வடக்கி லிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில் 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்காக தனித்தனியே மருத்துவர்கள், தாதிமார் அடங்களாக சுகாதார உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
5 சுகாதார வயலங்களிலும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 60 மருத்துவர்கள், 15 பதிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்கள், 57 தாதிமார், 15 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 30 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இடம் பெயர்ந்து வந்துள்ள 272,000 மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் அளிக்கும் வகையில் 15 ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார அமைச்சு அதில் வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் 3 ஆஸ்பத்திரிகளும் அடங்குவதாக கூறியது.
செட்டிக்குளத்தில் பிரான்ஸ் தற்காலிக ஆஸ்பத்திரியும் வலயம் ஒன்றில் இந்திய ஆஸ்பத்திரியும் மெனிக்பாமில் எம். எஸ். எப். ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. இந்த 15 ஆஸ்பத்திரிகளிலும் சுமார் 6741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக சகல நிவாரணக் கிராமங்களிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு இவற்றுக்கென தினமும் கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்தாளர் குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது. இது தவிர மோதல் காரணமாக காயமடைந்த மக்களுக்கு உதவுவதற்காக பதவிய, மன்னார், வவுனியா, செட்டிக்குளம், கெபதிகொல்லாவ, மதவாச்சி மற்றும் குருணாகல் ஆஸ்பத்திரிகளுக்கு மேலதிகமாக 232 மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.