எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எலிக்காய்ச்சல் தடுப்பு பக்ரீறியாவை வழங்க கியூபா முன்வருகை

இலங்கையில் டெங்கு நோய் தடுப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை வழங்க உடன்பட்டிருப்பது போல், எலிக் காய்ச்சல் தடுப்புக்கான பக்ரீறியா ஒன்றை வழங்கவும் கியூபா முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கையிலுள்ள கியூபா தூதுவர் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே கியூபா இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இதுவரை எலிக் காய்ச்சலினால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் வரை அக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களென இனங் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், டெங்கு ஒழிப்புக்கு இலங்கையில் பி.ரி.ஐ. பக்ரீறியாக்களை பயன்படுத்துவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென அண்மையில் இலங்கை வந்த கியூபா நாட்டு நிபுணர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், நாளை புதன்கிழமை முதல் அவர்கள் கண்டி செல்லவிருப்பதாகவும் வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்ற போதிலும், முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், பரிசோதனைகளின் இறுதியில் கியூப நாட்டு நிபுணர்களால் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரமே இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை பயன்படுத்துவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று கூறிய வன்னிநாயக்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கினால் 208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை – விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :- இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர்.

ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் வெலிஓயாவில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil-raja.jpgவெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் பூர்த்தியடையுமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கிணங்க கல்யாணிபுர, மொரவேவ, கஜபாபுர கிராமங்களிலுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர். இந்தப் பகுதிக்கான வீதிக்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பதவியா பிரதேச சபைக்கு 5 கோடி ரூபா வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இந்தக் கிராமங்களிலுள்ள வீதிகள் கமநெகும திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

வெலிஓயாப் பகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் , நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படும்.  மீள்குடியேற்றம் தொடர்பாக வெலிஓயாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விபரங்களை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு முழுமையான ஆதரவை இராணுவத்தின் பொறியியல் பிரிவு வழங்கியுள்ளது. கனகபுர, கஜபாபுர, அதாவெ துணுவௌ கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது. அதாவெதுணுவௌ? நெடுங்கேணி வீதியை நிர்மாணித்துத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.

“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.

“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர்.  இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.

அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு

jaffna1.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டதாக தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடமொன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரெஜினோல்ட் குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை அளித்து வருவதுடன் தேசிய தகைமையுடைய சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.

நேற்றைய முன்தின நிகழ்வில் தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களில் திறமை காட்டிய 100 பேர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானில் அஞ்சலிக் கூட்டம் நடத்த எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

இரானில் கடந்த மாதம் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பலியானவர்களுக்கான நினைவு நிகழ்வை எதிர்கட்சியினர் நடத்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களான மிர் ஹுசைன் முசவி மற்றும் மெஹ்டி கரூபி ஆகியோரிடமிருந்து வந்த வேண்டுகோள், தேவையான சட்ட திட்டங்களை பூர்த்தி செய்யவில்லை என்று, உள்துறை அமைச்சகம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த நினைவு நிகழ்ச்சியின் போது உரையேதும் நிகழ்த்தப்பட மாட்டாது என்று தோல்வியடைந்துள்ள வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தேர்தலையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமை மூடும்படி நாட்டின் அதியுயர் மதத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற அனுமதி – ஒரு குழந்தை சட்டத்தில் மாற்றம்

chinaflag.jpgசீனப் பிரஜை ஒருவருக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது,  என்ற சட்டத்தில் சீன அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி இரண்டாவது குழந்தை பெற்று கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. தற்போது அங்கு 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு, “ஒரு குழந்தை’ திட்டத்தை சீன அரசு சட்டமாக்கியது. தவறி போய் இரண்டாவது குழந்தை உருவானால் கருச்சிதைவு செய்யும் படி பெண்கள் வற்புறுத்தப்பட்டனர்.சீனாவின் இந்த கடும் சட்டம் நல்ல பலன் கொடுத்தது. இதன் விளைவாக தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதே நிலை நீடித்தால் சீனாவில் ஓய்வூதியம் பெருகின்றவர்களின்; கூட்டமே அதிகரிக்கும் என்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்றும் கருதியே  சீன அரசு தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்துள்ளது. சீனாவின் வர்த்தக பகுதியான ஷாங்காயில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 21 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 2020ம் ஆண்டில் வயதானோர் எண்ணிக்கை 34 சதவீதத்துக்கும் அதிகமாகும்,  என கணக்கிடப்பட்டுள்ளது.

யாழ். நலன்புரி நிலையம் – 215 முதியவர்கள் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு

யாழ்.  குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

இதேவேளை, இந்த நலன்புரி நிலையங்களுக்குள் குடும்ப உறவினர்களை பிரிந்து வாழும் 245 நபர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளினாலேயே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரின் யாழ். பணிமனையோடு தொடர்புகொண்டு நலன்புரி நிலையங் களில் உள்ள தமது முதிய உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நலன்புரி நிலையங்களுக்குள் உறவினர்களை பிரிந்து வாழ்பவர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளையும் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் 245 பேரை ஒன்று சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர் களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு : காஷ்மீர் முதல்வர் ராஜினாமா

omar-abdullah.jpgதன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

2006ஆம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல், அவர்களைப் பொலிஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக்கிடும் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பேசுகையில்,

“இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இவரது பேச்சு சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, “இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம்.

நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.

நிரபராதி என்று நிரூபிக்கும் வரை பதவி வேண்டாம்

நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு வெளியேற முற்பட்டார்.

அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை எவ்வளவோ தடுத்தும் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஒமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் ஒப்படைத்தார். ராஜினாமாவை ஏற்பதாக வோராவும் அறிவித்துவிட்டார்.

இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.  இப்போது உமருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.

உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்ற வேண்டும்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் தெரிவிப்பு

us_ass_sec.pngமோதல் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சாத்தியமான அளவு விரைவில் மீளக் குடியேற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். இவ் விடயம் தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கரிசனை காட்டுகின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடிவரவு தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் எரிக் ஷ்வர்ட்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை வெகுவிரைவில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்முடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் குறிப்பிடத்தக்க அளவு மக்களை மீள்குடியேற்றுவதாகவும் அவர்கள் எம்மிடம் உறுதியளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.