பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.
வரவு – செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார். யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.
அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.
பாக். ஜனாதிபதி விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.