எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஏ-9 வீதியூடாக அடுத்த வாரம் முதல் சொகுசு பஸ் சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான கஷ்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே இந்த சொகுசு பஸ் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 சொகுசு பஸ் வண்டிகள் இச்சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன் காலப்போக்கில் கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த சொகுசு பஸ் சேவையின் முதல் பயணம் அடுத்த வாரம் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் பங்கேற்பார் – இலங்கை அணியின் வைத்தியர் நம்பிக்கை

muralitharan-sri-lankas.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பங்கேற்கவுள்ளதாக அணியின் வைத்திய அதிகாரியான டேவிட் யங் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் விளையாடுவதற்குரிய போதிய உடற்தகுதியைக் கொண்டிருப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியுமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளிதரன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் உதவித் தலைவராக முரளிதரன் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடும் முதலாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண பிரதம செயலகம் மாங்குளம் நகரில் அமையும் – ஆளுநர் சந்திரசிறி

chandrasiri.jpgவடக்கு மாகாணசபையின் பிரதம செயலக வளாகம் மாங்குளம் நகரில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண மக்கள் இலகுவாக தங்கள் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் வாழும் இடத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.

திருகோணமலை, வரோதய நகரில் தற்போது அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஆளுநர் , மாகாண அமைச்சர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். இந்நிகழ்வு பிரதம செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆளுநரின் செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி அறிமுகவுரையை நிகழ்த்தினார். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபைக்கான பிரதம செயலகம் திருகோணமலை வரோதய நகரில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் முற்றாக விடுவிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகத்தை மாங்குளம் நகரில் அமைப்பதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கியமான பணியாக “வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டமும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி, புனர்வாழ்வு அளிக்கும் பணியும் எம்முன்னே உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் பணியாற்றிய நிறைய அனுபவம் பெற்ற புதிய ஆளுநரின் தலைமையில் இப்பணி முன்னெடுக்கப்படும் என்று ஆளுநரின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி தெரிவித்தார்.

வன்னியில் 80% பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை; மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும்: த.தே.கூட்டமைப்பு

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் தாமதமடைவது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீள்க்குடியேற்றுவதை தாமதிக்கச் செய்யும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்தை பிற்போடுவதற்கான சாட்டாக கண்ணிவெடி அகற்றும் விடயம் அமையுமென அண்மையில் இந்திய அரசாங்கத்துடனான தமது சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

80 வீதமான பகுதிகள் கண்ணிவெடிகளற்றவையாக உள்ளன. அதனால் வன்னி யுத்தவலயப் பகுதிகளில் அனேகமான இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவை அனுப்பி வைக்குமாறு கொழும்பு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவத்திலிருந்து 500 பேர் கொண்ட கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இலங்கைக்கு இந்தியா அனுப்புமென கடந்த புதன்கிழமை கூட்டுப்படைத தலைமை அதிகாரி சரத் பொன்சேகா கூறியிருந்தார். இலங்கையில் ஏற்கனவே இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்ளனர். சர்வார்த்தா கொரிகோன் ஆகிய இந்தக் குழுக்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை உள்ளடக்கியதாகும். மன்னார் மாவட்டத்தமில் அவர்க்ள பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.

இலங்கைக்கு கடன் வழங்கும் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி தொடர்பாக நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இறுதிச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த விடயத்தில் “சர்வதேச சமூகத்தின் சகல அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நாணய நிதியப் பெண் பேச்சாளர் கரோலின் அட்கின்சன் கூறியுள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது. வடக்கில் செலவிடப்படும் நிதியானது இந்த மக்களை சிறையில் வைத்திருப்போருக்காக செலவிடப்படுவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நாணய நிதியத்தின் பதில் என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதிகாரிகளுடன் சிறப்பான முறையில் கலந்துரையாடல்களை நாணய நிதியம் மேற்கொள்வதாக அட்கின்சன் பதிலளித்தார். ஆனால், எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிக்கைகளை எடுத்திருந்தனர். இலங்கையின் விண்ணப்பமானது முன்னகர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகமானது ஊடகங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றது. ஜூலை 13 இல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்பக்க செய்தியாகவும் மறுநாள் ஆசிரியர் தலையங்கமாகவும் இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான 1.9 பில்லியன் கடனுக்கு இப்போது சாத்தியம் குறைவாகவே காணப்படுவதை இந்தப் பத்திரிகையின் செய்தியும் ஆசிரியர் தலையங்கமும் சுட்டி நிற்கின்றன.

