எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கை வந்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டார்

bob-rae.jpgஇலங்கை வந்த கனடா எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினரான பொப் ரே உடன் திருப்பி அனுப்பப்பட்டார் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ரே விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கனடா அரசாங்கம் புலிகள் இயக்கத்தை தடை செய்த போதும் இவர் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார் எனக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. 

தமது கட்சியில் கொள்கை ரீதியாக செயல்பட முடியாதவர்கள் விலகிச் செல்வது கட்சியை பாதிக்காது-சிவனேசதுரை சந்திரகாந்தன்

10sevaneeasthurai.jpgதமது கட்சியிலிருந்து கொள்கை ரீதியாக செயல்பட முடியாதவர்கள் விலகிச் செல்வது கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

“ஒருவர் விரும்பிய கட்சியில் அங்கம் வகிப்பதும்,அக் கட்சியிலிருந்து விலகி மற்றுமொரு கட்சியில் இணைந்து கொள்வதும் ஜனநாயக உரிமை” என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கூறினார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் விரைவில் சிவில் நிர்வாகம்

images-poli.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக அப்பிரதேசங்களில் புதிதாக 21 பொலிஸ் நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.

இவற்றில் ஏழு பொலிஸ் நிலையங்கள் ஏற்கனவே மன்னார் பொலிஸ் பிரிவில் நிறுவப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளில் மேலும்  14 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தலைமையில் நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவாய், முழங்காவில்,  சிலாவத்துறை,  பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள் அடுத்தகட்டமாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்

basil.jpgமீள் குடியேற்றம் செய்யப்படுவதில் அடுத்தகட்டமாக மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள்  விரைவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார்,  முசலி பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி,  உட்கட்டமைப்பு வசதிகளுக்கென 800 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அத்துடன் நானாட்டான்,  முசலியை இணைக்கும் அருவியாறு பாலத்தின் நிர்மாணப் பணிகளை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்..

முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஏழு கிராமசேவகர் பிரிவுகளிலும் 561 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முசலி,  அரிப்பு கிராமத்திலுள்ள புனித செங்கோல் அன்னை தேவாலய முன்றலில் நடைபெற்ற வைபவத்தில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மீள்குடியேற்ற,  அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தெற்கையும், வடக்கையும் இணைக்கும் முதலாவது நகரமாக முசலி திகழ்கிறது. புத்தளம் முதல் எழுவன்குளம் வழியாக வரும் பாதையில் முதலாவதாக சந்திக்கும் பிரதான நகரமாக முசலி நகரம் அமைவது. சந்தோசத்தை கொடுக்கிறது.

முசலி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சற்று தாமதங்கள் ஏற்பட்டன. இதற்காக ஜனாதிபதி உங்கள் அனைவரிடமும் தனது கவலையை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதற்கு ஈடுசெய்யும் வகையில் மன்னார் அரச அதிபரினால் முன்வைக்கப்பட்ட முசலி பிரதேச செயலக பிரிவு அபிவிருத்தி, உட்கட்ட மைப்புக்காக மதிப்பீடு செய்யப்பட்ட 800 மில்லியன் ரூபாவையும் குறைவின்றி உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கிவிட்டார்.

இடம்பெயர்ந்தாலும், அகதிமுகாம்களில் தங்கியிருப்பதும் இன்று நேற்று நடைபெற்றதல்ல. 20, 30 வருடங்களாக மாறி மாறி மக்கள் அகதி முகாம்களில் இருக்கின்றனர். மலையக மக்களும் கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் குடிபுகுந்தனர். அவர்களும் அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். இதனை சில மலையக தலைவர் இன்று மறந்திருந்தாலும் நாம் மறந்துவிடவில்லை என பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாh

கனேடிய எம்.பி பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

bob-rae.jpgகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கைக்கு நேற்று இரவு வந்திறங்கிய சமயம் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

தமிழர் நிலை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது : சுஷ்மா

sushma.jpgஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார். ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை – கனிமொழி

kani-mholi.jpgஇலங் கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

தாய்லாந்து பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் – 11 பேர் பலி; 12 பேர் காயம்

10thai-mos.jpgதாய் லாந்து பள்ளிவாசலில் சென்ற திங்கட்கிழமை இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசல் தொழுகை நடாத்தும் இமாமும் இதில் பலியானார். மாலை நேரத்தொழுகையில் ஈடுபட்ட வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்கள். இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இறை வணக்கத்திலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். பள்ளிவாசலின் முன்புறமாக சிலரும் பின்புறமாக சிலரும் நுழைந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர். இவ்வேளை சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலினுள் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுவாகும். மலேசியாவை அண்மித்துள்ள தாய்லாந்துப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாய்லாந்தில் முகாம்களில் சுய அதிகாரம் கோரிப் போராடுகின்றனர்.

இதுவரை இப்போரில் மூவாயிரத்து எழுநூறு பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற திங்கட்கிழமை வீதியோரக் குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். இதனால் ஆந்திர மடைந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்தது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந் தன. இதன் எதிரொலியாக இப்பள்ளிவாசல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தோகிக்கப்படுகின்றது.

இதுவரை தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாமென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்து. முஸ்லிம்கள் எவ்வாறாயினும் பள்ளிவாசலு க்குள் தாக்குதல் நடாத்தமாட்டார்கள்.

எனவே, இது தாய்லாந்து இராணுவ வீரர்களின் வேலை தான் என நம்பச் செய்யும் வகையில் இப்பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்திருந்தாலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே செய்துள்ளனர் என இராணுவ அதிகாரி கூறினார். தாய் லாந்தில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.
 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டமைச்சர் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்தின் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸெய்யித் அல் நஹியான் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருதை தரும் அல் நஹியான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ள அல் நஹியான், மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

அகாஷி வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசி நேற்று காலை வவுனியா மெனிக் பாமிற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அவர் கேட்டறிந்ததோடு அரச அதிகாரிகளுடனும் பேச்சு நடத்திய தாக வவுனியா மாவட்டச் செயலகம் கூறியது.

அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி. உயர்படை அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ஸ் மற்றும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் ஜப்பானிய தூதுவருடன் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட ஜப்பானிய விசேட தூதுவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் தொடர்பில் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறின. ஜப்பானிய தூதுவர் இன்று (10) வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த இருதரப்பு உறவுகள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், ஜப்பானினூடாக வழங்கப்படவுள்ள உதவிகள் என்பன குறித்து பேச்சு நடத்த உள்ளார்.நாளை (11) அவர் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து யசூசி அகாசி நாடு திரும்பவுள்ளார். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி 18வது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.