தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர், இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளி, ஒலிபரப்பும் உரிமையை அரச ஊடகங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை அரச ஊடகங்கள் ஒளி, ஒலிபரப்புச் செய்யும்.
இலங்கை கிரிக்கட் அணியினர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்தங்களை ரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
வட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி, தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.
அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால், நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.
வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
இத்தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம். யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் 7250 ரூபாவும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கு 3750 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
யாழ். மாநகர சபைக்கு முதல்வர், பிரதி முதல்வர், தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளடங்கலாக 23 பேரும் வவுனியா நகர சபைக்கு 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்றும் தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் மொஹமட் நசீத் நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணி இத்தொடரின் லீக் போட்டிகள் மற்றும் சுப்பர்-8சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டிய நிலையில் இன்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் சுற்றுக்களில் தடுமாறியபோதும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியை இலக்கு வைத்து இன்று பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நாளை லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.
பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.
இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.
30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.
பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.
இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.
._._._._._.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்
எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!
எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.
தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.
கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.
இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.
எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.
இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
யாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறிகள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட்டார்.
தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென்றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.
உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படைவீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவையான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.