித்த பிறகுதான் தேர்தல் நடத்த வேண்டும். அரசியல் சட்ட திருத்தத்தை உடனே நிறைவேற்ற, இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் கோர வந்தோம்” என்றார்.
“ஜனாதிபதி ராஜபக்ஷ சொன்னபடி செய்வாரா?” என்று கேட்டதற்கு, “நம்பிக்கைதான் எல்லாமே” என்று பதிலளித்தார் தொண்டமான்.
“இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா எந்த மாதிரியான உதவியை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது?” என்ற கேள்விக்கு,
“இந்தியா தான் அனைத்து உதவிகளையும் செய்து பாதுகாக்க வேண்டும்” என்றார் தொண்டமான்.
“தமிழகத்தில் வாழும் அகதிகள் இலங்கை திரும்ப, இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டீர்களா…?” என்ற கேள்விக்கு,
“இதுகுறித்து இலங்கை அரசும், இந்திய அரசும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
பின்னர் கனிமொழியிடம்,
“இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்ய உள்ளது?” என்று கேட்டபோது,
“இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஏற்கனவே இந்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து முழு ஈடுபாட்டுடன் அறிந்து, அதையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது” என்றார்.
மேலும், இலங்கையின் உண்மை நிலையைக் கண்டறிய தமிழக அரசியல் தலைவர்கள் அடங்கிய குழு அங்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.