அடிக்குறிப்பு: ஐ.நா. பொதுச் சபை ஆவணத்தில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விமர்சனம் மற்றும் புவியியல் ரீதியான சமநிலை என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. நாணய நிதியத்தின் நிலுவையாக இருக்கும் கடன் விண்ணப்பங்கள் தொடர்பான கேள்விகளை தடைசெய்தல் தொடர்பாகவும் கேள்வியெழுப்பப்பட்டது. உதாரணமாக இலங்கைக்கான கடன் வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர நேரடியான பதில் கிடைக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

பாக்கு நீரிணை மீது பாலம் குறித்து மீண்டும் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணையூடாக பாலமொன்றை நிர்மாணிக்கும் யோசனை குறித்து கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் ஆராயப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறியுள்ளார்.

இந்தப் பாலமானது இலங்கையானது பிராந்தியத்தில் தனது அடையாளத்துவத்தை மீளப்பெறவும் கண்டத்தில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் உதவியாக அமையுமென்றும் அவர் கூறியுள்ளார். மணல்மேடுகளை உள்ளடக்கியதாக தற்போது இருந்து வரும் ஆதாம் பாலத்தின் மீது இந்தப் பாலம் அமைவது இரு நாடுகளுக்குமிடையில் கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவை ஏற்படுத்தும் விடயமாக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் தரைவழி தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டால் பயணத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதாக அமையுமென்று கைத்தொழில் நிர்மாண சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அமால் குமாரகே கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலத்தை நிர்மாணிக்க குறைந்தது 10 வருடங்களாவது எடுக்குமென்று தெரிவித்த குமாரகே இதனை நீண்டகால திட்டமாக கருதி செயற்படவேண்டுமென்று குறிப்பிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பில் தெற்காசிய போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்றுகூடவுள்ளனர். அச்சந்திப்பின்போது இலங்கை இந்திய பாலம் அமைக்கும் விடயம் ஆராயப்படுவது நிகழ்ச்சிநிரலில் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த யோசனையின் ஆரம்பகட்டத்தில் வீதி, பாலம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இப்போது புகையிரதப்பாதை அமைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கப்படுகிறது.தூரத்தைக் கவனத்தில் கொண்டால் உபகண்டத்தை இலங்கையுடன் போக்குவரத்திற்கு இணைப்பதில் புகையிரதப்பாதை சிறந்த விடயமாக காணப்படுகிறது. குறுகியகால அடிப்படையில் இரு நாடுகளும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் அதிவேகப்படகு சேவைகளை மேற்கொள்ளமுடியுமென்றும் குமாரகே கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு கோரி போராட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினர் இம்மாதம் முதலாம் தேதி முதல் மட்டக்களப்பு நகரில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்தப் போராட்டத்தில் இன்றுடன் 19 வது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த 4 வருடங்களாக தங்களைப் போல் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் இது வரை நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டும் இப்பட்டதாரிகள், தங்களுக்கு வேலை வாயப்பு கிடைக்கும் வரை இப்போராட்டததை தொடர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான குமாரசாமி ஜெயராஜா எதிர் வரும் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சாதகமான முடிவொன்றை தாம் எதிர் பார்ப்பதாகவும் கூறுகின்றார்.

கிராண்ட்பாஸில் சூட்டுக்காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கியால் சுடப் பட்டு இறந்தவர்கள் இருவரின் சடலங்களை நேற்றுக் காலை (18) பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் நேற்றுக் காலை 7.30 அளவில் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

22 வயதான ஹில்ஹான், 51 வயதான மொஹமட் மர்சூக் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பால்மா பக்கட்டுக்களின் விலைகள் – ஒரு கிலோ-ரூ. 37, 400 கிராம்-ரூ. 15 குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் நாளை முதல் குறைக்கப்படுமென நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதன்படி, ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 637 ரூபாவுக்கு விற்ற ஒரு கிலோ பால்மா பக்கட்டின் விலை 600 ரூபாவாகவும் 260 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பக்கட் டின் விலை 245 ரூபாவாகவும் விற்கப்படும். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மா நாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை நேற்று அறிவித்தார்.

வடக்கின் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் 40 லட்சம் ஸ்டேர்லின் பவுண் உதவி : உயர் ஸ்தானிகர்

வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டேர்லிங் பவுண் உதவியை வழங்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ் தெரிவித்தார்.

“கிழக்கின் பாதுகாப்பு நிலைமை தற்போது நல்ல நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. சோதனைச் சாவடிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் சுமுகமாக ஈடுபடக் கூடிய சூழ்நிலை காணப்படுவதுடன் மக்கள் மத்தியல் ஒரு நம்பிக்கையும் காணப்படுகின்றது” என தனது கிழக்கு மாகாண விஜயம் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும், “நாட்டில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்பங்களுக்கு உள்ளாதல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் அரசு தொடர்பான நம்பிக்கை, அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்கும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன இருப்பதான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது தொடர்பாக ஜனாதிபதி அவ்வப்போது பேசி வருவதை நான் கௌரவிக்கின்றேன்.

பயங்கரவாதம், மோதல் நிலைமை தற்போது முற்றுப் பெற்றுள்ள நிலையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமல்ல பிரித்தானிய முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.